சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சரியான நிரந்தரத் தீர்வு தமிழீழம்தான். எனவே தமிழீழம் அமைவது குறித்து ஐ.நா.சபை சார்பில் பொது வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய ‘பிரபாகரன் – தமிழர் எழுச்சியின் வடிவம்’ நூல் வெளியீட்டு விழா நேற்றைய நாள் சென்னை தி.நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, வைகோ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், “இப்போது சிறிலங்கா அரசு சிங்களக்குடியேற்றம் விரைவாக மேற்கொள்ளுகிறது. அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஈழத்தமிழர்களைக் கொன்று விட்டதாக சிறிலங்கா அரசு கருதலாம். ஆனால் ஈழத்தமிழர்கள் பின்னால் ஏழு கோடி தமிழர்கள் இருக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசே ஆயுதங்களை வழங்கியது. இந்த வஞ்சக சூழ்ச்சியால்த்தான் விடுதலைப்புலிகள் போரில் தோற்றனர்.
சிறிலங்காப் பிரச்னைக்கு தமிழீழம் ஒன்றுதான் தீர்வாக அமையும்.. ஐ.நா.சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படி பொது வாக்கெடுப்பு எடுத்து தமிழீழம் அமைக்காவிட்டால் மீண்டும் விடுதலைப்புலிகள் ஆயுதம் தாங்கிப் போராடுவார்கள்.
.
பொது வாக்கெடுப்பா, ஆயுதமா என்பதை வரலாறே தீர்மானிக்க முடியும். ஆயுதம் தாங்கிப் போராடுவதைத் தவறு என்று யாரும் சொல்ல முடியாது. தவறு என்றால் எல்லா நாடுகளும் தங்கள் ஆயுதங்களை பசிபிக் கடலில்தான் கொட்ட வேண்டும். எந்த நாடாவது அப்படிச் செய்ய முன் வருமா?
பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஆயுதம் வாங்குவதற்குத்தான் எல்லா நாடுகளும் நிதி அதிகம் ஒதுக்குதின்றன என்பதை மறந்து விடக் கூடாது. எனவே ஆயுதம் எடுப்பதில் தவறு இல்லை.” என்றார்.
0 Responses to சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசே ஆயுதங்களை வழங்கியது: வைகோ