அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை ஐரோப்பிய நாடுகள் ஒரு வருட காலத்துக்கு இடை நிறுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்து இந்த முடிவைகளை மேற்கு அரசுகள் எடுத்துள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் 2013 மார்ச் மாதத்தில் சபையில் முன்வைக்கப்பட உள்ள அறிக்கையைத் தொடர்ந்தே இனி இந்த விடயத்தில் அறுதியான தீர்மானத்தை எடுப்பது என்றும் அவை தீர்மானித்துள்ளன. இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து இலங்கையர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதை மேற்கு நாடுகள் குறைத்துக் கொண்டன; அல்லது நிறுத்தி விட்டன.
மோதல்கள் முடிவுக்கு வந்ததால் வாழ்வதற்கு, குறிப்பாகத் தமிழர்கள் வாழ்வதற்குப் பாதுகாப்பான நாடு என்ற முடிவுக்கு மேற்கு அரசுகள் பலவும் வந்திருந்தன. அதனடிப்படையில் ஏற்கனவே அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பலரையும் அவை திருப்பி அனுப்ப ஆரம்பித்திருந்தன. பிரிட்டன் நாடு இந்த விடயத்தில் தீவிரமாகச் செயற்பட்டு நூற்றுக்கணக்கானவர்களைத் திருப்பி அனுப்பியது. அதேபோன்று சுவிஸ் அரசும் பலரைத் திருப்பி அனுப்பியதுடன் மேலும் பல நூற்றுக்கணக்கானவர்களைத் திருப்பி அனுப்பவும் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.
சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இந்தக் நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்தபோதும் மேற்கு அரசுகள் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களைத் திருப்பி அனுப்புவதில் குறியாக இருந்தன. ஆனால், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அகதிகளைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை ஒரு வருட காலத்துக்கு ஒத்தி வைக்க சுவிஸ் அரசு தீர்மானித்துள்ளது என்று அரசியல் விவகாரப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “சுவிஸ் அரசின் கொள்கையைப் பின்பற்றுவதற்கு ஐரோப்பாவின் வேறு பல அரசுகளும் தீர்மானித்துள்ளன என்று தெரிகிறது. எனவே அகதிகளைத் திருப்பி அனுப்பும் திட்டம் ஒரு வருட காலத்துக்கு செயற்படுத்தப்படாது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை (நவநீதம் பிள்ளை) யின் அறிக்கை அடுத்த ஆண்டு முன்வைக்கப்பட்டதன் பின்னரே இது தொடர்பில் இனி தீர்க்கமான முடிவு எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளின் திடீர் மாற்றம்: ஈழத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள்!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
14 April 2012
0 Responses to ஐரோப்பிய நாடுகளின் திடீர் மாற்றம்: ஈழத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள்!