இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையை டில்லியிலுள்ள “பிராமண’ ஆட்சியாளர்கள் பலமிழக்கச் செய்துள்ளதால் அப்பிரேரணை நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கை இல்லையென இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் தாளத்திற்கே ஆட்டம் போடுவதாகவும் அம் முன்னணி குற்றம் சாட்டியது. இது தொடர்பாக இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவில் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் மக்களும் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளனர். ஆனால், டில்லி ஆட்சியாளர்களில் உள்ள “பிராமணர்’ கூட்டம் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவே செயற்படுகிறது.
எனவேதான் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையை பலமிழக்கச் செய்துள்ளனர். நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பயன்படுத்தப்பட வேண்டுமானால் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலை பெற வேண்டும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் இது அமுல்படுத்தப்படுமென்ற நம்பிக்கையை வைக்க முடியாது.
இந்தியாவும் அமெரிக்காவும் தமக்குத் தேவையானதை நிறைவேற்றிக் கொள்வதற்கான நாடகத்தை அரங்கேற்றி முடித்துள்ளன.
இந்தியா தமிழ் மக்களுக்கு செய்த துரோகம் காரணமாகவே இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதனையும் வழங்க மாட்டோம் என்ற பிடிவாதப் போக்கிற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை, அரசாங்கத்திலுள்ள சில கட்சிகள் இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் எதிராக மேற்கொள்ளும் எதிர்ப்புக்கள் வெறும் நாடகமாகும்.
வரி அதிகரிப்பு
வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையிலேயே அரசாங்கம் வரிகளை அதிகரித்து மக்கள் மீது சுமைகளை சுமத்தி நெருக்கடியில் தள்ளிவிட்டுள்ளது.அத்தோடு அரசாங்கம் டொலர்களை பதுக்கி வைத்து மக்களை நசுக்குகின்றது என்றார்.
0 Responses to தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் தாளத்திற்கே ஆட்டம்