இலங்கைத் தமிழர் நிலைமையை பார்வையிட செல்வதாக கூறப்படும் இந்திய எம்.பிக்களின் குழுவிலிருந்து அதிமுக வெளியேறிய நிலையில் திமுகவும் வெளியேறி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிப்பை திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் இன்று வெளியிட்டார்.
இந்திய அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு நாளை முதல் 6 நாள் பயணமாக இலங்கை செல்கிறது. இக்குழுவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமை வகிக்கிறார்.
இந்தக் குழுவில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை சேர்க்கப்படவில்லை. அதற்கான சரியான காரணத்தை மத்திய அரசு இதுவரை சொல்லவில்லை.
இந்த நிலையில், இலங்கை அரசைக் காப்பாற்றவே இந்திய எம்.பிக்கள் குழு செல்கிறது என்றும் இக்குழுவால் இலங்கைத் தமிழர்களுக்கு நலன் ஏதுமில்லை என்றும் கூறி அதிமுக குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
இதற்கு மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் போன்றோர் ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் தி.மு.க.வும் இலங்கை செல்லும் குழுவில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக திமுக மூத்த தலைவர்களுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தியிருந்தார். இக்கூட்டத்தில் ஏன் இலங்கைக்குப் போகனும்.. அதிமுகவும் போகலையே என்ற தொனியில் கருணாநிதி கூறியிருந்தார்.
இந்நிலையில் இலங்கை செல்லும் எம்.பிக்கள் குழுவில் திமுக இடம்பெறாது என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, எம்.பிக்கள் குழுவால் எந்தப் பயனும் இல்லை என்பதை கடந்த கால குழுக்களின் பயணம் வெளிப்படுத்தியிருக்கிறது. இதனால் தற்போதைய எம்.பிக்கள் குழுவின் பயணத்தில் திமுக இடம்பெறாது என்றார்.
0 Responses to எம்.பிக்கள் குழுவில் திமுக இடம்பெறாது கருணாநிதி அறிவிப்பு