மகிந்த ராஜபக்சவுடன் நீங்கள் கைகுலுக்கும் போது, ஒரு போர்க்குற்றவாளியுடன் தான் கைகுலுக்குகின்றீர்கள் என்பதை நான் இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன். இவ்வாறு உத்தியோகபூர்வ பயணமாக, இலங்கைக்கு செல்லவுள்ள பாலஸ்தீனிய அரசுத் தலைவர் முஹம்மது அப்பாஸ் அவர்களுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
15-04-2012 ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு செல்லவுள்ள பாலஸ்தீனிய அதிபர் முஹம்மது அப்பாஸ் அவர்கள், இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட இலங்கையின் அரச தலைவர்கள் பலரையும் சந்திக்க இருப்பதோடு, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்யவுள்ளார்.
இந்நிலையில் பாலஸ்தீனிய அதிபர் முஹம்மது அப்பாஸ் அவர்களுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார் என பிரதமர் செயலகத்தில் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் ஒரு நாட்டின் தலைவராக, உங்களுக்குள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தி, இலங்கை அரசினால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றியும், தமிழ்ப் பிரதேசங்களில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களைப் பற்றியும் நீங்கள், ஒரு நாட்டின் தலைவராக உங்களுக்குள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை கூறல் வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தங்களின் இலங்கைக்கான பயணம், இலங்கை அரசின் மேற்பார்வையில் இடம்பெறுவதனால், நீங்கள் தமிழ் மக்களின் அவலங்களையும், துன்பங்களையும் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருக்காது என குறிப்பிட்டுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தமிழ் மக்களை கொன்று குவித்த அதே அரச படைகளின் அணிவகுப்பு மரியாதையைத் தான், நீங்கள் காணப் போகின்றீர்கள் என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
1958ஆம் ஆண்டு முதல் தமிழர்கள் பல தடவைகள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டு வந்துள்ளதை குறித்து குறிப்பிட்டுள்ளதுடன், 2009 ஆம் ஆண்டு நிகழ்ந்த பாரிய அளவிலான கொலைகளைத் தொடர்ந்து, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள், நிபுணர் குழுவொன்றை அமைத்ததனையும், பாலஸ்தீன அதிபருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ. நா நிபுணர் குழுவின் அறிக்கையில், 2009 ஆண்டில் ஐந்து மாதங்களில் மட்டும் 40,000 தமிழ் மக்கள் இலங்கையில் படுகொலை செயப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தினால், பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட பிரதேசங்கள் மீது, வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட பரவலான தாக்குதல்களினால் இப்பாரிய அளவிலான இறப்புக்கள் நிகழ்ந்தன எனவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அக்கடிதத்தில்..
இலங்கை அரசாங்கம் தமிழகளுக்கு உணவு, மருந்து என்பன கிடைக்காமல் தடை செய்தது. அதனால் பலர் பட்டினியால் இறந்தனர். இன்னும் பலர் இரத்தம் வெளியேறியதனாலும் இறந்தனர்.
ஐ நா. நிபுணர் குழுவின் அறிக்கையின் படி, இலங்கையில் இடம்பெற்ற கொலைகளும் குற்றங்களும் போர்குற்றங்களுக்கும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களுக்கும் உரிய தன்மை கொண்டவையாகும்.
ஐ. நா. மனித உரிமை பேரவையில் அண்மையில் இப்பாரிய கொலைகளைப் பற்றி ஆராய்ந்து, இந்த அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் இக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிவதற்காக ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
நிபுணர்களின் தனிப்பட்ட கருத்துப்படி இக்குற்றங்கள் இனப் படுகொலைக்குரிய தன்மைகளைக் இவைகள் கொண்டுள்ளன.
இந்தப் படுகொலைகளை விட, தமிழர்கள் ஆயிரக் கணக்கில் காணாமல் போயுள்ளனர். பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பெருந் தொகையான் தமிழர்கள் பலகாலமாக எவ்வித விசாரணையும் இல்லாமல் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்.
அத்துடன், கடத்தல்கள் தொடர்கின்றன. தமிழர்கள், அவர்கள் தமிழர்கள் என்ற ஒரு காரணத்தினால் மட்டும் இவ்வாறு இனம் காணப் பட்டு இத்தகைய கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படு கின்றார்கள்.
இலங்கையின் ஆயுதப் படையில் உள்ளவர்கள் ஏறத்தாழ அனைவரும் சிங்கள இனத்தவர்கள். அதே வேளையில், கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுபவர்கள் அனைவரும் தமிழ் இனத்தவர்கள்.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பலஸ்தீன அதிபர் முஹம்மது அப்பாஸ் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என பிரதமர் செயலகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்றவாளியுடன் கைகுலுக்க போகின்றீர்கள் - வி.உருத்திரகுமாரன்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
14 April 2012
0 Responses to போர்க்குற்றவாளியுடன் கைகுலுக்க போகின்றீர்கள் - வி.உருத்திரகுமாரன்