இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அந்நாட்டுக்கு நடிகர், நடிகைகள் செல்லக்கூடாது என திரையுலகம் தடைவிதித்தது. ஆனால் இதை மீறி 'ரெடி' என்ற இந்தி படப்பிடிப்பில் பங்கேற்க இலங்கை சென்ற அசினை புதிய தமிழ் படங்களில் நடிக்க வைக்கக்கூடாது என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அந்நாட்டுக்கு நடிகர், நடிகைகள் செல்லக்கூடாது என திரையுலகம் தடைவிதித்தது. இதனால் தமிழ் நடிகர், நடிகைகள் யாரும் அங்கு செல்லவில்லை. படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன.
ஆனால் இதை மீறி 'ரெடி' என்ற இந்தி படப்பிடிப்பில் பங்கேற்க அசின் இலங்கை சென்றார். இது சர்ச்சையை கிளப்பியது. அசினுக்கு நடிகர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. தமிழ் படங்களில் அவரை நடிக்க வைக்கக்கூடாது என்றும் வற்புறுத்தப்பட்டது.
இந்த நிலையில் சங்கர் இயக்கப் போகும் புதுப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க அசின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கையில் ராஜபக்ச அரசு ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது. அதன் மூன்றாம் ஆண்டு துக்க தினத்தை உலகத் தமிழர்கள் இப்போது கடைப்பிடிக்கின்றனர். ராஜபக்ச மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழர் உணர்வுகளுக்கு எதிராக நடந்து கொண்ட அசினை தனது புதுப்படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் சங்கர் முடிவெடுத்திருப்பதாக வெளியான தகவல் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திரையுலகினரின் தடையை மீறி அசின் இலங்கை சென்றது மட்டுமின்றி ராஜபக்சவுடன் விருந்தும் சாப்பிட்டார்.
ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றவர்களோடு கைகுலுக்கி விட்டு வந்த அசினை படத்தில் சங்கர் நடிக்க வைக்கக்கூடாது. மீறி நடிக்க வைத்தால் சங்கர் வீட்டு முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜபக்சவுடன் விருந்து சாப்பிட்ட அசினை புதுப்படத்தில் நடிக்க வைக்கக்கூடாது! இந்து மக்கள் கட்சி
பதிந்தவர்:
தம்பியன்
19 May 2012
0 Responses to ராஜபக்சவுடன் விருந்து சாப்பிட்ட அசினை புதுப்படத்தில் நடிக்க வைக்கக்கூடாது! இந்து மக்கள் கட்சி