முள்ளிவாய்க்கால் மண்ணின் குருதிவெளி தந்த வடுக்களோடு, மூன்றாம் ஆண்டின் நினைவுநிகழ்வும் மீள்எழுச்சி நாளும் இன்று யேர்மனியின் டுசுல்டோர்ப் நகரில் நடைபெற்றது. நகரின் பிரதான தொடரூந்து நிலையத்தின் முன்பாக 15:30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்புப் பேரணி, 16:30 மணியளவில் டுசுல்டோர்ப் நகரின் பாராளுமன்றம் முன்பாக நினைவு நிகழ்விற்காக அணிதிரண்டது.
எம் சொந்தங்களிற்கு வணக்கம் செலுத்த திரண்டிருந்த பல்லாயிரக் கணக்கிலான யேர்மனி வாழ் தாயக மக்கள் குளிர் மற்றும் அவ்வப்போது மழை பெய்திருந்த போதும் மக்கள் உணர்வெழுச்சியுடன் இறுதிவரை உறுதி தளராமல் கண்டன பேரணியில் கலந்திருந்தனர்.
இப் பேரணி நகர்ந்து சென்ற பாதையானது மிகவும்நெரிசல் நிறைந்த பலபேர் வந்து செல்லும் இடமாக இருந்தமை எமது உள்ளக் குமுறல்களை அவர்களிடமும் வெளிப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
குறிப்பாக யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினர் பேரணியின் முன்னால் வாகனத்தில் சென்று கொண்டிருந்தவாறு டொச் மொழியில் ஏன் இந்த கண்டன ஆர்பாட்ட பேரணி எம்மால் நடத்தப் படுகின்றது என்பதனை ஒலிபெருக்கி மூலமாக தெரிவித்துக் கொண்டு வந்திருந்தனர்.
இந்த பேரணியில் இடம்பெற்றிருந்தவர்கள் சிறிலங்கா அரசின் போர்குற்றங்களை சித்தரிக்கும் பதாதைகளை தாங்கியவாறும் நகர்ந்து சென்றனர்.
டொச் மொழியில் தயாரிக்கப்பட்ட சிங்கள அரசின் போர்குற்றங்களை வெளிப்டுத்தும் விதமான பல்லாயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்தவர்களால் வழங்கப்பட்டது.
பேரணியில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்களால் ஈர்க்கப்பட்ட யேர்மனியர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டவர்களும் டுசெல்டோர்ப் பாராளுமன்ற முன்றலிற்கு வருகை தந்து எமது சொந்தங்ளின் நினைவு வணக்க நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். யேர்மனி வாழ் குர்திஸ் இன முக்கியஷ்தர்களும் கலந்து கொண்டனர்.
டுசெல்டோர்ப் பாராளுமன்றத்தின் முன்பாக மே-18 நினைவு வணக்க நிகழ்வு ஆரம்பமாகியது.
யேர்மனிய ஈழத்தமிழர் மக்கள் அவையினால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை சர்வதேச மனித உரிமை அமைப்பு பிரேமனை சேர்ந்த திரு விராஜ் மென்டிஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்.அதை தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடியினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அவர்கள் ஏற்றிவைத்திருந்தார். ஈகைச்சுடரினை பிரிகேடியர் தீபன் அவர்களின் சகோதரி திருமதி வேணி அவர்கள் ஏற்றிவைத்திருந்தார்.
கனத்த இதயங்களோடு மக்கள் அணிதிரண்ட வேளையில் வானம் சிறிது சிறிதாகத் தூறிக்கொண்டிருந்த போதும், மக்கள் எவரும் திடலை விட்டகலாது, விடுதலைக்காய் உயிர்நீத்த தமது உறவுகளிற்கு மலர், சுடர் வணக்கம் செலுத்தினர். பிற சமூகங்களைச் சேர்ந்த யேர்மனி வாழ் பிரமுகர்களது ( யேர்மன் இடதுசாரி கட்சி உறுப்பினர் திரு Frank Kemper , மற்றும் பல்லின சமூக இணக்கத்தின் பொறுப்பாளர் திரு Ümit Kosan அவர்களின் உரையினைத் தொடர்ந்து, பிரித்தானிய நாட்டின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் Dr. Andy Higgingbottom அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபங்களோடு சர்வதேச வல்லரசு நாடுகளின் தமிழ் மக்களின் மீதான இனப்படுகொலையின் பங்கு குறித்தும் அத்தோடு தமிழ் மக்கள் விடுதலைக்காய் ஆற்றவேண்டிய பணி குறித்தும் ஆழமாக உரையாற்றினார்.
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையின் சார்பில் நிந்துயா கனகேஸ்வரன் அவர்கள் டொச் மொழியில் தனது உரையில் "முள்ளிவாய்க்காலின் செய்தி" எனும் தலைப்பில் முள்ளிவாய்க்கால் நாட்களை ஏன் நாம் நினைவு கொள்ள வேண்டும் என்ற கேள்வியோடு கருத்துகளை முன்வைத்தார்
பல்லாயிரக் கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்ட இடம் என்பதால் மட்டும் அல்ல ,.
எந்த ஒரு தமிழனும் தமிழ் ஈழத்தில் சுதந்திரமாக வாழ நினைத்தானோ அவன் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டான் என்பதுக்காக மட்டும் அல்ல ,
உண்மையிலே ஈழத் தமிழர்கள் தமது விடுதலைக்கான போராட்டத்தில் தமது சுதந்திரத்துக்கான பயணத்தில் எந்த ஒரு பாரிய அழிவு ஏற்பட்டாலும் அவர்கள் தமது கொள்கையை சாக விட மாட்டார்கள் என்பதுக்கான சாட்சியே "முள்ளிவாய்க்கால்".
முள்ளிவாய்க்கால் எமது மக்கள் விடுதலை பெற வேண்டும் என்ற உறுதியை அடையாளப்படுத்துகின்றது . முள்ளிவாய்க்கால் எமக்கு சிங்கள இனவெறி அரசின் இராணுவ பலத்தை காட்டவில்லை ., மாறாக எமது மக்களின் அசைக்கமுடியாத தார்மீக நம்பிக்கையை அடையாளப்படுத்துகின்றது .
அவர்களின் சுதந்திரத்துக்கான கொள்கையை அங்கு தங்கள் உயிர்களை அதற்காக அர்ப்பணித்தவர்கள் வகுத்தார்கள் .உயிரோடு வாழும் நாம் அல்ல .
உயிரோடு வாழும் எமக்கு யேர்மனியில் , பிரான்சில் , பிரித்தானியாவில் அல்லது அமெரிக்காவில் இருந்து அந்த கொள்கையை மாற்றவோ அல்லது புதிதாக வகுக்கவோ அதிகாரம் அல்ல . முள்ளிவாய்க்காலில் அவர்கள் நினைத்திருந்தால் அனைவரும் உயிர் வாழ்ந்திருக்கலாம் , ஆனால் கொள்கை இறந்திருக்கும் அத்தோடு தமிழினம் அடியோடு அழிக்கப்பட்டிருக்கும்.ஆனால் அவர்கள் மாறாக தமது உயிர்களை கொடுத்து தமிழினத்தின் கொள்கையை வாழ வைத்தார்கள் . இது தான் எமக்கான முள்ளிவாய்க்காலின் செய்தி என அவர் கூறினார் .
தமிழ் பெண்கள் அமைப்பு யேர்மனி சார்பில் திருமது சுயா செந்தில் அவர்கள் தாயகத்தில் பெண்கள் மீது சிங்கள இனவெறி அரசு மேற்கொண்ட கொடூரமான சம்பவங்களை யேர்மன் மொழியில் விளக்கினார் .
தொடர்ந்து யேர்மனிய இளையோர்களது சிறப்புக் கவிதைகள், உரைகள், நாடகம் ஆகியன நடைபெற்றன.
மீள் எழுச்சியினை அடையாளப்படுத்தும் விதமாக ´´வாகை´´ என்ற பத்திரிகை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
சிறப்புரை ஆற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜெயானந்தமூர்த்தி அவர்கள் முள்ளிவாய்க்கால் எமக்கு முடிவல்ல, இடர்கள் தந்தபோதும்...,எம் இலட்சிய தாகம் தீராது எனும் கருத்தில் தமிழ் மக்கள் அனைவரும் தொடர்ந்தும் தமது விடுதலைப் போராட்டத்தில் முழுமையான பங்கு வகிக்க வேண்டும் அத்தோடு ஆழமான நம்பிக்கை கொள்ளவேண்டும் எனவும் , அத்தோடு எவ்வித வல்லரசு நாடுகளின் சதிக்குளும் வீழ்ந்துவிடாமல் எமது தலைவரின் ஆழமான சிந்தனையை பின்பற்றி தமிழீழம் மீளமைக்கும் வரை உறுதி தளராமல் போராடுவோம் என்று கூறி தனது உரையின் முடிவில் ´´ எழுகதிர்´´ என்ற இறுவட்டினையும் வெளியிட்டு வைத்தார்.
இறுதியாக; எவ்வேளையிலும் தமிழர்களின் அடையாளங்களையும், எமது தேசியத்தலைவரது வழிகாட்டலையும் விடுத்து ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்ற உறுதிமொழியோடு ´´ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்´´ என்ற தாரக மந்திரம் முழங்க நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.
தகவல்:
ஈழத்தமிழர் மக்கள் அவை யேர்மனி
--
Vereinsregister Nr. 31006 B
Bundesallee 160, 10715 Berlin
www.vetd.info | info@vetd.info
Tel: +49 (0) 30 60972472
Fax: +49(0) 30 843 150 33
யேர்மனி Düsseldorf நகரில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற "போர்க்குற்ற நாள் மே 18"
பதிந்தவர்:
தம்பியன்
19 May 2012
0 Responses to யேர்மனி Düsseldorf நகரில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற "போர்க்குற்ற நாள் மே 18"