Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சில் வாழும் தமிழ் குழந்தைகளின் உடல், உள ஆரோக்கியத்தை பேணும் வகையில் தமிழ்ச்சோலைகளின் தலைமைப்பணியகமும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்திய இல்லங்களுக்கிடையேயான மெய்வல்லுனர் போட்டி 2012 இன் இறுதிப் போட்டிகள் 06.05.2012 ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் சார்சல் மெய்வல்லுநர் விளையாட்டுத்திடலில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த வாரம் சனி, ஞாயிறு இருதினங்கள் வன்சனில் அமைந்துள்ள விளையாட்டுத்திடலில் ஆரம்பமாகிய இந்த விளையாட்டு நிகழ்வில் காலநிலை சீரற்ற நிலையிலும் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் , பெற்றோர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

06.05.2012 ஞாயிற்றுக்கிழமை 10.00 மணிக்கு பொதுச்சுடரேற்றலைத் தொடர்ந்து பிரெஞ்சு தேசத்தினதும், தமிழீழ நாட்டினதும் தேசியக்கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன.
ஈகைச்சுடர் ஏற்றலைத் தொடர்ந்து மாவீரர் திரு உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகக் கொடி, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புக் கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

விருந்தினர்களையும் பிரமுகர்களையும் மாணவர்களின் இன்னியம் வாத்திய அணியினர் அழைத்துவந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.
ஒலிம்பிக் சுடரேற்றலைத் தொடர்ந்து சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது. இம்முறை விசேடமாக மாணவ மாணவியரின் அணிவகுப்பு விருந்தினர்களுக்கான மரியாதையுடன் இறுதிப்போட்டிகள் ஆரம்பமாகின.

பிரதமவிருந்தினராக சார்சல் மாநகர முதல்வர் உயர்திரு.புரோன்சுவா அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக மாவீரர் அங்கையற்கண்ணியின் சகோதரர் அவர்கள் மற்றும் சவினி சூரோஸ் மாநகர உறுப்பினர் டேவிட் பாப்ர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பிரான்சில் நேற்று அதிபர் தேர்தல் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையிலும் எமது அழைப்பை மறுக்காமல் ஏற்று இவர்கள் வருகை தந்தமை மெச்சத்தக்க விடயம்.

இந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில், ராதா இல்லம், ஜெயந்தன் இல்லம், அங்கயர்க் கண்ணி இல்லம், மாலதி இல்லம், சாள்ஸ் இல்லம், சோதியா இல்லம் ஆகிய 6 இல்லங்கள் பங்குபற்றின.

இந்த இல்லங்களின் அலங்கரிப்பு நாங்கள் தமிழீழத் தாயகத்தில் நிற்பது போன்ற என்ற உணர்வை ஏற்படுத்தியதுடன் மாணவர்கள் மிகவும் உற்சாகமாக போட்டிகளில் கலந்து கொண்டதையும் காணமுடிந்தது.

அத்துடன் சங்கங்கள், அமைப்புக்களிடையிலான ஆண்கள் கயிறு இழுத்தல் போட்டிகளும் இடம்பெற்றன. இதன்போது மாணவர்களும் பார்வையாளர்களும் மிகவும் உற்சாகமாகக் கைகளைத் தட்டி ஆரவாரித்தனர்.

6 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் மாணவர்களின் தடை ஓட்டம் அனைவரையும் தாயகத்திற்கு அழைத்துச்சென்றது.

வயதடிப்படையில் ஓட்டம், உயரம் பாய்தல், கயிறடித்தல், அஞ்சலோட்டம் ஆகிய நிகழ்வுகளுடன் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பழைய மாணவர் ஓட்டம் என்பனவும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.

சீரற்ற குளிரான காலநிலை நிலவியபோதும், போட்டிகளில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றியதைக் காணக்கூடியதாக இருந்தது.

இப்போட்டியில் முதலாம் இடத்தை அங்கையற்கண்ணி இல்லமும் இரண்டாம் இடத்தை சோதியா இல்லமும் மூன்றாம் இடத்தை சார்ள்ஸ் இல்லமும் பெற்றுக்கொண்டன.

தொடர்ந்து பரிசில் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் வெற்றிக் கிண்ணங்களையும் பதக்கங்களையும் விருந்தினர்கள் மற்றும் பிரமுகர்கள் வழங்கிச் சிறப்பித்தனர்.

தொடர்ந்து சிறப்புரைகள் இடம்பெற்றன. சிறப்புரையை தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புக் பொறுப்பாளர் ப.பாலசுந்தரம் அவர்களும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் அவர்களும் ஆற்றியிருந்தனர்.

தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் தனது உரையில், இவ்வாறான விளையாட்டுப்போட்டிகள் மாணவர்களுக்கு மிகவும் இன்றியமையாதவை எனவும் வேறு வேறுபாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களை ஒன்றிணைப்பதுடன், வெற்றிதோல்விகளை விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை மாணவர்களிடையே வழர்ப்பதற்கு உதவுகின்றது எனவும் குறிப்பிட்ட அவர் சீரற்ற காலநிலை நிலவியபோதும் முகம் கோணாமல் ஒத்துழைப்புவழங்கிய பெற்றோரையும் பாராட்டினார்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப்பொறுப்பாளர் தனதுரையில், மாணவர்களுக்கு விளையாட்டுப்போட்டியின் அவசியம் பற்றிக்குறிப்பிட்டதுடன், பிரான்சில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படப்போவதாகவும் அது எமக்கு சாதகமாக அமையும் எனவும் வரும் முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நிகழ்வில் அனைவரும் ஒருமித்து குரல்கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கொடியிறக்கல் நிகழ்வைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் இரவு 8.30 மணியளவில் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன.

0 Responses to பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் இறுதிப் போட்டி 2012

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com