உண்ணாநோன்பு இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதி உட்பட நாட்டுப்பற்றாளர்களுடன், மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களையும் நினைவுகூர்ந்து நிகழ்வு 06.05.12 ஞாயிறு பிற்பகல் சூரிச் மாநகரில் வோல்க்ஹவுஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வு பொதுச்சுடரேற்றல், தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ச்சியாக நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் நடுகல் நாயகர்களுக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் கவி வணக்கம், எழுச்சியுரை, சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலுடன், எழுச்சி நடனங்களும் இடம்பெற்றன. குறிப்பாக, துர்காவ் மாநிலச் சிறார்களால் அளிக்கை செய்யப்பட்ட எழுச்சி நடனம் மிகவும் உணர்வு பூர்வமாக அமைந்திருந்ததுடன் பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்றமை குறிப்பிடத் தக்கது.
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய நாட்டுப் பற்றாளர்கள் மற்றும் நடுகல் நாயகர்களின் நினைவாக இந்த நிகழ்வு நடாத்தப்பட்ட போதிலும் பங்கு கொண்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையை அவதானிக்க முடிந்தது. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் புலம்பெயர்ந்த மண்ணிலிருந்தே முன்னெடுக்கப்பட வேண்டியுள்ள இன்றைய சூழலில் மக்களின் வருகை குறைவாக உள்ளமையானது எமக்காகத் தம்முயர்களை இழந்த உத்தமர்களின் தியாகங்களைக் கொச்சைப் படுத்துவதற்கு ஒப்பானது என நிகழ்வில் கலந்து கொண்டோர் கருத்துத் தெரிவித்தமை குறிப்பிடத் தக்கது.
சுவிசில் நடுகல் நாயகர்கள் மற்றும் அன்னை பூபதியின் 24வது ஆண்டும் நாட்டுப்பற்றாளர் நினைவுகூரலும் இடம்பெற்றது
பதிந்தவர்:
ஈழப்பிரியா
08 May 2012
0 Responses to சுவிசில் நடுகல் நாயகர்கள் மற்றும் அன்னை பூபதியின் 24வது ஆண்டும் நாட்டுப்பற்றாளர் நினைவுகூரலும் இடம்பெற்றது