ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மனித குல வரலாற்றில் கொடூரமான இனக்கொலைகளில் ஒன்றாக அண்மை காலத்தில் பேரழிவு அவலமாக ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்சே அரசு, உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவி உண்மைகளை மூடி மறைத்து வருகிறது.
2008-ம் ஆண்டின் இறுதிக்கட்டத்திலும், 2009-ம் ஆண்டு மே மூன்றாம் வாரம் வரையிலும், தமிழர்களுக்கு உணவு கிடைக்காமல் பட்டினியால் பல்லாயிரம் பேரைச் சாகடித்தது. காயங்களுக்கு மருந்து இன்றி எண்ணற்ற தமிழர்கள் மடிந்தனர்.
விடுதலைப்புலிகள், ஆதரவாளர்கள் என 4000-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து, பல்வேறு சிறைகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக அடைத்து வைத்து உள்ளனர். எந்த விசாரணையும் இன்றி, மூன்று ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்களுள் 234 பேர் நீதிமன்றத்தில் எங்களை நிறுத்தவேண்டும். அல்லது விடுவிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி, இன்று ஆறாவது நாளாக, காலவரைற்ற உண்ணா நிலை அறப்போர், நடத்துகின்றனர்.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள வெலிக்கடைச் சிறை, மகசின் சிறை, கொழும்பு மத்தியச் சிறை, கண்டி மாவட்டம் பூகம்பறை சிறை, காலி மாவட்டம் பூசா சிறை, வவுனியா மாவட்டச் சிறை, அநுராதாபுரம் மாவட்டச் சிறை, யாழ்ப்பாணம் மாவட்டச் சிறை ஆகிய சிறைகளில், 4000 பேர் விசாரணை இன்றி, அடைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.
உற்றார், உறவினரை இழந்து, உரிமைகள் இழந்து, சித்திரவதைகளுக்கு ஆளாகி, சிறைக் கொட்டடிகளில் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்களை, சிங்கள அரசு விடுவிக்க, ஐ.நா. மன்றமும், மனித உரிமை ஆணையமும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ் இனப்படுகொலையின் கூட்டுக்குற்றவாளியான காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசு, மேலும் மேலும் குற்றச்சாட்டுக்கும், பழிக்கும் ஆளாகாமல், தமிழர்களைச் சிறையில் இருந்து விடுவிக்க, இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாக, தமிழரசுக் கட்சியின் சார்பில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வரும், சிவஞானம் ஸ்ரீதரன் தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகளும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை தாயகத்தில் சந்தித்தனர்.
4 ஆயிரம் தமிழர்களை விடுவிக்க வேண்டும்: ஐ.நா. சபைக்கு வைகோ வேண்டுகோள்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
25 May 2012
0 Responses to 4 ஆயிரம் தமிழர்களை விடுவிக்க வேண்டும்: ஐ.நா. சபைக்கு வைகோ வேண்டுகோள்