Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் குறித்து ஆராய்ந்து முக்கியமானதொரு தீர்மானத்தை எடுக்கும் நோக்கில் வட்டமேசை மாநாடொன்றை இன்று புதுடில்லியில் அவசரமாக கூட்டுகின்றது இலங்கை வந்து சென்ற இந்திய நாடாளுமன்றக் குழு.

ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் அடுத்த கட்ட நகர்வுகள் அணுகு முறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தீர்க்கமானதொரு முடிவை எடுக்கும் முனைப்பில் நடைபெறும் இந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் பங்குபற்றும் எனத் தெரியவருகின்றது.

கொழும்பு வந்து சென்ற குழுவில் இடம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இலங்கை விஜயத்தில் அங்கம் வகிக்காத இதரக்கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களும் இந்த முக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு தமதுக்கருத்துக்களை முன்வைப்பர் என்று அறிய முடிகின்றது.

அதேவேளை, இலங்கையின் தற்போதைய நிலைவரங்களை எடுத்துரைத்து இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளித்த அறிக்கை தொடர்பிலும் அங்கு கருத்துப்பரிமாற்றல்கள் இடம்பெறும் என பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையில் கடந்த மாதம் 16 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியக் குழு, இலங்கையின் உயர்மட்ட அரசியல் பிரமுகர்களைச் சந்தித்து முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டது.

இதன்போது, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு,வடக்குகிழக்கில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தை அகற்றுதல், மலையக சமூகத்தின் பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், வடக்கு,கிழக்கு, மலையம்,தெற்கு ஆகிய பகுதிகளுக்கு நேரடியாகவே விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டறிந்த இந்தியக் குழு,மக்களுடனும் கலந்துரையாடி பிரச்சினைகளை கேட்டறிந்தது கொண்டது.

இதன் பின்னர், இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாடு திரும்பி இந்தியக்குழு, இலங்கை விஜயத்தின்போது கண்டகேட்டறிந்த விடயங்களை அறிக்கையாக வடிவமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவாராஜ் இந்த அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

அறிக்கை அமைக்கும் நடவடிக்கை பூர்த்தியான பின்னர் அந்த அறிக்கையை பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிடம் அவர் கையளித்தார். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்த சுஷ்மா அம்மையார் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணும் பரிந்துரைகளையும் முன்வைத்தார்.

இதில் குறிப்பாக, தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு,கிழக்கு பிரதேசங்களிலிருந்து இலங்கை அரசு தமது படைகளை வாபஸ் பெறவேண்டும். இந்தி அரசின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட 13 ஆவது அரசமைப்பை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்கு கொழும்பு அரசு தீர்வைக்காண வேண்டும்.

வடமாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும் . நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபாரிசுகள் அமுல்படுத்தப்பட வேண்டும் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அத்துடன் மேற்கூறப்பட்ட விடயங்களை இலங்கை அரசு விரைந்து செய்து முடிக்க இந்திய அரசு கொழும்புக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

அதேவேளை, இன்றைய மாநாட்டின்போது, ஈழத்தமிழர் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைக் காணுமாறு மத்திய அரசு கொழும்பை வலியுறுத்த வேண்டும் என ஏகமனதாக முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதுமட்டுமின்றி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையவேண்டும் என்பது குறித்து ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வந்த இந்தியக் குழு அவசரமாகக் கூட்டும் முக்கிய வட்டமேசை மாநாட்டில் பங்குபற்றுமாறு தமிழக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை விஜயத்தை புறக்கணித்த அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளுமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இது இவ்வாறிருக்க, இந்த வட்டமேசை மாநாடு முடிவடைந்த பின்னர் அதில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு டில்லி அரசு கொழும்புக்கு முக்கிய அறிவிப்பொன்றை விடுக்கும் என்றும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

0 Responses to இலங்கைப் பிரச்சினை தொடர்பில் டில்லியில் இன்று முக்கிய மாநாடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com