இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு நீதியானஉண்மையான நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
அந்தத் தீர்வு அவர்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
அங்கு உள்ள தமிழ் மக்களும் தமிழ்க் கட்சியினரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கையே தமக்குத் தேவை என்கின்றனர்.
அவ்வாறான இலங்கைக் குள்ளேயே அவர்கள் வாழ விரும்புகின்றனர்.
இவ்வாறு இந்திய எதிர்க்கட்சித் தலைவியும் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவியுமான சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
பாரதீய ஜனதாக் கட்சியின் மாநில மாநாடு, நேற்று முன் தினம் வியாழக்கிழமை மதுரையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
தமிழக அரசியல் கட்சியினரிடம் இப்போது ஒரு கேள்வி இலங்கையிலுள்ள தமிழர்கள், தமிழ் கட்சியினர் அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட இலங்கை தேவை என்று கூறும் போது நீங்கள் மட்டும் ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள்? அதுதான் புரியவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை நான் சந்தித்த போது, ஐக்கிய இலங்கையில் இருக்கத்தான் தமிழர்கள் விரும்புகிறார்கள் என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும், நேர்மையான அரசியல் தீர்வுதான் எங்களுக்குத் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை எப்படி மதிக்கப்படுகிறதோ அதே போலத்தான் நாம் இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மையை மதிக்க வேண்டும்.
நான் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவைச் சந்தித்த போது இலங்கைத் தமிழர்கள் குறித்து தமிழ்நாடு மட்டும் கவலைப்படவில்லை, மாறாக ஒட்டுமொத்த இந்திய தேசமும் கவலையுடன் உள்ளதாக உறுதிபடத் தெரிவித்தேன்.
இலங்கைத் தமிழர்களுக்கு நான் ஒரு இந்திய சகோதரி என்ற முறையில் அரசியல் உரிமைகளை அவர்கள் பெறும் வகையில் விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் கருத்தினை உறுதியாக இந்திய நாடாளுமன்றத்திலும் தெரிவித்தேன்.
இலங்கை ஜனாதிபதி எனக்குக் கொடுத்த பரிசுப் பொருளை பெரிய விவகாரமாக்கி ஒரு பத்திரிக்கை என்னை சிறுமைப்படுத்தி விட்டது.
அந்தப் பரிசு இந்திய ஜனநாயகத்திற்கு வழங்கப்பட்ட சிறிய கௌரவம்.
அதை நான் சுஷ்மா சுவாராஜாக வாங்கவில்லை. மாறாக இந்தியாவின் பிரதிநிதியாகத்தான் வாங்கினேன்.
மேலும் அதனை நாடாளுமன்ற கருவூலத்திலும் சேர்த்து விட்டேன். அதை நான் எடுத்துக் கொள்ளவில்லை என்றார்.
0 Responses to சம்மந்தரே ஈழம் கேட்கவில்லை நீங்கள் ஏன் கேட்கிறீர்கள் சுஷ்மா உளறல்