இந்தியா எப்போதும் இலங்கையின் நண்பனாகவே இருக்கும். இங்குள்ள மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு என்றுமே அது பங்காளியாகச் செயற்பட்டு வரும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா தெரிவித்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆலை யடிவேம்பு பிரதேச குடும்பத் தலைவிகளுக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்ட முச்சக்கர வண்டிகளை கையளிக்கும் நிகழ்வு கடந்த சனிக் கிழமை (26) ஆலை யடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதேச செயலாளர் வி. ஜெக தீசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் யுத்த சூழல் ஓய்ந்து சமாதானம் நிலவுகின்றது. இச் சந்தர்ப்பத்தில் இங்குள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் மன மகிழ்ச்சியோடும் வாழ்வதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்த நாம் முயற்சித்து வருகின்றோம். கடந்த கால யுத்தத்தினாலும் அனர்த்தங்களினாலும் பல்வேறுபட்ட இழப்புகளைச் சந்தித்த கிழக்கு மாகாணம் தற்போது அபிவிருத்தி பலவற்றை கண்டு வருகின்றது. இவ்வேளையில் இங்குள்ள மக்கள் நலனுக்காய் இலங்கையும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
கிழக்கு வாழ் மக்கள் நன்மை கருதி இந்திய அரசின் மூலம் சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, வீடமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் விருத்தி செய்ய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவுள்ளன. குறிப்பாக இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளில் பாதிக்கப்பட்ட கிழக்கு வாழ் மக்களுக்கு சுமார் நான்காயிரம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவுள்ளோம். அதற்காக பிரதேச செயலகங்களும், மாகாண சபையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டால் இவ் வீடுகளை உடனடியாக நிர்மாணிக்க நாம் தயாராக இருக்கின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்களின் நன்மைக்காக பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள இந்திய அரசு தயாராக இருக்கின்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் எமது சந்திப்பின் போது பல்வேறுபட்ட தேவைப்பாடுகளை எமக்கு சுட்டிக் காட்டியுள்ளார். இதற்கு ஏற்றாற் போல் நாம் பல செயற் திட்டங்களையும் இங்கு மேற் கொள்ளவுள்ளோம். கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ரீ. நவரட்ணராஜா குறிப்பிட்டது போல கிழக்கு மாகாணத்தில் உள்ள சுமார் 40 ஆயிரம் விதவைகளுக்கு எம்மாலான வசதி வாய்ப்புகளை மேற் கொள்ளவுள்ளோம்.
எமது அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 250 மில்லியன் ரூபா செலவில் சேவா எனும் பாரிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக இத் திட்டத்தின் மூலம் பல்வேறுபட்ட நன்மைகள் கிட்டுகின்றன. இத்திட்டத்தின் கீழ் நாற்பது பெண்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களை இந்தியாவிற்கு அழைத்துச் சென்று துறை சார்ந்த பயிற்சிகளை வழங்கினோம். அப் பெண்கள் இலங்கைக்கு வந்து மேலும் 800 பேருக்கு இப்பயிற்சியினை விஸ்தரித்துள்ளனர்.
இச் செயன் முறையினை நாடு தழுவிய ரீதியில் மேற் கொள்ள நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இது தவிர இத் திட்டத்தின் மூலம் உணவு பதப்படுத்தல், மழை நீர் சேகரிப்பு, கணினி மற்றும் தொடர் பாடல், சுய தொழில் வாண்மை விருத்தி போன்ற பல்வேறுபட்ட துறைகளுக்காக பயிற்சிகளையும் மேற் கொண்டு வருகின்றோம். இத் திட்டத்தின் மூலம் மக்கள் பல்வேறான சுயமாக வாழக்கூடிய நிலைமையினையும் ஏற்படுத்தியுள்ளோம். இத் திட்டத்தினை அம்பாறை மாவட்டத்திற்கு, குறிப்பாக அக்கரைப்பற்று, ஆலையடி வேம்பு பிரதேசங்களுக்கு கொண்டு வர நாம் எண்ணுகின்றோம். இது பற்றி இலங்கை அரசு எம்மிடம் வேண்டுகின்றபோது நாம் உடனடியாக இச் செயற் திட்டத்தை விஸ்தரிக்க ஆயத்தமாகவுள்ளோம்.
இலங்கையிலும் கணினிக் கையாடல்களை அதிகரிக்கச் செய்யும் வகையில் அண்மையில் பாடசாலைகளுக்கு 1500 கணினிகள் உள்ளிட்ட சாதனங்களை வழங்கினோம். குறிப்பாக அம்பாறை மாவட்டத்திற்கு இவ்வாறாக 400 கணினிகளை பாடசாலைகளுக்கு வழங்கியுள்ளோம். அத்தோடு, துரித தகவல் தொழில் நுட்பத்தை இலங்கையில் விஸ்தரிக்கும் பொருட்டு நனசல நிறுவனங்களை நிறுவியுள்ளோம். இவற்றுக்கு மேலாக இந்திய அரசினால் இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 2. 5 பில்லியன் ரூபா பெறுமதியான புலமைப் பரிசில் திட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மூன்று மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
எமது அரசாங்கத்தின் நிதி உதவி மூலம் அண்மையில் மட்டக் களப்பு மாவட்டத்தில் இரண்டு பாரிய தொழிற் பயிற்சி நிலையங்களை நிறுவியுள்ளோம். ஒந்தாச்சி மடம், வந்தாறு மூலை ஆகிய பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ள இத் தொழிற் பயிற்சி நிலையங்களில் நவீன தொழில் நுட்பத்தில் அமைந்த பெறுமதி வாய்ந்த இயந்திர சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர உடனடித் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் பயிற்சி நெறிகளும் வடிவமைக்கப்பட்டு போதிக்கப்பட்டு வருகின்றன. இப் பயிற்சி நிலையங்களில் இளைஞர், யுவதிகள் சென்று தாராளமாக பயிற்சியினைப் பெற்று வாழ்வின் முன்னேற்றம் காண முடியும்.
இந்தியாவில் பல்வேறுபட்ட பல்கலைக்கழகங்களும், தொழில் நுட்பக் கல்லூரிகளும் இதர கல்விக் கூடங்களும் உள்ளன. இங்கு சென்று கல்வியினைத் தொடர இலங்கை மாணவர்களுக்கும் சந்தர்ப்பங்கள் பல இருக்கின்றன. தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்ள சவால்களை எதிர்நோக்கும் இளைஞர், யுவதிகள் தொழிற் துறையினை இலகுவில் பெற்றுக் கொள்ளும் பயிற்சி நெறிகளை மேற்கொள்ள நாம் உதவ சித்தமாகவுள்ளோம் எனக் குறிப்பிட்டார்.
0 Responses to நண்பனே நண்பனே நன்றி சொல்வேன் நண்பனே..