வடக்குப் பகுதி தமிழர்களுக்கு மட்டும் சொந்தமல்ல என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறிய கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளதுடன், நிராகரித்துள்ளது.
வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல எனக் கூறுவதன்மூலம், வடக்குப் பிரதேசத்தின் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
அண்மையில் சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பீபீசிக்கு வழங்கிய செவ்வி ஒன்றில், வடக்கு தமிழர்களுக்கு மாத்திரம் சொந்தமான பிரதேசம் இல்லை எனக் குறிப்பிட்டமை கண்டிக்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
கோத்தபாய இவ்வாறு கூறியுள்ள இந்த நிலையில் அண்மையில் வெளியாகியுள்ள சனத்தொகை கணக்கெடுப்பின்படி வடக்கில் 9 லட்சம் தமிழர்கள் வசிப்பதாகவும் 23 ஆயிரம் சிங்களவர்கள் வசிப்பதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதன் அடிப்படையில் கோத்தபாய ராஜபக்ச எதனை கூறமுனைகிறார் எனவும் சுரேஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே அவரின் கருத்தில் இருந்து வடக்கில் சிங்களமயத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமையை எதிர்ப்பார்க்க முடிகிறது என சுரேஸ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Responses to கோத்தாபய | கூட்டமைப்பும் எதிர்ப்பு