ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அமுல்படுத்த சிறிலங்கா அரசை வலியுறுத்துமாறு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு சிறிலங்காவை அமெரிக்க வலியுறுத்த வேண்டுமெனவும் அது ஆலோசனை கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்கா தொடர்பில், அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் சார்பில் அந்த அமைப்பின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் கடந்த மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து சில மனித உரிமை அமைப்புக்கள், தீர்மானத்திற்கு ஆதரவாக செயற்பட்ட சிறிலங்காப் பிரஜைகள் உள்ளிட்ட பலருக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அமுல்படுத்துவதில் முழு ஈடுபாட்டைக் காட்ட சிறிலங்கா தவறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், சிவில் அமைப்புக்களும், ஊடகங்களும் தொடர்ச்சியாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன்
இணையத் தள ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்டுகின்றனர் என குற்றஞ்சாட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு திரும்பிய தமிழர்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டமை தொடர்பான மருத்துவச் சான்றிதழ் ஆதாரங்களுடன் தகவல்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக சுமத்தப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறைமையொன்று உருவாக்கப்பட வேண்டுமெனவும் கடத்தல்கள், காணாமல் போதல்கள், சட்டவிரோத படுகொலைகள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென சிறிலங்க அரசாங்கத்தை வலியுறுத்துமாறும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 Responses to சிங்கள அரசை அமெரிக்காவாவது வலியுறுத்த வேண்டும்