Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பௌத்த சிங்களத் தீவு மூன்றாவது தடவையாகவும் ஒரு அதர்மத்திற்கான போரின் உக்கிர அகோரத்தை கொண்டாடியிருக்கிறது. சுதந்திர லங்கா நிறுவனத்தின் 60 ஆண்டு கால அனைத்து வளங்களும் வல்லமைகளும் அதிகாரங்களும் தமிழ் இனத்தை அடிமை கொள்ளவே இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கக்சாமி

அவதார புருஷர்களில் போரை அதிகம் வெறுத்து தர்மத்திடம் சரணம் அடைந்தவர் புத்தராகத் தான் காணப்படுகிறார்.

கிருஷ்ணர் கூட அதர்மம் எல்லை தாண்டும் போது நான் வருவேன் என்ற வகையில் தர்மத்திற்கான யுத்தத்தை சாம பேத தான தண்ட அடிப்படையில் அணுகுவதாகக் கொள்ளலாம்.

இயேசு வருகிறார் என்பது கூட அதர்மத்திற்கு எதிரான எதிரொலியே.

ஆனால் பௌத்த சிங்களத் தீவு மூன்றாவது தடவையாகவும் ஒரு அதர்மத்திற்கான போரின் உக்கிர அகோரத்தை கொண்டாடியிருக்கிறது.

ஞானம் ஆட்சியிலிருந்தால் போர்க் குதிரைகள் பாரமிழுக்கும் ஆணவமும் ஆசையும் அதர்மமாக ஆட்சி பீடத்திலிருந்தால் பாரம் சுமக்கும் கழுதைகளிற்கும் போர்ப்பயிற்சி அளிக்கப்பட்டு அவை களத்தில் இறக்கப்படும்.

சுதந்திர லங்கா நிறுவனத்தின் 60 ஆண்டு கால அணைத்து வளங்களும் வல்லமைகளும் அதிகாரங்களும் தமிழ் இனத்தை அடிமை கொள்ளவே இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அடுத்தவன் சொத்தின் மீதான ஆதிக்க ஆசைத் தீ, மூங்கில் உராய்வால் ஏற்படும் காட்டுத் தீயானது, காட்டை முற்றாக அழித்து ஈற்றில் எரிக்க ஏதுமற்ற நிலையில் தானும் அழிந்து ஓய்வதைப் போல் நவ லங்கா பயணிப்பதாகவே தெரிகிறது

ஆசைப்படுவது பொண்ணாகவோ பொருளாகவோ எண்ணெயாகவோ மண்ணாகவோ கூட இருக்கலாம்.

இன்றும் சிறீலங்கா தனது வளங்களையெல்லாம் போர் மயப்படுத்தி வருவதையே இந்த தொடர் வெற்றி விழாக்களின் ஆயுத அணிவகுப்புக்களும், பறவையைப் போல் பறந்து பயணம் செய்யப் படைக்கப்பட்ட விமானங்களின் சாகசங்களும் பறைசாற்றி நிற்கின்றன.

சம்பந்தர் அன்மையில் ஒரு விடயத்தை கண்டித்துள்ளார்.

ராஜபக்ஜாக்கள் “ரொம்ப” பொய் சொல்வதாக அவர் சீற்றமடைந்துள்ளார்.

தீவில் மற்ற இடங்களில் உள்ளது போன்றே வடக்கிலும் தனது இராணுவ முகாங்கள் இயல்பு நிலையில் இருப்பதான ஒப்பீட்டுச் சித்தரித்ததை சம்பந்தர் அச்சத்தை மீறி கண்டித்துள்ளார்.

அந்தச் சம்பந்தர் காலத்தில் மட்டுமல்ல இப்போதும் சூதிலும் வாதிலும் வல்லவர்களான அவர்கள் இராஜதந்திரம் என்று முலாமிட்டுக் கொண்டு அதர்மத்திடமும் பொய்ப்பரப்புரைகளிடமும் உண்மைக்கு புறம்பான தர்க்கங்களிலும் சரணடைந்து உச்ச நிலையை எட்டியுள்ளனர்.

தந்திரம் என்பதை நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக மட்டும், அதுவும் இராசாக்கள் மட்டும் பாவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே தந்திரம் என்பதற்கு முன்னால் “இராஜ” என்பது வலிந்து சேர்க்கப்பட்டுள்ளது.

ஆனால் தாய்லாந்தில் தேசத்தின் குரலுடன் சமாதான மரம் நாட்டிய சட்டப் பேராசிரியரின் பேச்சாற்றல் அதர்மத்தை காக்க அமெரிக்காவில் வாதம் செய்துள்ளது.

இந்த இடத்தில் ஒரு பண்டைய வரலாற்று சம்பவத்தை இரை மீட்பது போதி மரத்தானின் போதனையாகவும் அமையும்.

இவர்கள் வழிபடுவதால் புத்தரை நாம் வெறுக்க கூடாது.

தனது பெயரால் ஒரு புதிய மதம் தோன்றிவிடக் கூடாது என்பதில் புத்தர் மிகவும் கண்டிப்பாக இருந்தார்.

தனக்கு யாரும் சிலை வைக்கக்கூடாது என்று கூட அவர் தனது சீடர்களிடம் கோரியிருந்தார்.

இவர்கள் தான் புத்தரின் விருப்பத்திற்கும் மாறாக அவரது சிலைகளைத் திணிக்கிறார்கள்.

இதோ அந்த உண்மைச் சம்பவம்

அகில உலகையே வென்ற மகா அலெக்ஸ்சாண்டரின் தந்தையான மாசிடோனிய மன்னனான பிலிப் தத்துவத்துடன் உலக நாடுகளைப் பற்றி அறிவதிலும் ஆர்வமுடையவனாக இருந்தான்.

ஒரு நாள் அவனது அவைக்கு பல நாடுகளிற்கும் சென்று வந்த வணிகன் ஒருவன் வருகிறான்.

வந்தவனோ உலகில் அற்புதமான நாடு கிரேக்கம் தான் என்கிறான். இது அவனது அன்றைய கணிப்பு. (இன்றோ கிரேக்கம் பொருளாதாரத்திலும் வீழ்ந்து கிடக்கிறது.) வீரமும் பலமும் அங்கு தான் செழித்திருந்ததாக அன்று அந்த வணிகன் உரைத்தான்.

பிலிப் மன்னனிற்கோ இந்தக் கணிப்பில் திருப்தியில்லை.

பாரதநாடு எப்படி என்று மன்னன் கேட்டான்.

செல்வ வளத்தை மனதில் வைத்து அரசன் அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை.

அறிந்து கொள்ளும் வெறும் அறிவையும் மீறி, உணரும் ஞான தத்துவார்த்த அடிப்படையின் தேடலாக ஆவலுடன் அந்தக் கேள்வி எழுந்தது.

வெறும் பொருளைத் தேடும் வணிகனிற்கு அது புரியவில்லை. அவன் பலமாகச் சிரித்தான். இந்தியா தான் கடைசித் தரத்தில் இருக்கிறது என்று அவன் கூறினான்.

மன்னன் ஒரு விதமாக வணிகனைப் பார்த்ததும் வணிகன் தொடர்ந்தான்.

அபாரமான வளங்களும் செல்வச் செழிப்பும் அங்கு உண்டு. ஆனால் இந்தியர்களோ அதை அறியாதுள்ளனர் என்றான்.

மன்னனின் முகத்தில் கேள்விக்குறி அழிந்தபாடில்லை.

எனவே வணிகன் மேலும் தொடர்ந்தான்.

வீரம் மருந்திற்கும் அவர்களிடம் இல்லை, போர்க் குதிரைகளை பார வண்டிகளை இழுக்கவே பாவிக்கிறார்கள். பலமாக களமாட வல்ல யாணைகளை கோயில்களில் கட்டி வைத்துள்ளதுடன் திருவிழாக் காலங்களில் பிள்ளைகள் ஏறி விளையாடும் சவாரிப் பண்டமாக வைத்துள்ளனர். நெற்களங்களில் நெல் மிதிக்க மட்டும் பாவிக்கிறார்கள். உள்ள போர் வளங்களை அவர்கள் பாவிப்பதாக இல்லை என்று முடித்தான்.

இதைக் கேட்டு அந்த அவையும் சிரித்தது.

தனது மறுதலிப்பை முகபாவத்திற் கொட்டியவாறே பிலிப் மன்னன் தன் மகனான அலெக்ஸ்சாண்டரைப் பார்த்தான்.

அந்தப் பார்வையின் பொருளை தனயன் சரிவரப் புரிந்து கொள்கிறான்.

இந்த மானிட சங்கதிகளை மீறிய அந்தப் பார்வையின் பரிமாணத்தை சமான்ய உணர்வாளர்களாற் புரிய இயலாது.

இராஜதந்திரம் மிக்க பேச்சுக்களையும் முடிவுகளையும் நாட்டு மக்கள் உடனடியாக உணர்வதில்லை.

இது தமிழராகிய எங்களிற்கு மட்டுமல்ல சிறீலங்காவிற்கும் கூடப் பொருந்தும்.

1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்த ஜே ஆரை அன்று அவரது கட்சி அடுத்த நிலை சிங்களத் தலைமைகள் கூட சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. பிரேமதாசா அடங்கலாக…….

மகிந்த போன்ற உணரச்சி வேக மன்னர்களை மக்கள் இலகுவில் புரிந்து கொள்வதால் ஆதரிக்கிறார்கள் ஏற்கிறார்கள்.

ஆனால் காலமோ உணர்ச்சி வேகங்களை ஏற்பதில்லை. அது இயற்கையின் இயல்பையும் தர்மத்தையும் மட்டும் ஏற்கிறது.

இதனாற் தான் நாமின்று கோடைப்பனியை காண்கிறோம்.

தூக்கமற்ற அலெக்சாண்டர் எப்போது விடியும் என்று எண்ணியவாறு படுக்கையில் புரண்டான். அறிவுப் பசி ஞானத்தை தேடியிருக்க வேண்டும்.

விடிந்ததும் தன் குருவான தத்துவஞானி அரிஸ்டாட்டிலிடம் ஓடிச் சென்றான். அவையில் நடந்ததை அமைதியாக அப்படியே எடுத்துரைத்தான்.

அந்த வணிகள் சொன்னதைப் போல் யாணைகளும் குதிரைகளும் அழிவை நோக்கிய போர்களிற்காக தயார் பண்ணப்படாத நிலையில் ஒரு தேசம் இருக்குமாயின் அது தான் காலப் போக்கில் பூரணமாக அழியாது தொடர்ந்திருக்கும் என்றார் குருவான அரிஸ்டாட்டல்.

மனிதன் ஒரு போர்ப்பிராணி என்று கூறாதவரல்லவா அவர்.

ஆசையும் எதிர்ப்புணர்வும் கொண்ட சாமான்ய ஞான சூனியங்களால் இந்த உண்மைகளை உணர முடியாது.

மேலும் தெளிவாக அறிந்து கொள்டவதற்காக “ அது எப்படி? ” என்று கேட்டான் அலெக்ஸ்சாண்டர்.

எங்கே ஆட்சியில் அறிவும் அதனையும் தாண்டிய தத்துவார்த்த ஞானமும் ஜொலிக்கிறதோ அந்தத் தேசம் தோற்பது போலவும் பணிந்து போவது போலத் தோன்றினாலும் ஈற்றில் தப்பிப் பிழைப்பது அது தான் என்பதே அரிஸ்டாட்டலின் பதிலாக இருந்தது.

இதை நாணல் தத்துவம் என்று கூடக் கூறலாம்.

தனது இங்கிலாந்து தேசம் பலவீனமானதாக இருந்த போது, அதைப் பலப்படுத்த கால அவகாசம் தேவைப்பட்ட போது, சமாதானத்தை விரும்புவது போல பொறுமையுடனிருந்து ஜெகஸ்பியரின் மேட நாட்டை காப்பாற்றிய நெவிலி சேம்பர்லேனை வரலாற்று உதாரணமாகக் கொள்ளலாம்.

இவரையும் இவரது குடையையும் வரலாறு மறந்துவிடக் கூடாது.

எதிரியுடன் கைலாகு கொடுப்பதால் உங்களைத் தாக்கும் ஒரு கரத்தை பிடித்துக் கொள்ள இயலும் என்பார் நேரு அடிக்கடி….

அதிக தூரமேன், கட்டுநாயக்க தட்டுடன் தள்ளாடிப் போன சிறீலங்காவை புலிகளுடன் பேச குனிந்து வளைந்து வந்தவர் இதே ஜீ எல் பீரிஸ் தான்.

ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தை தேடி அவர் நடந்து வந்ததையே எங்கள் ஊடகப் பேனாக்கள் நையாண்டி செய்தன அன்று.

பேசுகிறோம் பேசுகிறோம் என இழுத்தடித்து காலத்தை எடுத்து ஈற்றில் என்ன செய்தார்கள்?

உயர்ந்து பரந்த நீல வானத்தை பார்த்தபடி அரிஸ்டாட்டல் தொடர்ந்தார்.

எங்கே ஞானம் ஆதிக்கம் செலுத்துகிறதோ அங்கே போர்க் குதிரைகள் பாரம் இழுக்கத்தான் செய்யும். அஞ்ஞானமும் பேராசையும் போராசையும் ஓங்கி நிற்கும் இடத்தில் தான் புரவிகள் போரில் ஈடுபடுத்தப்படும் - அலெக்ஸ்….நீ ஒரு தடவை இந்தியாவைப் போய்ப் பார்க்க வேண்டும்.

ஆமென அன்று தலையசைத்த அலெக்ச்சாண்டர் தான் அரசனானதும் இந்தியாவை நோக்கி புறப்பட்டான் …… ஆனாற் படையுடன்….வீரமுள்ள அரசினின் பயணம் அப்படித் தானே அமையும்…..

சென்றவன் இந்தியாவையும் வென்றான். அதனால் அவன் “ த கிறேற் அலெக்ஸ்சாண்டர் ஆனான்”

இருந்தும் இந்த மகா அலெக்சசாண்டரால் இந்தியாவிலிருந்து எதையும் எடுத்து வர இயலவில்லை.

ஞானம் பொருள் பண்டமல்லவே . ஏடுகளாக இருந்த அறிவைக் கூட கடத்த முடியும் ஞானத்தை…..!?

ஞானிகளை எந்தப் பல்கலைக்கழகங்களினாலும் உருவாக்க இயலாது. பட்டை தீட்டி விட முடியும் அவ்வளவு தான். ஏனென்றால் ஞானப் போக்கானவர்கள் பிறக்கிறார்கள் உருவாக்கப்படுவதில்லை.

அவ்வாறே உலக நிலப்பரப்பை எல்லாம் வென்ற மகா அலெக்ஸ்சாண்டரால் தாயகம் திரும்ப முடியவில்லை. பாதி வழியில் பாபிலோனியாவில் உயிரிழந்தான்.

தன்னைப் புதைக்கும் போது தனது கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் விட்டு விடுங்கள் என்றானாம் அலெக்சாண்டர்.

உலகச் சக்கரவர்த்தியான எனக்கும் ஈற்றில் தேவையானது ஆறடி நிலமே என்ற சுடலை ஞானம் அவனிற்கு.

காதற்ற ஊசியும் வராது கடை வழிக்கே. போகும் போது வெறுங்கையுடன் தானே போக வேண்டும். கடைசி வரை வரப் போவது நமது தர்ம அதர்மங்கள் மட்டுமே.

இதையே கண்ணதாசனும் வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ என்று எழுதியிருக்க வேண்டும்.

போதி தர்மனின் மகிந்தவிற்கு இது புரியாமலிருப்பது தான் விதியா?

ஓ! மகிந்தவே!! நில் புத்தரின் போதனைகளை முதலிற் புரிந்து கொள். புரிந்து கொண்டால் இராணுவ முகாம்களையோ புத்தர் சிலைகளையோ நீ திணிக்க மாட்டாய்.

புத்தரே தன் சீடர்களிடம் தனக்கு சிலை வைக்கக் கூடாதென்றும் தன் பெயரால் சமயத்தை உருவாக்க வேண்டாமென்றும் கூறியதாகவே நாங்கள் வாசிக்கிறோம்.

கொழும்பு ஆயுத மயமாகும் வரை அமைதிக்கும் நல் இணக்கத்திற்கும் வாய்ப்பில்லை.

நீ அன்பு மயமாகும் வரை உனது வெற்றிக்கு நிம்மதியுமிராது தூக்கமும் வராது.

இன்று சரத் நாளை ……!?

ஓ! பாவம் அழைக்கிறது உன் சிந்தனைக்கு வேலையில்லை. காலம் உணர்த்தட்டும் கண் திறந்து பாரக்கட்டும் நான் வருகிறேன்.

நீங்கள் புத்தம் சரணம் கச்சாமி என புத்தரிடம் மட்டும் சரணடைகிறீர்கள். நாங்கள் தர்மம் சரணம் கச்சாமி என தர்மத்திடமும் சரணடைகிறோம்.

அடுத்த யுத்தம் தீவில் வருமானால் அது தர்ம யுத்தமாகவே இருக்கும். அதற்கு முன் இணக்கத்திற்கு ஒரே ஒரு வாய்ப்புண்டு.

அன்பே சிவம். ஆவிக்குள் ஆவியான அதின்றேல் அனைத்தும் சவம்.

இந்த யுகத்திலேயே முள்ளிவாய்க்கால் கொடூரம் போல் ஒரு அகோரம் நிகழ்த்தப்பட்டிருக்கும் என நான் அறியவில்லை.

இதற்கான இயற்கையின் பதிற் தாக்கம் குறைந்த பட்சம் சமனானதாகவும் எதிரானதாகவும் தானே இருக்க வேண்டும்.

தரணியில் ஆணி அடிக்கப்பட்ட அனைத்து ஆத்மாக்களும் சாந்தியடையட்டும். முள்ளிவாய்க்கால் அப்பாவிகளின் ஆன்மாக்கள் அடங்கலாக ….

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!.

0 Responses to அதர்ம ஆட்சி பீடத்தின் மூன்றாவது வெற்றி விழா! | பூநகரான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com