பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் மம்தாவின் பேரணி, தி.மு.க.,வின் ஆர்ப்பாட்ட அறிவிப்புக்கு பிறகு அ.தி.மு,.க., போராட்டம் அறிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் கண் துடைப்பு நாடகம் என்பதை நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள். கோவா மாநிலத்தை போல் தமிழக அரசும் பெட்ரோல் மீதான வரியை குறைத்திருக்க வேண்டும் என திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை:
கேள்வி: பெட்ரோல் விலை உயர்வுக்காக தி.மு. கழகம் 30ஆம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது என்றதும், அ.தி.மு.க. அவசரமாக 29ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறதே?
கலைஞர்: மேற்கு வங்க முதலமைச்சரும், மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலே அங்கமாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவியுமான மம்தா பானர்ஜி தனது தலைமை யிலே கொல்கத்தா தலைநகரில் பெட்ரோல் விலை உயர்வைக் குறைக்க வேண்டுமென்று கோரி ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தே பேரணியில் சென்றிருக்கிறார்.
பா.ஜ.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் 31ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்து விட்டார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலே அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றக் கழகமும் எனது தலைமையிலே தென் சென்னையிலும், மற்றும் மாவட்டத் தலைநகரங்களிலும் 30ஆம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை அறிவித்து விட்டோம். இவ்வள விற்கும் பிறகு அ.தி.மு.க. என்னதான் செய்வது? வேறு வழியின்றி 29ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால் அந்த ஆர்ப்பாட்டத்திற்கான அறிக்கையை விடுத்துள்ள ஜெயலலிதா போகிற போக்கில் தி.மு. கழகத்தின் மீதும் என் மீதும் தேவையில்லாமல் சில கருத்துக்களைக் கூறியிருக்கிறார். குறிப்பாக “மத்திய அரசைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக் கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, மத்திய அரசை வலியுறுத்தி இந்தப் பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், பெட்ரோல் விலையைக் குறைக்கக் கோரி தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித் திருப்பது கண் துடைப்பு நாடகம்” என்று கூறியிருக் கிறார்.
மத்திய அரசை வலியுறுத்திடத்தான் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தை என் தலைமையிலேயே நடத்துகிறது. ஆனால் ஜெயலலிதா மின் கட்டண, பஸ் கட்டண, பால்விலை உயர்வுகளைக் கூடத் திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் நம்மைக் கேலி செய்கிறார். நல்ல கண் துடைப்பு கபட நாடகம். ஒருவேளை தி.மு. கழகத்தையே பெட்ரோல் விலையைக் குறைத்து அறிவிப்பு செய்யச் சொல்கிறாரா? ஜெயலலிதா தோழமை சேர துடித்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க. ஆளும் சிறிய மாநிலமான கோவாவில் ஜெயலலிதாவைப் போல மத்திய அரசையோ, அதிலே அங்கம் வகிக்கும் கட்சிகளையோ குறை சொல்லி அறிக்கை விட்டுக் கொண்டிராமல் அந்த மாநில அரசே உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதாவது பெட்ரோல் விலை உயர்வால், மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருதி, கோவா மாநில அரசு, பெட்ரோலுக்கு விதிக்கப்படும் “வாட்” வரியை முழுமையாக ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக டெல்லியை விட, கோவாவில் லிட்டர் ஒன்றுக்கு 12 ரூபாய் குறைவாக பெட்ரோல் கிடைக்கிறது என்று இன்று செய்தி வெளி வந்திருக்கிறது. உண்மையிலேயே பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்கள் மீது ஜெயலலிதாவிற்கு அக்கறை இருக்குமானால், கோவா மாநிலத்தில் செய்ததைப் போல, தமிழகத்திலேயும் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியைக் குறைக்க இதற்குள் முன் வந்திருக்க வேண்டாமா?
இன்னும் கூற வேண்டுமேயானால், தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோது, மத்திய அரசு 2006ஆம் ஆண்டில் பெட்ரோலிய பொருள்களின் விலையை உயர்த்திய போதும், 2008ஆம் ஆண்டு டீசல் விலையை உயர்த்திய போதும், கழக அரசு விற்பனை வரியைக் குறைத்து அறிவிப்பு செய்திருக்கிறது. ஆனால் அப்போதும் ஜெயலலிதா ஆளுங் கட்சியாக இருந்த தி.மு. கழகத்தைத் தாக்கி அறிக்கை விடுவதிலேதான் முனைப்பாக இருந்தார்.
குறிப்பாக 14 2 2008 அன்றும், 2 7 2009 அன்றும் ஜெயலலிதா விடுத்த அறிக்கைகளில், “பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு என்ற அதிர்ச்சியில் இருந்து பொது மக்களை மீட்பது என்பது, வரிகளை ஒழுங்குபடுத்தும் மத்திய, மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்கும் உட்பட்டுத்தான் இருக்கிறது, மத்திய மாநில அரசுகள் இதைப் பற்றி சிறிதும் யோசிக்காமல், கவலைப்படாமல் இருப்பது வாக்களித்த மக்கள் மீது அவர்களுக்கு எள்ளளவும் அக்கறை இல்லை என்பதைத்தான் காட்டுகிறது” என்று குறிப்பிட்டதை தற்போது அவருக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். அவர் கூறிய யோசனையை அவரே தற்போது நடைமுறைப்படுத்த முன்வராமல், கழகத்தையும் என்னையும் குறை கூறி கண்டன அறிக்கை கொடுத்து விட்டு, ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டிருப்பதுதான் உண்மையான “கண் துடைப்பு நாடகம்” என்பதை நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள்.
இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. | ஆர்ப்பாட்டம் கண் துடைப்பு நாடகம் என்பதை நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள் | கலைஞர்
பதிந்தவர்:
தம்பியன்
27 May 2012
நாடகம் நடித்து ஏமாற்று வித்தை காட்டுவதென்றால் என்னவென்றே தெரியாத அப்பாவி,
உலகத்தில் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரேயொரு யதார்த்தவாதி.
.......... வாருங்கள் தமிழர்களே வாய்விட்டு சிரிப்போம்..........