சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீண்டும் அரசியலில் நுழைவதை நோக்காகக் கொண்டு, தற்போது பெரும்பான்மை சிங்கள மற்றும் சிறுபான்மை தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
எனினும், சரத் பொன்சேகாவின் திட்டத்தை குழப்பும் நடவடிக்கையில் ராஜபக்ச அரசாங்கம் நகர்வுகளை முன்னெடுத்து வருவது போல் தெரிகிறது.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், சரத் பொன்சேகாவால் ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட நேர்காணல்களில், இலங்கையில்தற்போது நடைமுறையிலுள்ள ஊழல் மற்றும் ஆட்சி மோசடி போன்றவற்றை எதிர்த்து, அனைவரும் குறிப்பாக பெரும்பான்மை சிங்கள மக்கள் போராட வேண்டிய தேவையுள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், தமிழ் நாளிதழுக்கு சரத் பொன்சேகா வழங்கியுள்ள நேர்காணலில், தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கில் தற்போதும் குவிக்கப்பட்டுள்ள இராணுவப் படைகளை அங்கிருந்து வெளியேற்றுதல் மற்றும் இராணுவத்தினர் பொது நிர்வாகங்களில் தலையீடு செய்வதை தடுத்தல் போன்றவற்றுக்காக தமிழ் மக்கள் ஒன்றுகூட வேண்டும் என்ற விடயத்தை மட்டுமே சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜெனரல் மீண்டும் அரசியல் அரங்கில் நுழைவதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பதை ராஜபக்ச அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
தொலை நோக்கை அதிகம் கருத்தில் கொண்டு செயற்படும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொன்சேகாவின் சிறைத் தண்டனையை மட்டுமே குறைத்து அவரை விடுதலை செய்துள்ளார். ஆனால் சரத் பொன்சேகா ஏற்கனவே மேற்கொண்ட பணிகளைத் தொடர்வதற்கான அனுமதியை வழங்கவில்லை.
இந்நிலையில், சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் கூட, தற்போதும் குற்றவாளியாகவே கருதப்படுகின்றார். சட்ட நடைமுறைகளின் படி, சரத் பொன்சேகா ஏழு ஆண்டுகள் வரை ஜனாதிபதி தேர்தலிலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலோ போட்டியிட முடியாது.
இதன்படி, 2016 இல் நடைபெறும் அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட முடியாது. இது முதலாவது விடயம்.
இரண்டாவதாக, சரத் பொன்சேகா அதுவரை காலமும், பெற்றுக் கொண்ட இராணுவ உயர் நிலைகள், பதக்கங்கள் மற்றும் இராணுவப் பட்டிகள் போன்றவற்றை மீளவும் பெறமுடியாது.
சரத் பொன்சேகாவால் பெற்றுக் கொள்ளப்பட்ட இராணுவ உயர் நிலைகள், பதக்கங்கள் மற்றும் இராணுவப் பட்டிகள் போன்றவற்றை ஆகஸ்ட் 2010ல் இராணுவ நீதிமன்றின் கட்டளையின் படி பறிக்கப்பட்டன.
சரத் பொன்சேகா இராணுவத்தில் பதவி வகித்த அதேவேளையில், அரசியலில் ஈடுபட்டதால் இவர் 'இராணுவச் சட்டத்தை' மீறியிருந்தார் என இராணுவ நீதிமன்றம் குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில் சரத் பொன்சேகாவை இந்த நீதிமன்றம் 'அவமரியாதையுடன்' இராணுவ சேவையிலிருந்து பணி நீக்கம் செய்திருந்தது.
வழிமூலம் - Express News Service
0 Responses to பொன்சேகாவின் இரட்டைவேடம் | Express News Service