ஐ.நா.மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த மீளாய்வுக்குப் பொறுப்பாக இந்தியா, பெனின், ஸ்பெயின் ஆகிய நாடுகள் நியமிக்கப்படவுள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் இணையத்தளம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐ.நாவில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளினதும் மனிதஉரிமைகள் நிலை குறித்துச் சுழற்சி முறையில் மீளாய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த மீளாய்வுக்கு ஒவ்வொரு நாட்டுக்கும், தலா மூன்று நாடுகள் பொறுப்பாக நியமிக்கப்படுவது வழக்கம். இலங்கை தொடர்பான மீளாய்வு வரும் நவம்பர் முதலாம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இதற்குப் பொறுப்பாக இந்தியா, பெனின், ஸ்பெயின் ஆகிய நாடுகளை ஐ.நா.மனித உரிமைகள் சபை நியமிக்கவுள்ளது.
இந்த மூன்று நாடுகளுமே, கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் வரும் நவம்பர் முதலாம் திகதி நடக்கவுள்ள மீளாய்வு இலங்கைக்கு மிகவும் கடினமானதாகவே இருக்கும் என்றும், உறுதியான கடப்பாட்டை அனைத்துலக சமூகத்துக்கு கொழும்பு வெளிப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் இலங்கையின் உரிமை அமைப்புகளும், செயற்பாட்டாளர்களும் கூறியுள்ளனர்.
0 Responses to இலங்கையின் மனித உரிமை நிலை மீளாய்வு