சீனாவின் சிறிலங்கா மீதான செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்தியா சிறிலங்காவுடன் இன்னமும் நெருக்கமான உறவைப் பேணுவதற்கான ஒரு வழியாக ஜெனீவா வாக்கெடுப்பை பயன்படுத்தலாம் என ராஜபக்ச நம்பியிருந்தார்.
இவ்வாறு நேபாள நாட்டை தளமாகக் கொண்ட Himal Southasian என்னும் ஊடகத்தில் Ajaz Ashraf எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
அக்கட்டுரையின் முழுவிபரமாவது...
கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற பேரவையின் கூட்டத் தொடரில் இந்தியாவானது சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்தமை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இந்தியா மீது அதிருப்தி கொண்டுள்ளதுடன், இவ்வாறான சதித் திட்டத்தை மேற்கொள்வதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாகவும் சிறிலங்கா மத்திய அரசாங்கம் யோசனை கொள்கின்றது.
சீனாவானது தற்போது சிறிலங்கா மீது அதிக செல்வாக்கை கொண்டுள்ளதாலேயே இவ்வாறானதொரு தீர்மானத்தை இந்தியா எடுத்துள்ளதற்கான பிரதான காரணம் எனக் கூறப்படுகின்றது.
இக்கருதுகோளின் பிரகாரம், சிறிலங்காத் தீவில் சீனா தனது பொருளாதார ஆதிக்கத்தை நிலைநாட்டுவது தொடர்பில் இந்தியா அதிருப்தி கொண்டுள்ளதாகவும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உண்மையில் இந்திய வல்லரசின் ஆதரவுடனேயே பொருளாதாரத்தை மேம்படுத்தியிருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் பொருட்டே, அதாவது இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எச்சரிக்கை ஒன்றை விடுப்பதை நோக்காகக் கொண்டே கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா தனது வாக்கை வழங்கியிருந்தது.
சதிக் கொள்கைகளை எப்போதும் உருவாக்குபவர்கள் உண்மையில் போட்டியிட வேண்டிய காரணிகள் மற்றும் தமக்கிடையே தீர்வு காணப்பட வேண்டிய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட அவர்களின் உளவியல் வெளிப்பாட்டையே அதிகம் காண்பிக்கின்றன. இந்தவகையில், இந்தியாவின் இத்தீர்மானமானது உண்மையில் சிறிலங்கா அரசாங்கத்தை அதிர்ச்சி கொள்ள வைத்த ஒன்றாகும்.
ஜெனீவாவில் அமெரிக்காவின் தலைமையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு ஒரு மாத காலம் கடந்த நிலையிலும் கூட, இந்தியாவின் இத்தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தமது பகுத்தறிவுக்கு உட்பட்ட வகையில் விமர்சிப்பதில் இன்னமும் களைப்படையவில்லை. அதாவது சிறிலங்கா ஊடகங்களும் சிறிலங்காவின் அரசியல்வாதிகளும் இந்தியாவின் தீர்மானத்தை திருப்திப்படுத்தி தமது கருத்துக்களை முன்வைக்க முயலவில்லை. அவர்கள் அதனை விரும்பவில்லை.
அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 13 வயதுச் சிறுவனான பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட காட்சிகளைப் பார்த்து குழப்பமடைந்த இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் கட்டளைப்படியே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சிறிலங்காவுக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் வாக்களித்ததாக சிறிலங்கா ஊடகங்களும் அரசியல்வாதிகளும் கற்பிதம் செய்கின்றன.
பேரவையின் தீர்மானத்தை எதிர்ப்பதற்கான பணிகளை சிறிலங்கா தரப்பு முன்னெடுத்திருந்தது. வாக்களிப்பு நடைபெறுவதற்கு சில மாதங்களின் முன்னர், சிறிலங்காவில் ஓரங்கட்டப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு தேவையான அரசியற் தீர்வொன்றை வரைந்து அதனை அவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மன்மோகன் சிங், சிறிலங்கா அதிபரைக் கேட்டுக்கொண்டார். அதாவது முன்னர் விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்கி அதன் மூலம் தமிழ் மக்களுக்கு அரசியற் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்குமாறு மன்மோகன் சிங் வலியுறுத்தியிருந்தார்.
ஆனால் அமெரிக்காவால் தலைமை தாங்கி முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வு முக்கியத்துவப்படுத்தப்படுவதாக இந்திய மத்திய அரசு, சிறிலங்கா அரசாங்கத்திடம் தொடர்புகளை மேற்கொண்டு தெரியப்படுத்திய போதிலும் கூட ராஜபக்சவின் அரசாங்கம் இது தொடர்பாக எவ்வித கவனமும் செலுத்தவில்லை. அத்துடன் அரசியல் தீர்வை வழங்குவதற்கான ஆர்வத்தை காட்டவுமில்லை. ஆனால் அதேவேளையில் இந்தியாவின் இத்தீர்மானம் தொடர்பில் சிறிலங்கா தவறான எடுகோளை எடுத்துக் கொண்டது.
எடுத்துக்காட்டாக, சிறிலங்காவை எதிர்த்து இந்தியா வாக்களித்ததானது சிறிலங்காவின் இறைமையைப் பாதிப்பதாகவும், உள்நாட்டு அரசியலைப் பாதிப்பதாகவும் சிறிலங்கா கூறிக்கொண்டது. இந்தியாவானது இவ்வாறான தனது தீர்மானத்தை நல்லதாக நினைத்துக் கொண்டது. கஸ்மீர், இந்திய வடகிழக்கு பிரதேசம் மற்றும் மாவோயிஸ்டுக்கள் பாதிக்கப்பட்ட இடங்கள் போன்ற விவகாரங்கள் தொடர்பில் இந்தியாவால் பிரயோகிக்கப்பட்ட கொள்கைகளை வெளிநாடுகள் விமர்சித்துக் கொண்டன. இந்நிலையில் இவ்வாறான விமர்சனங்களுக்கு முகங் கொடுக்க விரும்பாத இந்தியா சிறிலங்கா விடயத்தில் தான் சரியான தீர்வை எடுத்துக் கொண்டதாகவே கருதுகின்றது.
சீனாவின் சிறிலங்கா மீதான செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்தியா சிறிலங்காவுடன் இன்னமும் நெருக்கமான உறவைப் பேணுவதற்கான ஒரு வழியாக ஜெனீவா வாக்கெடுப்பை பயன்படுத்தலாம் என ராஜபக்ச நம்பியிருந்தார். சீனாவானது சிறிலங்காவின் பொருளாதாரத்தில் அதிக செல்வாக்கை பிரயோகித்து வருகின்றது.
இந்த வகையில், 2010ல் சிறிலங்காவின் பொருளாதாரத் துறைக்கு சீனாவானது 824 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியது. அத்துடன் சிறிலங்காவின் கட்டுமானத் துறையில் குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்த போன்ற பாரிய கட்டுமானத் திட்டங்களை சீனா முன்னெடுத்து வருகின்றது. 2020ல் ஒரே தடவையில் 33 கப்பல்கள் வந்து போகக் கூடியளவுக்கும், உலகம் பூராவும் நடைபெறும் கடற் போக்குவரத்தின் 20 சதவீதத்தை கவரக் கூடியளவுக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. இவை இந்திய ஊடகங்களில் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன.
இந்திய அரசியற் தலைவர்களோ அல்லது இராஜதந்திரிகளோ சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தமைக்கான காரணத்தைக் குறிப்பிடாவிட்டாலும் கூட, ராஜபக்சவின் சீனா மீதான நம்பிக்கையில் மண் போடுவதை குறிக்கோளாகக் கொண்டே இந்தியா தற்போது தனது வாக்கை வழங்கியுள்ளது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பூகோள நிலைப்பாட்டைக் கருத்திற் கொண்டு பார்க்குமிடத்து எதிர்காலத்தில் சிறிலங்காவானது இந்தியாவின் உதவியின்றி எதனையும் மேற்கொள்ள முடியாது என்பதில் இந்தியா அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, சிறிலங்காப் பொருள் இறக்குமதியில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதாவது 2011ல் இந்தியா 4.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை சிறிலங்காவிடமிருந்து இறக்குமதி செய்கின்றது. ஆனால் அதே ஆண்டில் சீனாவானது 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை இறக்குமதி செய்துள்ளது. சிறிலங்காவின் மிகப் பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராக இந்தியா காணப்படுகின்றது. சிறிலங்காவுக்கு வரும் ஐந்து சுற்றுலாப் பயணிகளில் ஒரு இந்தியர் காணப்படுகின்றார். இவ்வாறு இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான வர்த்தகச் செயற்பாடுகள் நீண்டு செல்கின்றன. எதிர்காலத்தில் பல்வேறு இழப்புக்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு தற்போது ராஜபக்ச சிலவற்றை மறக்க வேண்டிய நிலையில் காணப்படுகின்றார்.
இந்திய மத்திய அரசானது கூட்டணிக் கட்சிகளைக் கொண்டு ஆட்சி அமைத்துள்ளதால் தன்னை மேலும் நிலைப்படுத்திக் கொள்வதற்கு பல்வேறு விடயங்களைக் கவனத்திற் கொள்ள வேண்டும் என்பது உண்மையாகும். அதாவது தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றான திராவிட முன்னேற்றக் கழகமானது மன்மோகன் சிங்கின் கட்சியுடன் மத்தியில் கூட்டுச் சேர்ந்துள்ளது. இதனால் தி.மு.க இலிருந்து மேற்கொள்ளப்படும் அழுத்தத்தை மன்மோகன் சிங் அரசாங்கம் வெறுமனே அசட்டை செய்து விட முடியாது.
சிறிலங்காவில் நிலவும் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாட்டில் தனது தளத்தை அமைத்து செயற்படும் திராவிட முன்னேற்றக் கழகம் முதன்மைப்படுத்துவதால் இந்திய மத்திய அரசு இதனை தட்டிக்கழிக்க முடியாது. 2009ல் இடம்பெற்ற பேரவையின் கூட்டத் தொடரில் இந்தியாவானது சிறிலங்காவை ஆதரித்து வாக்களித்தது என்பது சிறிலங்காவைப் பொறுத்தளவில் சிறிது துருத்திக் கொண்டுள்ளது.
ராஜபக்ச, தனது நாட்டில் நிலவும் தேசியப் பிரச்சினைக்கு நம்பகமான அரசியற் தீர்வொன்றை வழங்கியிருந்திருந்தால், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் ஏனைய தமிழ்நாட்டு கட்சிகள் இந்திய மத்திய அரசுக்கு தமது அழுத்தத்தை பெரிதளவில் வழங்கியிருக்க மாட்டார்கள். அதாவது சிறிலங்காவை அதிருப்தி கொள்ள வைக்கும் தீர்வை இந்தியாவும் எடுத்திருக்க மாட்டாது.
இந்தியாவானது சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்ததில் தி.மு.க செல்வாக்குச் செலுத்தியானது தென்னாசிய நாடுகளுக்கு சிறந்த பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது. புதுடில்லியில் ஆட்சி செலுத்தும் கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாட்டை இந்தியாவின் அயல்நாடுகள் கருத்திற் கொள்ள வேண்டும். குறிப்பாக இந்நாடுகள் தமக்கான வெளிநாட்டுக் கொள்கைகளை வகுக்கும் போது இந்திய மத்திய அரசில் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகளின் நிலைப்பாட்டை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
புதுடில்லிக்கு வெளியே குறிப்பாக, இந்திய எல்லையில் அமைந்துள்ள மாநிலங்களை ஆட்சி செய்வோரில் புதிதாக முளைக்கும் 'சிறிய தலைவர்கள்' இந்திய மத்திய கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கட்சிகளின் கொள்கைப்பாடுகளைக் கவனத்திற் கொள்ள வேண்டும். தாம் ஆட்சிக்கு வருவதில் செல்வாக்குச் செலுத்திய, வாக்களித்த மக்களின் அவாக்களை இத்தலைவர்கள் கவனத்திற் கொண்டு அவற்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இவர்கள் வெளிநாட்டுக் கொள்கைகளில் செல்வாக்குச் செலுத்துகின்றனர் என்பது வெளிப்படை.
அதாவது,இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த ஆண்டில் Teesta நீரை பங்களாதேசுடன் பகிர்ந்து கொள்வதென தீர்மானித்த போது அதில் மேற்கு வங்காள முதல்வர் Mamata Banerjee தனது மாநில அதிகாரத்தைப் பயன்படுத்தி வெற்றி கொண்டார்.
Enrica Lexie என்கின்ற இத்தாலியக் கப்பலைச் சேர்ந்த இரு மாலுமிகள் கேரள மீனவர்கள் இருவரைக் கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் பெரும்பான்மை பலத்தை வெற்றி கொள்வதற்கு இந்திய காங்கிரஸ் கட்சியானது மாநிலக் கட்சியின் ஆதரவைப் பெற வேண்டியிருந்தது.
இந்திய ஆதிவாசி சமூகத்திடமிருந்தும் பொதுமக்கள் அமைப்புக்களிமிடருந்தும் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், ஜெய்ப்பூர், மகாராஸ்டிரா, தென் கொரியா போன்றவற்றில் பிரெஞ்சு நிறுவனமான Areva ஆல் மேற்கொள்ளப்பட ஒப்பந்தமாகியுள்ள அணுவாயுத திட்டம் ஒன்றுக்கு இந்திய மத்திய அரசால் இடம் ஒதுக்கிக் கொடுக்க முடியாதுள்ளது. ஆகவே இந்திய மாநிலங்கள் குறிப்பாக எல்லைப் புற மாநிலங்கள் தமது மாநிலங்களில் பிரச்சினை ஒன்று வரும்போது அது தொடர்பில் தேசிய நலனை விட மாநில நலனை அதிகம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இந்நிலையில் இந்திய மத்திய அரசின் தலைவர்களுடன் தொடர்பைப் பேணுவதால் மட்டும் தமக்கான வெளியுறவுக் கொள்கைகளை இலகுவில் அடைந்து கொள்ள முடியும் என தென்னாசிய நாடுகள் தொடர்ந்தும் நம்பிக்கை கொள்ளக் கூடாது. இந்தியா நோக்கி இந்நாடுகள் தமது வெளியுறவுக் கொள்கைகளை எவ்வாறு உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை மேற் கூறப்பட்ட எடுத்துக்காட்டுக்கள் தெளிவாக பறைசாற்றி நிற்கின்றன.
கடந்த ஆண்டில் பங்களாதேசுக்கான தனது பயணத்தை மேற்கொண்ட இந்தியப் பிரதமர் தன்னுடன் இந்திய எல்லைப் புற மாநிலங்களான மேகலாய, மிசோறம் மற்றும் அசாம் மாநில முதல்வர்களையும் கூட்டிச் சென்றிருந்தார். இதேபோல் மன்மோகன் சிங் பர்மாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது, இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ள மாநில முதல்வர்களும் கூடச் செல்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கப்பால், இந்திய மத்திய அரச அதிகாரிகளின் பதிலுக்காக காத்திராமால், தாராளவாத பொருளாராதம் மற்றும் கூட்டணி அரசியல் ஆகியவை நிலவும் இந்தியாவின் அதன் 'குட்டித் தலைவர்கள்' அதாவது இந்திய மாநில முதலமைச்சர்கள் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களை உள்ளீர்ப்பதில் ஈடுபடுகின்றனர்.
இந்தியாவின் 'குட்டித் தலைவர்கள்' இவ்வாறு செயற்படும் அதேவேளையில், சீன மற்றும் இந்திய மத்திய அரசாங்கங்கள் zero-sum game ல் ஈடுபடவில்லை என்பதையும் தென்னாசிய நாடுகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் தமக்கிடையே போட்டி போட்டுக் கொள்ளும் அதேவேளையில் தமக்கிடையே ஒத்துழைப்பை பேணிக் கொள்வதுடன், பிராந்திய நாடுகள் தமக்கிடையே பேரம் பேசிக் கொண்டு போட்டிப் போட்டுக் கொள்வதற்கான வழிவகைகளை உருவாக்கி வருகின்றன.
மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
0 Responses to சிறிலங்கா அதிபர் மகிந்தவின் கெட்ட சூதாட்டம் | நேபாள ஊடகம்