தே.மு.தி.க., சார்பில், பெட்ரோல் விலை உயர்வில் மக்கள் விரோதப்போக்கை கடைபிடிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, திருச்சி ஜங்ஷன் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம், காலை 11 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தே.மு.தி.க., நிறுவனத் தலைவர் விஜயகாந்த், 12.30 மணிக்கு தான் மேடைக்கு வந்தார். அதன்பின், ஆர்ப்பாட்டம் நடந்தது.
பின், விஜயகாந்த் பேசியபோது, ‘’உரலுக்கு ஒரு பக்கம் இடியென்றால், மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி' என்பதுபோல், மத்திய, மாநில அரசுகள் போட்டிபோட்டு விலையை ஏற்றுகின்றன. எண்ணெய் நிறுவனம் விலை ஏற்றி விட்டதாக, மத்திய அரசும், மின்சார ஒழுங்கு முறை ஆணையமும், மின் கட்டணத்தை உயர்த்தியதாக, தமிழக அரசு கூறுகிறது. எண்ணெய் நிறுவனத்துக்கும், ஒழுங்குமுறை ஆணையத்துக்கும், நாம் ஓட்டளிக்கவில்லை. இவர்களை நம்பி தான் ஓட்டளித்தோம். யார் மீதோ பழிபோட்டு தப்பித்துக் கொள்கின்றனர்.
அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோலுக்கு நிரந்தர விலை வைக்க வேண்டும். விலை நிர்ணயம் செய்தால், மக்கள் நிம்மதியாக இருப்பர்.
ஐந்து ஆண்டு இது தான் விலை என்று கூற வேண்டும். அதன்பின், ஒரு ரூபாயோ, இரண்டு ரூபாயோ விலை உயர்த்த வேண்டும். எண்ணெய் நிறுவனங்களுக்கு, ஒரு லட்சத்து 3,000 கோடி ரூபாய் நஷ்டம் என்கின்றனர். வரி மூலம், ஒரு லட்சத்து 85 ஆயிரம்கோடி லாபம் கிடைக்கிறது. லாபத்தில் தான் நஷ்டம்.
ஒடிசாவில் 19 சதவீதம், டில்லியில் 18 சதவீதம், பெட்ரோலுக்கு மாநில அரசு வரி போடுகின்றன. தமிழகத்தில், 27 சதவீதம் வரி விதிக்கிறது.
கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் வரி மூலம் வருவாய். அதில், 1,000 ரூபாய் மக்களுக்காக விட்டுக் கொடுக்கலாம்.
தமிழக அரசு வரியை குறைத்தால் பெட்ரோல் விலை, தமிழகத்தில் குறையும். ஜெயலலிதா மின் கட்டணம் உயர்த்தி, குறைத்தது போல், மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தி குறைத் துள்ளது. ஆட்சிக்கு வந்ததும் மின் பிரச்னை தீரும் என்றார். கவர்ச்சித் திட்டங்களை தவிர்த்து, வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’’என்று பேசினார்.
உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி | விஜயகாந்த் பேச்சு
பதிந்தவர்:
ஈழப்பிரியா
02 June 2012
0 Responses to உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி | விஜயகாந்த் பேச்சு