Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருமுருகண்டியில் மட்டுமல்ல பிரான்சிலும், பிரான்சு பாராளுமன்றம் முன் தமிழர்களின் நிலங்கள் தமிழர்களுக்கு வேண்டும், தமிழர்களின் நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

தாயகத்தில் சிறிதரன், கஜேந்திரன், மனோ கணேசன், சிவாஜிலிங்கம் போன்றோர், இராணுவத்தினால் அபரிக்கப்படும் தமிழ் மண்ணை பாதுகாப்பதற்காக மக்களுடன் செய்யும் போராட்டம் தமிழீழ மண்ணில் சிறிலங்கா அரசும் அதன் இராணுவமும் தொடர்ந்து செய்து வரும் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களை வெளிச்சதிற்கு கொண்டுவருவதற்கு வழிவகுக்கும்.

தாயகத்தில் இராணுவத்தின் அடக்குமுறைகளுக்கு இடையே மக்களுக்கு தைரியத்தை கொடுத்து, மக்களுடன் சேர்ந்து இயங்கும் இவர்களை பார்க்கும் போது, அவர்கள் நடத்திக்கொண்டிருக்கும் போராட்டத்தை சர்வதேசதிற்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை புலம்பெயர் மக்களை சாரும்.

அந்த அடிப்படையில் இன்று பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட போராட்டத்தில் பல நூற்றுகணக்கான மக்கள் பங்கு பற்றியது மட்டுமில்லாமல், பிரான்சு பாராளுமன்ற முதல் அமர்வு நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் தமது பிரதிநிதிகளை அனுப்பி பிரான்சு தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது.

மேலும், பிரான்சு வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் மூலமாக தமிழீழ மக்களின் இன்றைய நிலையை விளக்கி, பிரெஞ்சு அரசாங்கம் இதை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று தெரிவித்தனர்.

மக்கள் அவை செயற்பாட்டாளர் திருச்சோதி பேசும் போது, இன்று நாம் பிரான்சில் ஒரு புதிய ஆட்சியை பார்த்து அந்த மாற்றம் எமக்கும் சாதகமாக அமையாத என்று எதிர்பார்ப்புடன் இருக்கிறோம்.

அதே நேரத்தில் எம்மோடு நெருங்கிய உறவில் இருந்தவர்கள், நாம் வாழும் நகரங்களின் நகரபிதாக்கள் பலர் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டு உள்ளார்கள். அதை எமக்கு சாதகமாக்குவது எமது கையில்தான் உள்ளது.

இன்று எமது தாயக மக்கள் பல இன்னல்களுக்கிடையில் செய்யும் போராட்டம் கூட எம்மை நோக்கியதாகதான் இருக்கிறது. இதன் மூலமாக அவர்கள் இன்றும் ஒரு செய்தியை சொல்லி நிற்கிறார்கள். அவர்களின் போராட்டத்தின் மூலமாக சிறிலங்கா அரசு தன்னை மாற்றி கொள்ளாது என்பது அவர்களுக்கு தெரியும்.

அவர்கள் செய்யும் போராட்டம் எம்மை நோக்கியது, சர்வதேசத்தை நோக்கியது, தமிழர்களுக்கான விடுதலை சர்வதேச அழுத்தங்களும், மாற்றங்களும் தான் கொண்டு வரும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டு, புலத்தில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களையும் இந்த போராட்டத்தில் இணையுங்கள் என்று எம்மை நோக்கியும் தான் இந்த போராட்டம் நடக்கிறது என்று உணர்கிறேன் என்றார்.

பிரான்சில் தொடர்ந்து, எமது மண் எமக்கு வேண்டும், தமிழர்களின் பாரம்பிய பிரதேசங்கள், சிலாபம் முதல் அம்பாறை வரை தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் தமிழருடன் ஒப்படைக்கப்பட வேண்டும்.

அதை சிறிலங்கா செய்யாத பட்சத்தில் சர்வதேசம், தமிழர்களின் நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தும் போராட்டம் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் பிரெஞ்சு பாராளுமன்றம் முன் நடைபெறும் என்று கூறி தமிழர்களின் தமிழீழ தாயகத்தை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.

0 Responses to “எமது மண் எமக்கு வேண்டும்” திருமுருகண்டி மக்களுடன் சேர்ந்து பிரான்சில் போராட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com