இலங்கைத்தீவில் கத்தோலிக்க குருமார்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும், மன்னார் மறைமாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்துப் தொடர்பிலும், ஜனாதிபதி தலைவர் மகிந்த ராஜபக்ஸவிடம் வினவுங்கள் என, புனித பாப்பரசர் 16ஆம் பெனடிக்ட் அவர்களிடம், பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவுக்கான பயணத்தினைத் தொடர்ந்து, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வத்திக்கானுக்கு சென்று புனித பார்பரசரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் இக்கோரிக்கையினை விடுத்துள்ளார்.
இலங்கை அரசின் ஆயுதப்படைகளினால் பல கத்தோலிக்க குருமார்கள் பலர் படுகொலை செய்யப்பட்டும், கடத்திச் செல்லப்பட்டும், காணாமல் போயும் உள்ளனர் என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், இவர்களில் சில குருமார்கள் இன்னும் உயிருடன் இருக்கலாம் எனவும், அவர்கள் இரகசியமான இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதான ஐயம் நிலவுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
- அருட் தந்தை மேரி பஸ்தியான் (சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்)
- அருட் தந்தை ஈகுஜீன் கேர்பர்ட் ளுது (கடத்திச் செல்லப்பட்டு காணமல் போயுள்ளார்)
- அருட் தந்தை ச. செல்வராசா (கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்)
- அருட் தந்தை திருச்செல்வம் நிகால் ஜிம் பிரவுண் ( கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்)
- அருட் தந்தை பாக்கியரஞ்சித் (கொலை செய்யப்பட்டுள்ளார்)
- அருட் தந்தை சேவியர் கருணாரத்தினம் (கொலை செய்யப் பட்டுள்ளார்)
- அருட் தந்தை பிரான்சிஸ் ஜோசேப்பு ( 2009ஆம் ஆண்டு முதல் காணமல் போயுள்ளார். இவர் யாழ்.புனித சம்பத்தரிசியார் கல்லூரி முன்னாள் அதிபர், இவரை இலங்கை ஆயுதப் படையினர் கூட்டிச்சென்றதை மக்கள் கண்டுள்ளார்கள். இவருக்கு என்ன நேர்ந்தது என இதுவரை தெரியவில்லை.)
மேற்குறித்த கத்தோலிக்க குருமார்களுக்கு நேர்ந்த அவலம் குறித்தும், புனித பாப்பரசர் அவர்களுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மன்னர் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்களுக்கு, இலங்கை அரசாங்கத்தினாலும், இனவாதிகளினாலும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் தெரியப்படுத்தியுள்ளார்.
அதில், 2009இல் இலங்கை இராணுவத்தினரது இறுதியுத்த காலத்தின் போது 146,679 எண்ணிக்கையான தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பிலும் தமிழ் மக்கள் பெருந்தொகையாக கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இதனால் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படும் பௌத்த இனவாத அமைப்பாக ஜாதிக கெல உறுமய இராஜப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களைக் கைது செய்யம்படி பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
அண்மையில் இலங்கையின் மற்றுமொரு அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் ஆண்டகை அவர்களை மிரட்டியுள்ளதுடன், அவரது சமூகப் பணிகள் பற்றியும் மிரட்டும் பாணியில் நடந்துள்ளார். மிகக் கூடுதலான கத்தோலிக்க மக்கள் வாழும் மன்னார் மாவட்டத்திலும் புத்த சிலைகள் நிறுவுவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதாக செய்திகள் வெளி வந்துள்ளன.
ஆசியாவின் மிகப் பழமைவாய்ந்த தேவாலயங்களில் ஒன்றான மடு தேவாலயமும் மன்னார் மாவட்டத்தில் தான் அமைந்து ள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும் என புனித பாப்பரசருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.



0 Responses to புனித பாப்பரசருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர வேண்டுகோள்!