பொலிசாரால் கண்டு பிடிக்கப்படாத கொலைகள், கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் உட்பட அனைத்து சம்பவங்களின் பின்னணியிலும் அரசாங்கமே உள்ளது. எனவே பொது மக்களும் இந்நாட்டு ஊடகங்களுமே அம்பாந்தோட்டை கட்டுவன பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று ஜே.வி.பி. கேட்டுக் கொண்டுள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையமும், பொலிஸ் , ஊடகப்பிரிவும் இன்று கொலையாளிகளை பாதுகாக்கவே செயற்படுகின்றன. உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் மன்னர்களும் இளவரசர்களும் சிறைக்குத்தான் செல்ல வேண்டியிருக்கும். எவ்வாறாயினும் கட்டுவானை சம்பவத்தைக் கண்டித்தும் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யுமாறும் வலியுறுத்தி நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக கூறுகையில்;
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) மக்கள் சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை அம்பாந்தோட்டை கட்டுவானை பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த குண்டர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால் இருவர் கொல்லப்பட்டதுடன் பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதுமட்டுமன்றி பொல்லுகளாலும் கூடியிருந்த மக்களைத் தாக்கியதுடன் அங்கிருந்த பல உடைமைகளையும் சேதமாக்கியுள்ளனர். குண்டர்களின் அடாவடித்தனத்தால் மக்கள் பாதிப்புகளுக்கு அப்பால் இரண்டு முச்சக்கர வண்டிகள் எட்டு மோட்டார் சைக்கிள்கள் ஒரு சிறியரக லொறி மற்றும் சைக்கிள்கள் என பலதும் சேதமாக்கப்பட்டன.
இச்சம்பவம் இடம்பெற்று 48 மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையிலும் இது வரையில் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்யவில்லை. மாறாக கொலையாளிகளைப் பாதுகாக்கும் முயற்சியிலேயே அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பும் முயற்சிகளை மேற்கொள்கின்றன. கட்டுவன சூட்டுச் சம்பவம் குறித்து தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹூலுசல்ல பிரச்சனையை திசைத்திருப்பும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கொலன்னாவை சம்பவம் கஹாவத்தை சம்பவம் தொடர்பில் ஒன்றும் கூறாத லக்ஷ்மன் ஹூலுசல்ல கட்டுவன சூட்டு சம்பவம் தொடர்பில் சாத்திரக்காரனைப் போல் கருத்துக் கூறுகின்றார். இதேபோன்றுதான் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் ஜே.வி.பி.யின் உள்வீட்டுப் பிரச்சினையாகவே மேற்படி சூட்டுச் சம்பவத்தை வெளிப்படுத்த முயற்சிக்கின்றார். பொது மக்களின் வரிப்பணத்தில் சம்பளத்தையும் ஏனைய வசதிகளையும் பெற்றுக்கொண்டு நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கு பதிலாக கொலையாளிகளையும் குற்றவாளிகளையும் பாதுகாக்க இவர்கள் முயற்சிக்கின்றன.
அரசாங்கம் கொலையாளிகளை பாதுகாக்கும் சரணாலயமாகவே செயற்படுகின்றது. உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினால் அரச உயர் மட்டத்தின் பெயர் பட்டியலும் வெளியே வந்து விடும் என்ற அச்சத்தினாலேயே குற்றவாளிகள் கைது செய்யப்படாது உள்ளனர். கட்டுவனப் பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம் செய்தவர்களின் முக்கியஸ்தர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் பொலிஸில் முறைப்பாடும் உள்ளது. ஆனால் இதுவரையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.
எவ்வாறாயினும் நீதியைக் கேட்டு வெளிநாடுகளுக்குச் செல்வதோ பொலிஸ் நிலையம் செல்வதோ பயன் ஏற்படப்போவதில்லை. பொது மக்களும் இந்நாட்டு ஊடகங்களுமே நீதிக்காவும் நாட்டின் ஜனநாயகத்தர்களுடன் போராட வேண்டும் எனக் கூறினார்.



0 Responses to கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் பின்னணியில் அரசு: ஜே.வி.பி