அமெரிக்காவின் ஆளில்லா விமானமென்று பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலிருந்த அல் குவைடா இரண்டாவது நிலைத் தலைவர் அபு யகியா அல் லிபியை கொன்று தள்ளியது.
இந்தத் தாக்குதலை நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பேச்சாளரும் ஊர்ஜிதம் செய்துள்ளார்.
மேலும் இவருடைய மரணம் அல் குவைடாவுக்கு பாரிய இழப்பாக அமையும், இது அவர்களால் இட்டு நிரப்ப இயலாத இழப்பாக அமைந்துள்ளதாகவும் அமெரிக்கா மார்தட்டியுள்ளது.
ஆனால் அல் குவைடா இது பற்றிய கருத்துக்கள் எதையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது, அதேவேளை தலபான் இவருடைய இறப்புக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
இதே நபரை கடந்த 2009 ம் ஆண்டும் அமெரிக்கா கொன்றுவிட்டதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் இந்தத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
தனது நாட்டின் ஆள்புல எல்லைக்குள் அத்து மீறி பிரவேசித்து நடாத்திய அமெரிக்கத் தாக்குதல் சர்வதேச சட்டங்களுக்கு முற்றிலும் தவறானது, ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னரும் அமெரிக்க ஆளில்லா விமானம் நடாத்திய தாக்குதலில் 15 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டதை அது சுட்டிக்காட்டியுள்ளது.
இது இவ்விதமிருக்க…
ஆப்கானிஸ்தான் கந்தகார் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைக் குண்டுதாரி நடாத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டார்கள்.
நேற்று நடைபெற்ற இந்தத் தாக்குதலில் மேலும் 50 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாரவண்டிகள் அதிகமாக நிற்கும் இடத்தில் இந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது, அருகில் இருந்த விமான நிலையம் நேட்டோவால் பாவிக்கப்படுவதால் இந்தக் குறி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்தத் தாக்குதலில் இறந்த அனைவருமே பொது மக்கள் என்றும் ஒரு படையினர் கூட இறக்கவில்லை என்றும் ஆப்கான் போலீஸ் தெரிவிக்கிறது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை.
அலைகள்



0 Responses to அல் குவைடா இரண்டாவது நிலை தலைவரை அமெரிக்கா கொன்றது