இங்கிலாந்து நாட்டின் மகாராணி இரண்டாம் எலிசபெத் அம்மையார், அரச பொறுப்பேற்று 60 ஆண்டுகள் நிறைவுற்றதையொட்டி வைர விழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் அனைத்திற்கும் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெற்று வரும் இந்த வைரவிழா நிகழ்வில், உலக நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், அரசுத் தூதுவர்கள் என ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.
அந்த வரிசையில் இனப்படுகொலைக் குற்றவாளி, சர்வதேசப் போர்ப் பயங்கரவாதி ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உலகத் தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பு உருவாகியுள்ளது.
ஏற்கனவே இங்கிலாந்துக்குச் சென்றிருந்த ராஜபக்சேவை அம்மண்ணில் வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து, குறிப்பிட்ட நிகழ்வில் பங்கேற்கவிடாமல் விரட்டியடித்தது.
இந்நிலையில் மீண்டும் ராஜபக்ச, இங்கிலாந்து நாட்டுக்கு அரசின் விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சவை இங்கிலாந்து மண்ணில் அனுமதிக்கக் கூடாது எனப் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஒருங்கிணைந்து கடந்த சில நாட்களாகத் தமது கடுமையான எதிர்ப்புகளைப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருவது ஆறுதலை அளிக்கிறது.
அதேவேளையில் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒற்றுமையும் உறுதிமிக்க செயல்பாடுகளும் இன்றியமையாத தேவைகளாக உள்ளன. எனவே இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சொந்தங்கள் யாவரும், அமைப்பு மற்றும் இயக்கங்களின் வரம்புகளைத் தாண்டி கருத்து மாறுபாடுகளைப் புறந்தள்ளி ஒரே களத்தில், ஒரே வேகத்தில் போராடி இனக்கொலைக் குற்றவாளி ராஜபக்சவை இங்கிலாந்து மண்ணில் காலடி வைக்க விடாமல் விரட்டியடிக்க வேண்டும் என தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தள்ளார்.
0 Responses to குற்றவாளி ராஜபக்சவை விரட்டியடிக்க வேண்டும் | திருமாவளவன் அறிக்கை