ஒரு தேசத்தின் தலைவர் இன்னொரு தேசத்திற்கு செல்லும் போது வழங்கப்படும் வரவேற்புக்கள் பல விதமானவை. யார் அந்தத் தலைவராக இருந்தாலும் அந்த இரு நாடுகளிற்கும் இடையிலான மக்களிடையே ஒரு உண்மையான நட்புணர்வு இருக்குமாயின் அந்த வரவேற்பே உன்னதமானதாக இருக்கும்.
இந்த நட்புணர்வு இன, மொழி, கலை, கலாசார மற்றும் அரசியற் கொள்கை ரீதியானதாகவோ அன்றில் வர்த்தக பொருளாதார இராணுவ தொடர்பானதாகவோ அமையலாம்.
பங்களாதேஷை இந்தியா விடுவித்த போதும், இன்று ஒரு இந்தியத் தலைமை அங்கு செல்லும் போது அந்த நன்றி உணர்வு அங்கு பொங்கி வெடிப்பதில்லை.
ஆனாலும் உலகானது “அமெரிக்கா- ரஷ்யா” என்ற இரு முனைத் துருவங்களின் கீழ் ஒரு சமபல பரஸ்பர எதிர்ப்புடன் விளங்கிய ஆரோக்கியமான உலக ஒழுங்கிருந்த காலத்தில், இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கோ அன்றில் ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கோ யார் வந்தாலும் அந்த உள்மன நட்புணர்வின் அதிர்வுகள் தெருவோரம் நின்று கையசைக்கும் மக்களின் புன்னகையிற் கூட வெளிப்படும்.
அத்தகைய வரவேற்பு மகிந்தவிற்கு தீவின் வட புலத்தில் கூட இன்னுமில்லை. சரி, இலங்கை, இங்கிலாந்து தேசத்து மக்களிடையே தான் நட்புணர்வு மேலோங்காவிடினும் “ புஷ் - ரொனி பிளேயர் என்ற இருவரும் நண்பர்கள்” என்ற நிலைப்பாடாவது அங்கு ஒரு நெருக்கத்தை வெளிப்படுத்தலாம்.
இந்த தலைமை நட்பு நிலையும் மகிந்தவின் லண்டன் பயணத்தில் இல்லை. மாறாக வெறுப்பே இன்று மேலோங்கியுள்ளது. கனடாவில், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், யார் அரச தலைவராயினும் “ கனடா - இங்கிலாந்து” உறவு ஆரோக்கியமானதாகவே என்றும் உள்ளது.
இந்த நிலை இங்கிலாந்திடமிருந்து பாரிய உதவிகளைப் பெற்ற போதும், இலங்கைத் தீவில் இல்லை. ஆங்கிலேயரே! நீங்கள் மின் விளக்கை ஒளிரச் செய்ய கீழ் நோக்கி அழுத்தினால் நாங்கள் மேல் நோக்கி அழுத்துவோம்.
நீங்கள் தெருவில் இடது புறம் போனால் நாங்கள் வலது பக்கத்தால் செல்வோம் என்ற வரலாற்றுக் கால முரண்பாட்டு நிலை ஜேர்மனி போன்று பல நாடுகளில் நிலவிய போதும், இங்கிதம், நாகரீகம், மரபு கருதி இரு தேசங்களுமே பரஸ்பர வரவேற்பில் கண்ணியமாகவே இன்று வரை நடந்து வருகின்றன.
இந்தப் பண்பும் இந்த இரண்டு தீவுகளிற்கும் இடையில் இல்லை. ஆம், பிரித்தானியாவை ஜேர்மனியர் “ இன்செலர்” என்பதனூடாக, இங்கிலாந்தை ஒரு தீவு என்று கேலி செய்த போதும் ராஜீக ரீதியான மேம்பாட்டு உறவு பேணப்பட்டே உள்ளது.
இப்போது சிறீலங்காவுடன் மனதார நட்பாக உள்ள நாடுகள் கூட, அமெரிக்க எதிர்ப்புணர்வோ அல்லது இந்திய மறுதலிப்புக் காரணமாகவே, இலங்கை என்ற இளங்குயிலிற்கு பூச்செண்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது மகிந்தவையும் தேவநம்பிய தீசனையும் நிணைவு கூர்ந்த மதி பொங்கிய புனித நாட்களில், லண்டனில் தமிழர்கள் தான் பொங்கி எழுந்திருக்கிறார்கள்.
மகிந்தவின் உரையைக் குழப்பியவர்கள் மகிந்தவின் உணவையும் குழப்ப கூடியிருக்கும் போது இது எழுதப்படுகிறது. ஓ! சர்வதேசமே !! அன்று இதே இலண்டன் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் தெருவில் இறங்கியபோது இதே மாதிரி நடந்திருந்தால், பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்.
முருகதாசனும் முத்துக்குமாரும் தீக்குளித்த போதும் நீங்கள் அசையாதிருந்ததால் இன்று புத்தர் சிலைகள் அசைகின்றன. இந்த மதி கெட்ட சர்வ தேசம் பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற கொழும்பின் பரப்புரையை ஆராயாது தமிழ் இன அழிப்பிற்கு பலமான பங்களிப்பை வழங்கிவிட்டு இன்று ஒப்பாரி வைக்கிறது.
புலிகள் பலியெடுப்பால் தென் ஆசியாவின் “உலக இராணுவச் சமநிலை” மட்டுமன்றி ää ராஜீக மற்றும் பொருளாதாரச் சமநிலைகள் கூட தளம்பல் நிலைக்கு தள்ளப்பட்டதால், பல பலமான அரசுகளே சீனாக் கழுத்துப் பாம்பைப் பார்த்து யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌவுக்கியே என்ற பாட்டைப் போட்டு கேட்டுக் கொண்டிருக்கின்றன.
இனியும் நல்லிணக்கம் என்ற பெயரில் புத்த சிலைகளை கேதீஸ்வரத்திற்கும் கோணமாமலைக்கும் அப்பாலும் காங்கேசன்துறை வரை வைக்கவும், பிரிவினையை எதிர்க்கிறோம் என்று கூவிக் கொண்டு அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை கண்டியாதிருப்பது கூட மத கலாச்சார அழிப்பின் ஊடான இனஅழிப்பே.
இயக்கங்கள் ஆயுதமேந்திப் போராடியதை மட்டுமே இனக் கலவரம் என்று வேண்டுமானால் கூறலாம். தமிழர் சிங்களவரால் ஒரு தலைப் பட்சமாக தாக்கியவற்றை எவ்வாறு இனக் கலவரம் என்று கூற முடியும் ? …….1958, 1977 எல்லாம் இனக்கலவரங்களே. நிற்க!
இறுதியாக கோலோச்சிய பிரித்தானியா அஸ்தமனமற்றது எனச் சித்தரிக்கப்பட்டது. அதனால் ஆங்கிலேயரிற்கு ஒரு தனித்துவக் கௌரவம் இன்றும் உள்ள நிலையில், தவறுகளை மறைக்க சிறிய தேசமொன்றின் வெளிநாட்டமைச்சர் இங்கிலாநது தேசத்து தூதரை அழைத்து திருப்தியீனத்தை வெளியிடுவதை தவிர்த்து வேறு வழிமுறைகளை கொழும்பு கையாண்டிருக்கலாம்.
இன்றல்ல, சுதந்திர இலங்கையானது, தேசியக் கொடி வடிவமைப்பிலிருந்து இன்று வரை பௌவுத்த சிங்கள இன வாதப் பூதத்திற்கு நரபலியாக தமிழர்களை தீனி கொடுத்து அதனைத் திருப்திப் படுத்தியே தன் அரசியலை ஓட்டி வருகின்றது.
அமெரிக்காவிற்கு எதையும் எழுத்தில் கொடுக்கவில்லை என்பது வரை இது தொடர்கிறது. தலைமைத்துவத் தன்மைகள் மட்டுமல்ல தலைமைப் பண்புகள் கூடப் பல விதமானவை. மக்களை உசிப்பிவிட்டு உணர்ச்சி வேக அரசியலை நடாத்துபவர்கள் அதில் ஒரு ரகம்.
இவர்களால் தாங்கள் எழுப்பிய கோசத்தையோ, தொடங்கிய போராட்டத்தையோ நிறுத்த முடிவதில்லை. தனிச் சிங்களக் கோட்பாட்டை கொண்டு வந்து இனவாத அதிகார மலையில் ஏறிய பண்டாரநாயக்கா, தமிழரிற்கு சமஷ்டி என்று போட்ட ஒப்பந்தத்தை கிழித்ததும், சுட்டுக் கொல்லப்பட்டதும் இனவாத மலையில் சற்று திரும்பி இறங்கப் பார்த்ததாலேயே.
13 பிளஸைக் கூட சன்னதமாடும் இனவாத பூதம் அனுமதியாது. இன்று மகிந்த ஏதாவது தீர்வை முன் வைத்தால் ஆபத்திற்குள்ளாவபவர் யாருமல்ல மகிந்த தான். பண்டாரநாயக்காவிற்கு ஒரு பிக்கு என்றால் மகிந்தரிற்கு ஆயிரம் காவிகள் உள்ளன.
பண்டாரநாயக்காவைப் பின்பற்றிய இந்த மகிந்த, நாயக்கா இனவாத மலையில் ஏறி மேலே மேலே புத்தர் சிலைகளை வைத்துக் கொண்டே போக வேண்டும். தமிழர் கொலைக்களமான இலங்கைத் தீவை யாராவது சிங்களவர் தேர்தலில் தெரிவாகி ஆள வேண்டுமாயின் அவர்கள், இந்த இன வாதப் பூதத்திற்கு தமிழர்களைப் பலியிட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இந்தப் பூதம் தன் இருப்பிடத்தை விட்டு வந்து ஆள்பவர்களையே இரையாக்கிவிடும். தான் தொடர்ந்த அரசியலையும் நகர்வையும் கட்டுப்படுத்த மகிந்தாவால் முடியாது.
காந்தியும் ஆபிராகாம் விங்கனும் இந்த வகையைச் சார்ந்தவர்கள் அல்ல.
தங்களது அரசியல் வாகனத்தை தடுத்து நிறுத்தவல்ல ஆற்றல், தடுப்பு, கடிவாளம் அவர்களிடம் இருந்தது. உதாரணமாக பிரிட்டிஜ் அரசின் ஊதியத்திற்காக வேலை செய்த இந்திய பொலிஸ்காரர்களை தாக்கக் கூடாது என்று தடுப்புப் போட காந்தியால் முடிந்தது.
1958 இலும் 1977 இலும் 1983 இலும் ….முள்ளிவாய்க்கால் வரை தமிழரையும் புலிகளையும் பலி கொண்ட சிங்கள இன வாதம், வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலிருந்த “நியூ கலம்பு ஸ்ரோரை” எரிக்க விட்டு வேடிக்கை பார்த்ததும் இதனாற் தான்.
நல்ல தலைமைகள் தங்களை முதன்மைப் படுத்துவதும் இல்லை. தன்னை முன்னிறுத்திய கிட்லரின் முடிவு என்னாச்சு? நல்ல தலைமைகள் நடைமுறைகளை ஏற்படுத்திவிட்டு ஓய்வடைகின்றன. அவர்கள் இல்லாவினும் அந்த நடைமுறை தொடர்ந்து நாட்டை இயக்கும்.
ஒரு நல்ல தலைமை நிர்வாகி வேலைக்கு போகா விடினும் அங்கு எல்லாம் சீராக தானாக நடக்கும். இறைவன் என்ற உலக நிர்வாகி என்றாவது உலகிற்கு வெளிப்படையாக வந்ததுண்டா? பூஜ்ஜியத்திறகுள்ளே ஒரு இராச்சியத்தை வைத்து விட்டே அவன் அமைதியாக இருக்கிறான். மகிந்த போல் மேடை தேடி அலையவில்லை.
ஆனால் தவறான தலைமைகளோ தான் இல்லாத போது அனைத்தையும் சிதற வைத்து விடுகின்றன. “வந்தேமாதரம்” காந்தி இல்லாதபோதும் தொடர்ந்து ஒலித்தது. ஆனால் கிட்லருடன் டொச்லண்டே சிதைந்தது.
இந்தப் பூமிப் பந்தே என்னுடையதாக வேண்டும் ….எல்லாம் எனக்கே ..அதுவரை அனைத்தையும் இழந்து போரிடத் தயாரென்ற கிட்லர் “ அலஸ் உட நிஸ்” என்றான். (ஏல்லாம் அல்லது ஒன்றுமே வேண்டாம்.)
கனம் மகிந்த அவர்களே!
உங்களை நான் சிங்களப் பிரபாகரனாகவே பாரக்கிறேன். உங்களது துணிவிற்கும் இனப் பற்றிற்கும் பாராட்டுக்கள். ஆனால் உங்களிற்கும் தமிழ்ப் பிரபாகரனிற்கும் வேறுபாடு உண்டு. தமிழன் பிரபாகரன் தற்காப்பு வேண்டிப் போராடி, அதை நிரந்தமாக்க போராடினான்.
நீங்களே உங்கள் மேலான்மையை நிலை நிறுத்த போரிடுகிறீர்கள். தமிழரை அழிக்க போரிடுகிறீர்கள். கிட்லர் பூமிப் பந்தை கைப்பற்றி பந்தாடி விளையாட நினைத்தான். “மயின் வோல்ட்” என்று அவன் டொச்சில் கூவினான்.
நீங்களும் “ அப்பே றட்ட அப்பே லங்காவ” என்கிறீர்கள் அவன் எல்லா நாடுகளும் வேண்டும் இல்லாவிட்டால் ஒன்றுமே வேண்டாம் என்று “அலஸ் உட நி;ஸ்” என்றான். நீங்களும் சகோததர்களும் முழுத் தீவும் எங்களிற்கு வேண்டும் என்கிறீர்கள். நான் வெறுமையிலேயே வாழ்க்கையை காண்கிறேன்.
இதை நான் உங்கள் புத்தரிடம், மன்னிக்கவும் எங்கள் சித்தாத்தனிடமே கற்றேன். நாலு சுவரிற்குள் உள்ள வெளியில் சூனியத்துள் இருந்து கொண்டு தான் இதை நான் எழுதுகிறேன். எனது பேனாவிற்கும் காகிதத்திற்கும் இடையில் ஒரு சிறு இடைவெளியிருப்பதால்த் தான் எனனால் எழுத முடிகிறது.
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்றான் கண்ணதாசன். ஆம், அவன் குடித்த மது அவனது மதுக் கின்னத்திற்குள் இருந்த வெளிக்குள் தான் இருந்தது. கண்ணன் திருடி உண்ட நெய், களிமண் பானைக்குள் இருந்த வெளிக்குள் தான் இருந்தது.
வெறுமையான அட்சயபாத்திரத்திலிருந்து தான்……
ஓ! மகிந்தவே!! அச்சிற்கும் சக்கரத்திற்கும் இடையில் உள்ள அந்த இடைவெளியே இயக்கத்திற்கு அச்சாணி!!! என்னுடன் இன்று என் தாயில்லை, தந்தையில்லை, தம்பியில் ஒருவனும் இல்லைஅந்த வெறுமையிலும் அவர்களை தினமும் துதித்தே நான் வாழ்கிறேன்.
உறவற்ற அந்த வெறுமையான உறவுகளிற்காக அவர்களிற்கே தெரியாது தினமும் நான் பிராரத்திக்கிறேன். அவர்களே மறந்தாலும் அதை நான் இன்று வரை தொடர்கிறேன்….வெறுமையான உறவிற்காய் …..ஆம் வெறுமையே உலகம் …உலகே வெறுமை.
வெறுமையே முழுமை முழுமையே வெறுமை…..என்ன குழப்பமா? நீங்கள் ஒரே லங்கா என்பது உலகிற்கு புரிகிறது ஆனால் இந்த வெறுமைத் தத்துவம் உங்களிற்கு புரியவில்லை இதைத் தான் புத்தர் சூனியம் அல்லது பிரக்ஞை என்றார்.
இதையே பூரணம் என்றார் ஆதி சங்கரர். வெறுமையின் முடிவு முழுமை முழுமையின் முடிவு வெறுமை. அன்பு முழுமையடைந்தால் எஞ்சுவது வெறுமையே! எது முழுமையடைந்தாலும் அது வெறுமையிலேயே முடியும்.
சிங்கள் அதிகாரம் முழுமையடைந்தால் அதன் முடிவு வெறுமையைத் தரவல்ல முடிவே. பூரணத்தில் இருந்து பூரணத்தை எடுத்தால் எஞ்சியிருப்பதும் பூரணமே என்பது ஆதி சங்கரரின் புகழ் பெற்ற வரிகள்.
அனைத்தையும் பிரமமாக ஆதி சங்கரர் கணடதால் வந்த சூத்திரம் கணிதத்திற்கும் பொருந்தும் போலிருக்கிறது கண்ணதாசனின் “வெறுமையில் முழுமை” எறும்புத் தோலை உரித்துப் பார்த்த போது தென்பட்ட வெளிக்குள் வந்த பாரிய யானை தான். நீங்கள் உங்கள் இதயத் தோலை உரித்து இனவாத பூதத்தை காண வேண்டும்.
அதை விடுத்து தமிழர்களின் தோலை உரித்து செருப்பாக்க நினைக்கும் செருக்கு அமைதியைத் தராது. இலன்டனில் வெளியில் தமிழர்களின் போடும் சத்தத்தை விட உங்கள் மனதுள் பாரிய முள்ளிவாய்க்கால் ஒலிகள் எழ வேண்டுமே.
ஓலியற்ற ஓசை…..
புத்தரின் போதனைகளால் உலகப் பிரச்சனைகளை தீர்க்கலாம் என்று ஐ நா வில் கூவிய உங்களிற்கு இது புரியவில்லை என்றாவது பரிய வேண்டுமே! ஒலியே பிரமம் - பிரமமே ஒலி பிரேமையில் உள்ள உங்களிற்கு இதெப்படி இப்போ புரியப் போகிறது.
ஓசையுண்டு அனால் அதைக் காதாற் கேட்க இயலாது. ஓலியற்ற ஓசையான ஒரு விதமான மௌனம் அது. மௌனம் பேசும் ……அதிகம். வீட்டில் தந்தை தான் அதிகம் கத்திக் கொண்டிருப்பார் மனதிற்கு ஏதாவது பிடிக்கவில்லை என்று தாய் எழம்பாது சுருண்டு படுத்தால், உணவு உட்கார வட்டமாக அமரும் முழுக் குடும்பமுமே மௌனமாகிவிட்ட தாயாரை சுற்றி அமரும் தாயின் மௌனம் பேசாமலே பேசும் …..ரொம்பப் பேசும்……ரொம்ப ரொம்பப் பேசும்.
உண்மையில் பெண்கள் தான் ஆண்களை சிறை பிடித்து வைத்திருக்கிறார்கள் ……ஆயுள் பூராகவும் அதற்கும் அப்பால் பல பிறப்புக்கள் வரை…….
எத்தனை அப்பாவித் தமிழர்களை பிடித்து அடைத்து வைத்திருக்கிறோம் என்பது உங்களிற்கே தெரியாததைப் போல் அதை உணராத சக்திகளாக பெண்கள் இருக்கிறார்கள். ஆன்மா ஆணுமல்ல பெண்ணுமல்ல. ஆண்டவனோ ஆணுமல்ல பெண்ணுமல்ல அலியுமல்ல..
ஓலியற்ற ஒசை - புலப்படாத ஒளி! கண்ணிற்கு தோன்றாதது ஆனால் கண்ணில் படும் அனைத்தும் தோன்றியது அதிலிருந்தே, சிவவாக்கிய சித்தரின் வரிகளில் சொல்வதானால்
உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல. மருவுவாசல் சொந்தமல்ல மற்றதல்ல அற்றதல்ல! பெரிதல்ல சிறிதல்ல பேசவான தானுமல்ல! அரியதாகி நின்றநேர்மை யாவர் காணவல்லரே?
அரியதாகி நின்ற நேர்மையை தர்மத்தை காண வேண்டின், அநியாயமான சட்டங்களை இயற்றக் கூடாது. அநியாயமாகப் பறிக்கக்கூடாது ( சரத்தின் உரிமை அடங்கலாக) அநியாயமாகக் கொல்லக் கூடாது.
புத்தம் சரணம் கச்சாமி என்பதிற்கூட தர்மம் சரணம் கச்சாமி என்று தர்மமே இறுதியாக உள்ளது. நீங்கள் புத்தரிடம் சரணடைந்து விட்டீர்கள் என்பதிலும் சங்கங்களிடமும் பீடங்களிடமும் சரணடைந்து விட்டீர்கள் என்பதிலும் எங்களிற்கு சந்தேகம் இல்லை.
தர்மத்திடம் நீங்கள் சரணடையாது பேயிடமாவது உதவியைப் பெற்று பேயையாவது பின் புலமாகக் கொண்டு தமிழரை அறவே அழிக்க நிற்கிறீர்கள். இந்த நிலையில் நாங்கள் சொல்லக் கூடியததும் நீங்கள் சொல்ல அனுமதிப்பதும் வலியுறுத்துவதும் இதைத் தான் புத்தம் சரணம் சக்காமி! சங்கம் சரணம் கச்சாமி!! தர்மம் சரணம் கச்சாமி!!!
மகிந்தரே!- லண்டன் உங்களை வரவேற்கவில்லை: புத்தம் சரணம் சக்காமி! சங்கம் சரணம் கச்சாமி!! தர்மம் சரணம் கச்சாமி!!!: பூநகரான் குகதாசன்
பதிந்தவர்:
தம்பியன்
06 June 2012



0 Responses to மகிந்தரே!- லண்டன் உங்களை வரவேற்கவில்லை: புத்தம் சரணம் சக்காமி! சங்கம் சரணம் கச்சாமி!! தர்மம் சரணம் கச்சாமி!!!: பூநகரான் குகதாசன்