சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் மேலும் பலமடைந்து கொண்டிருக்கின்ற சூழலில் இந்தியாவுடனான நெருக்கம் குறைந்து வருகிறது. இதைச்சரி செய்வதற்கும் இலங்கையின் போக்கு தொடர்பாக கவலையை வெளிப்படுத்தவுமே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கடந்தவாரம் கொழும்பு வந்திருந்தார்.
இலங்கையில் மேற்கொள்ளும் திட்டங்களில் இருந்து மெல்ல மெல்ல இந்தியா வெட்டி விடப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் தான் அவரது பயணம் இடம்பெற்றிருந்தது.
பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள இந்தியா இணங்கியிருந்தது.
கடைசியாக அதிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளது இந்தியா.
அதேவேளை சீனாவுக்கு அதிகளவு திட்டங்களை தாரைவார்ப்பது தொடர்கதையாகியுள்ளது.
மொரகஹகந்த என்ற பாரிய நீர்த்தேக்கத்தை கட்டும் பணிக்கான ஒப்பந்தம் கூட அண்மையில் சீனாவுக்கே வழங்கப்பட்டது.
இவ்வாறாக சீன முதலீடுகள் இலங்கையில் அதிகரித்து வருவதை இந்தியாவும் அமெரிக்காவும் கவலையோடு பார்க்கின்றன.
இன்றைய நவீன உலகில் படைபலத்தை விட வலுவானது பொருளாதார வளங்களும் அதன் இருப்பும் தான்.
எங்கே பொருளாதார பலம் வலுவற்றுப் போகிறதோ அங்கே படைபலமும் வலிமையும் வலுவிழந்து போய்விடும்.
சுலபமாக அந்த நாடு தோற்கடிக்கப்பட்டு விடும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் தெற்காசியாவில் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் அமைந்துள்ளது.
இதன் கேந்திரத்தன்மை தான், இலங்கையில் முப்பதாண்டுகளாகப் போர் நீடித்ததற்கும், இன்றைக்கும் சிக்கல்கள் தீராமல் இருப்பதற்கும் காரணமாக இருக்கிறது.
இலங்கைத்தீவு உலகில் வேறு எங்கோ ஒரு மூலையில் இருந்திருக்குமேயானால், உண்மையில் தமிழர்களின் பிரச்சினை எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும்.
ஆனால் இந்தியாவின் காலடிக்குள் மேற்கு - கிழக்கு நாடுகளின் பயணப்பாதையில் இது இருப்பதால் தான் இத்தனை சிக்கல்களும் காணப்படுகின்றன.
விடுதலைப்புலிகளை அழிப்பதற்கான போரின்போது மிகத் தந்திரமாக எல்லா வழிகளிலும் உதவிகளை வழங்கத் தொடங்கிய சீனா, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டது.
அந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு போருக்குப் பிந்திய முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ளத் தொடங்கியது.
அம்பாந்தோட்டையில் விமான நிலையம், துறைமுகம், நுரைச்சோலையில் அனல் மின் நிலையம்,கொழும்பு துறைமுக விரிவாக்கம், வீதிகள் அமைப்பு, ரயில்பாதை புனரமைப்பு என்று எல்லா வழிகளிலும் சீன முதலீடுகள் அதிகரித்துள்ளன.
சீனா இலங்கையில் ஒரு இராணுவத் தளத்தை அமைத்துப் பெறக்கூடிய அனுகூலத்தை விட அதிகப்படியாக இந்த முதலீட்டுத் திட்டங்களின் மூலம் இலங்கையில் தனது இருப்பை உறுதி செய்திருக்கிறது.
ஆரம்பத்தில் சீன முதலீடுகள் தொடர்பான இந்தியாவின் எதிர்ப்பை சமாளிக்க இந்தியாவுக்கும் சில திட்டங்களை வழங்க முன்வந்தது இலங்கை.
அவ்வாறு வழங்கப்பட்டதே சம்பூர், காங்கேசன்துறை, பலாலி மற்றும் வடபகுதி ரயில்பாதை புனரமைப்பு என்பனவாகும்.
இவற்றில் வடபகுதி ரயில்பாதை புனரமைப்புத் திட்டமும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டமும் தான் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.
ஏனைய திட்'டங்கள் இழுபறியிலேயே உள்ளன.
முன்னரெல்லாம் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இலங்கை அரசின் பிரதிநிதிகள் அமைச்சர்கள் மாறிமாறி சமமான அளவு சந்தர்ப்பம் கொடுத்து பயணம் மேற்கொண்டனர்.
இப்போது நிலைமை அப்படியில்லை.
இந்தியா பக்கம் இலங்கை அமைச்சர்கள் யாரும் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.
ஆனால் சீனாவுக்கு கிரமமான பயணங்களை மேற்கொள்ளும் அமைச்சர்கள் உறவுகளை மேற்கொள்ளும் அமைச்சர்கள் உறவுகளை வலுப்படுத்தி வருகின்றனர்.
மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் அகழ்வுத் துண்டங்கள் அனைத்தையும் இந்தியா தமக்கே தருமாறு கோரியது.
ஆனால் அதற்கு இலங்கை இணங்கவில்லை.
புதிய கேள்விப்பத்திரங்களைக் கோரும் முடிவில் அரசாங்கம் உள்ளது.
இங்கு எண்ணெயவள ஆய்வில் ஈடுபட ரஷ்யா, வியட்னாம், சீனா போன்ற நாடுகள் கூட ஆர்வத்துடன் உள்ளன.
வேறு நாடுகள் கால் வைத்தால் அது தமக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியா கருதுவதால் தான் தம்மிடமே தரக் கோரியது.
இந்தநிலையில் அமெரிக்்க நிறுவனங்கள் இலங்கையின் எண்ணெய் மற்றும் சுத்திகரிப்பில் முதலீடு செய்ய ஆர்வம் கொண்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க தூதுவர் பதவியை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பவுள்ள பற்றீசியா புரெனிஸ் தான் இதனைக் கூறியுள்ளார்.
எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் இயற்கை எரிவாயு வளங்களில் முதலிடுவதில் அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகள் அதிகளவில் இடம்பெறும் என்றும்் அவர் கூறியுள்ளார்.
இது இந்தியாவுக்குப் போட்டியாக மன்னார் எண்ணெய் படுகையை அமெரிக்கா குறிவைக்கிறதா? என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் தற்போதைய நிலையில் இந்தியாவுடன் போட்டி போட்டுக் கொள்ளவோ, அமெரிக்கா முனையாது. இந்தநிலையில் இலங்கையில் அதிகளவு முதலிடும் அமெரிக்காவின் குறி என்னவென்பதை சுலபமாகவே ஊகிக்க முடிகிறது.
அதாவது இலங்கையுடன் நெருக்கம் காட்டும் சீனாவையும் ஈரானையும் அதனிடம் இருந்து தூரவிலக வைப்பது தான் அமெரிக்காவின் திட்டமாகும்.
சீன முதலீடுகளுக்கு நிகரான முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் இலங்கையில் தனது இருப்பை உறுதி செய்து கொள்வதே அமெரிக்காவின் ஒரு திட்டம்.
சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துக் கொடுத்தது ஈரான் தான். அங்கு ஏனைய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயை சுத்தகரிக்க முடியாது. இது தனது எண்ணெய் ஏற்றுமதியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மேற்கொண்ட தந்திரம்.
ஈரான் மீதான அமெரிக்காவின் எண்ணெய் ஏற்றுமதித் தடையை அடுத்து இலங்கையும் அதற்கு இணங்கி எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தது.
இதனால் அமெரிக்காவின் தடைகளில் இருந்து இலங்கைக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கம் கொஞ்சமும் குறையவில்லை.
றியோடிஜெனீரோவில் ஈரானிய ஜனாதிபதிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போது வெளியிடப்பட்ட கருத்துகள் இதனை எடுத்துக் காட்டுகின்றன.
இரு நாடுகளும் இணைந்து புதிய உலக ஒழுங்கை உருவாக்கப் போவதாக கூறியதும் மேற்கு நாடுகளைத் திமிர்பிடித்த நாடுகள் என்று வர்ணித்ததும் அமெரிக்காவுக்கு எத்தகைய உணர்வை ஏற்படுத்தியிருக்கும் என்பதை சொல்லிக் கொள்ளத் தேவையில்லை.
ஈரானை இலங்கையின் எண்ணெய் வளத்துறையில் இருந்து அகற்றுவதற்கு ஒரேவழி. அமெரிக்க நிறுவனங்களை முதலிடச் செய்வதுதான் என்று அமெரிக்கா புரிந்து கொண்டுள்ளது.
ஒரு பக்கத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தை திருகோணமலையில் இருந்து அகற்றும் முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ள அதேவேளை அமெரிக்கா இதற்குள் நுழைய முனைகிறது.
ஆக, மொத்தத்தில் இலங்கையில் பொருளாதார முதலீட்டுப் போர் ஒன்று உருவாகி வருகிறது. இதன் அடிப்படை நோக்கம் வெறுமனே பொருளாதார நலன்களை அடைவது மட்டும் அல்ல.
இலங்கை மீதான ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதும் தான்.
இந்த முதலீட்டுப் போரில் அமெரிக்காவின் கை ஓங்குமேயானால் ஈரான், சீனா, என இரண்டு காய்களை ஒரே நேரத்தில் அடித்து வீழ்த்தும்.
சுபத்ரா
adutha ilakku india thane... kai punnukku ethukku kannadi...?