ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில், இந்திய குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிடும் பிரணாப் முகர்ஜிக்கு மதிமுக ஆதரவளிக்காது என்றார் அந்தக் கட்சியின் பொதுச் செயலர் வைகோ.
மயிலாடுதுறைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வந்த வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தாவது:
மத்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள தவறியதுடன், இலங்கையில் போர் உச்ச நிலையில் இருந்தபோது சென்னைக்கு வந்திருந்த பிரணாப் முகர்ஜி, போர் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, போரை நிறுத்துவது எங்கள் வேலையில்லை எனக் கூறினார்.
ஆயுதங்களை வழங்கி ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரை நடத்தியதே இந்தியா தான் என்று ராஜபக்சவே சொல்கிறார். இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இதை மத்திய அரசு கண்டித்தது கூட கிடையாது.
இலங்கையில் பலாலி விமானதளத்தை புதுப்பிக்க இந்திய இராணுவம் உதவியபோது இராணுவ மந்திரியாக இருந்த பிரணாப் முகர்ஜியை சந்தித்து அதை தடுக்க முயற்சித்தேன். அப்போது இலங்கை நட்பு நாடு என்று சொன்னார். அதன் பின்னர் விமானத்தளம் புதுப்பிக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் செஞ்சோலை பகுதி தாக்கப்பட்டது.
ஆகையால், காங்கிரஸ் அரசுக்கும், குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் போட் டியிடும் பிரணாப் முகர்ஜிக்கும் மதிமுக ஆதரவளிக்காது. பிற அரசியல் கட்சிகளையும் அவருக்கு ஆதரவளிக்கக் கூடாது என வலியுறுத்துவோம். பி.ஏ. சங்மாவை ஆதரிப்பது தொடர்பான அறிவிப்புகள் சில தினங்களில் வெளியிடப்படும் என்றார்.
மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. அதனால் எங்கள் ஆதரவு யாருக்கு அளிப்பது என்று இது வரை முடிவு செய்யவில்லை. தமிழகத்திற்கும், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மதிமுக செயல்படாது.
இலங்கையில் உச்ச கட்ட போர் நடந்த போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியடும் பிரணாப் முகர்ஜியை மதிமுக ஆதரிக்காது.
பாஜக கூட்டணி ஆதரவு பெற்ற வேட்பாளர் பி.ஏ.சங்மா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளனர். எனவே, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் கலந்து ஆலோசித்த பின்பு எங்களது நிலையை அறிவிப்போம் என்றார் அவர்.
போரை நிறுத்துவது எங்கள் வேலையில்லை எனக் கூறிய பிரணாப்புக்கு மதிமுக ஆதரவளிக்காது! வைகோ
பதிந்தவர்:
ஈழப்பிரியா
02 July 2012
0 Responses to போரை நிறுத்துவது எங்கள் வேலையில்லை எனக் கூறிய பிரணாப்புக்கு மதிமுக ஆதரவளிக்காது! வைகோ