இந்தியாவில், பயிற்சி பெற வந்துள்ள சிங்கள விமானப்படையினரை வெளியேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
சிங்கள விமானப்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்கின்ற அக்கிரமத்தை, இந்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
தமிழ்நாட்டில், தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில், சிங்களவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதை அறிந்து, தமிழகத்தில் கண்டனமும், எதிர்ப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டது.
இந்தப் போராட்டம், சிங்களவர்களைத் தமிழகத்தில் இருந்து வெளியேற்றுவதற்காக மட்டும் அல்ல, இந்தியாவில் வேறு எங்கும் பயிற்சி கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான்.
கடந்த எட்டு ஆண்டுகளாக, சிங்கள விமானப்படைக்கு மிகப்பெரிய அளவில், இந்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது.
சிங்கள விமானப்படையை வலுவுடையதாக ஆக்கி, விடுதலைப்புலிகளை மட்டும் அல்லாத, போரில் ஈடுபடாத தமிழ் ஈழ மக்களை, பள்ளிக்குழந்தைகளை, வான்வெளித் தாக்குதலில் குண்டுவீசி அழிக்கின்ற விதத்தில், பயிற்சியையும், தொழில்நுட்பத்தையும், சக்தி வாய்ந்த ரடார் கருவிகளையும், இந்திய அரசு கொடுத்தது.
அதுமட்டுமில்லாமல், யாழ்ப்பாணத்தில் பலாலி விமான தளத்தை, இந்தியா தனது சொந்த செலவில் பழுது பார்த்துக் கொடுத்துள்ளது.
ஈழத்தமிழ் இனத்தையே அடியோடு கருவறுக்க, சிங்கள அரசு நடத்தி வந்த, இன்னமும் தொடர்கின்ற இன அழிப்புத் தாக்குதலுக்கு, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, முழு அளவில் உதவி வருகிறது.
எனவே, தாம்பரத்தில் கொடுக்கப்பட்ட பயிற்சியை, சாதாரண சிறிய நிகழ்வாக தமிழக மக்கள் எண்ணிவிடக் கூடாது.
ஈவு இரக்கம் இன்றித் தமிழ் மக்களை, இலங்கைத் தீவில் படுகொலை செய்த சிங்கள இராணுவத்தைச் சேர்ந்தவர்கள், விமானப்படையினர், இந்தியாவில் பயிற்சி பெறுவது என்பது, தமிழ் மக்களின் தலையில் மிதிக்கின்ற அராஜகம் மன்னிக்க முடியாத துரோகம்.
சிங்கள விமானப்படையினருக்கு பெங்களூரில் எலகங்கா விமானப்படைத் தளத்தில் தற்போது பயிற்சி கொடுக்கப்படுகிறது. அண்மையில், இந்திய-இலங்கைக் கடற்படைப் பயிற்சி, திருகோணமலை கடற்கரைக்கு அருகில் நடத்தப்பட்டது.
இலங்கைக் கடற்படைக்கு இரண்டு கப்பல்களையும் கட்டித் தருகின்ற வேலையிலும் இந்தியா ஈடுபட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு உண்மை வெட்டவெளிச்சமாகி விட்டது. சிங்கள அரசு நடத்திய இனக்கொலைக்கு, இந்திய அரசுதான் உடந்தை என்ற உண்மை அம்பலமாகி விட்டது.
இந்தியாவின் மத்திய அரசுக்குத் தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சி, அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளுமே, இந்தப் பழிக்குப் பொறுப்பாளிகள் என்பதை தமிழக மக்களும், இந்திய மக்களும் அறிந்து கொள்வார்கள்.
ஈழத்தமிழர் பிரச்சினையில் செய்து வருகின்ற தொடர் துரோகத்தை மத்திய அரசு இத்துடனாவது நிறுத்திக் கொண்டு, சிங்கள விமானப்படையினரை, இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும், இலங்கை விமானப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தோடு, இரகசியமாகச் செய்து உள்ள ஒப்பந்தங்களை, ரத்துச் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சிங்கள விமானப்படையினருக்கு பயிற்சியளிப்பது மன்னிக்க முடியாத துரோகம்! உடன் வெளியேற்றுக!: வைகோ
பதிந்தவர்:
தம்பியன்
07 July 2012
0 Responses to சிங்கள விமானப்படையினருக்கு பயிற்சியளிப்பது மன்னிக்க முடியாத துரோகம்! உடன் வெளியேற்றுக!: வைகோ