வவுனியா தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் படுகொலை தொடர்பில் அவரது தாயார் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளை பணயமாக பிடித்து வைத்த விவகாரத்தில், வவுனியா சிறைச்சாலையிலிருந்து மகர சிறைச்சாலைக்கு கொண்டு இடமாற்றம் செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் நிமலரூபன் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் அடித்து கொல்லபப்ட்டிருக்கலாம் என சந்தேகம் வலுப்பெற்றிருந்தது. இந்நிலையில் அவரது மரணம் குறித்து அவரது தயார் இவ்வாறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை, அவரது வீட்டுக்கு வந்த காவற்துறையினர், மகனுக்கு வருத்தம் கடுமையாக உள்ளது. அவர் உங்களை பார்க்க விரும்புகிறார் என கோரி மகர காவற்துறை நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
எனினும் மறு நாள் காலை வரை காத்திருக்குமாறு கூறி அருகில் விடுதி ஒன்றில் தங்கசெய்துள்ளனர். அடுத்தநாள் மீண்டும் மகர காவற்துறை நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சில பதிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதும், கடைசிவரை மகனை காட்டவோ, மகனுக்கு என்ன ஆனது என தெரிவிக்கவோ இல்லை. அவர் உயிருடன் இருப்பதாகவே தாயார் நம்பியுள்ளார். இறுதியில் காலை 10 மணியளவில் பெற்றோர் இருவரையும் ராகம வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது தான் நிமலரூபன் இறந்துவிட்டதும், அவரது கை, கால்கள் உடைந்திருப்பதும், நெஞ்சிலும், தலையிலும் காயம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காவற்துறையினர், ஓர் படிவத்தில் கையொப்பமிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தியுள்ளதுடன், பல முறை அவர்கள் கட்டாயப்படுத்தி அப்படிவத்தில் கையெழுத்திடுமாறு கோரியதாகவும் அதற்கு தான் மறுத்துவிட்டதாகவும் தாயார் கூறியுள்ளார்.
நாங்கள் கையொப்பம் வைப்பதென்றால், எமது சட்டத்தரணியுடன் வருகிறோம் என தெரிவித்து விட்டோம். பின்னர் ஒரு இடத்திற்கு சென்று இது யு.என்.எச்.சி.ஆர் படிவம். இங்கு பதிவு செய்யுங்கள் என்றனர். பொலிஸ் எனும் பெயர்ப்பலகை போட்ட இடத்தில் யு.என்.எச்.சி.ஆர் எப்படி இருக்கும் என நாங்கள் பதில் கேள்வி கேட்டோம். மேலும் சிறைச்சலையிலிருந்து கொண்டு வந்த ஒருவரை சடலமாக நாங்கள் பெற முடியாது. நீதிமன்றமும், சிறைச்சாலையுமே இதற்கு பொறுப்பு. நீங்கள் சடலத்தை வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றுங்கள். அங்கு கையொப்பம் வைத்து எடுக்கிறோம் என தெரிவித்துவிட்டோம்.
அதன் பின்னரும் அவர்கள் கையொப்பம் வேண்டுவதிலேயே குறியாக இருந்தனர். வைத்தியர் என ஒருவரை காட்டி அவருக்கு முன்னர் கையொப்பம் இடுமாறு வற்புறுத்தினர். எங்களை சூழ சிங்கள மொழி பேசும் போலிஸாரே அதிகமாக நின்றனர்.
பின்னர் எங்களை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு நீதிபதி, சடலத்தை வவுனியாவுக்கு கொண்டு செல்ல முடியாது. இங்கு தான் அடக்கம் செய்ய வேண்டும் என கூறிவிட்டார்.
நாம் சடலத்தை எங்களது பிள்ளையை மீண்டும் வவுனியாவுக்கு கொண்டு வந்து தாருங்கள் என மன்றாடினோம். திங்கட்கிழமைக்குள் சடலத்தை கொழும்பில் அடக்கம் செய்யாவிடின், நாங்களே அடக்கம் செய்துவிடுவதாக பொலிஸார் கூறிவிட்டனர்.
எனது மகன் மாரடைப்பால் இறக்கவில்லை. நல்ல ஆரோக்கியமாகவே இருந்து வந்தார். அவருக்கு நானே வீட்டிலிருந்து உணவு கொண்டு போய் கொடுத்து வந்தேன். அப்போது எனக்கு ஏதும் நடந்துவிட்டால் நீங்கள் உயிருடன் இருந்துவிடாதீர்கள். உங்களை இங்கு யாருமே பார்க்க மாட்டார்கள். வயது போன காலத்தில் கஷ்டப்பட்டுவிடாதீர்கள் என அவன் தெரிவிப்பான். எனது இறுதி கிரியைகளை எமது வீட்டில் வைத்து செய்ய சடலத்தை பெற்றுத்தாருங்கள் என கண்ணீர் மல்க தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிமலரூபனின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்த இரா.சம்பந்தன்
இதேவேளை நிமலரூபனின் மரணம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தாக்குதல் காரணமாக உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியின் உடலை அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கவோ, மரணம் தொடர்பான மருத்துவப்பரிசோதனையை அறிக்கையின் தகவல்களையே இதுவரை வெளியிடவில்லை என இதன் போது அவர் தெரிவித்துள்ளார்.
உடனடியாக பதில் வழங்க முடியாது : இலங்கை அரசு
இதற்கு பதில் அளித்துள்ள அரசு தரப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இந்த விடயம் முன்னரே பாராளுமன்றத்திற்கு தெரியப்படுத்தப்படவில்லை. இதனால் உடனடியாக அரசாங்கத்தின் சார்பில் பதில் வழங்க முடியாது. பிரிதொரு தினத்தில் இது தொடர்பான பதிலை விரைவில் பதில் அளிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
வவுனியா சிறைச்சாலையில் இருந்து மகர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த கைதியின் மரணம் தொடர்பாக இறுதியான முடிவுக்கு வரவேண்டிய அவசியமில்லை எனவும் அவரது சடலத்தை பொறுபேற்க எவரும் இதுவரை முன்வரவில்லை என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நேற்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கைதியின் மரணம் தொடர்பான மருத்துவப் பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
0 Responses to நிமலரூபனின் மரணம் தொடர்பில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்