தற்போது ஆப்கானை முன்னேற்றுவதற்கான மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்யோவில் பெருமெடுப்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆப்கான் அதிபர் ஹர்மீட் கார்சாய் உட்பட 70 நாடுகள், பெருந்தொகையான சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளன.
ஆப்கானுக்கு வழங்கப்படும் நிதி உதவியானது அந்த நாட்டின் ஜனநாயக மலர்ச்சி, பெண்கள் உரிமை போன்றவற்றில் பாரிய முன்னேற்றங்களை ஏற்படுத்தும் என்று மாநாட்டுக்கு தலைமையேற்ற ஐ.நா செயலர் பான் கி மூன் கருத்துரைத்தார்.
சர்வதேச சமுதாயம் இந்த மாநாட்டில் ஆப்கானுக்கு 97 பில்லியன் குறோணரை வழங்க முன் வந்துள்ளது.
எதிர் வரும் 2014 ல் நேட்டோ படைகள் ஆப்கானை விட்டு வெளியேறிவிடும், அதன் பின்னர் ஆப்கான் படைகள் தலபான்களுக்கு எதிராக சொந்தக் காலில் நின்று, நாட்டை சுய தன்மையுடன் இயங்க வைக்க இந்தப் பணம் வழங்கப்படுகிறது.
மேலும் பெரும் பொருளாதார நெருக்கடி நிலவினாலும் ஆப்கான் படைகளுக்கான சம்பளத்தை வழங்க தயார் என்று டென்மார்க் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாடுகள் உட்பட ரஸ்யா, சீனாவில் இருந்து போகும் பணம் இல்லாவிட்டால் ஆப்கான் அரசு அத்திவாரத்தோடு கொட்டுப்பட்டு விழுந்துவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
சர்வதேச உதவியில் நிற்கும் ஓர் ஒட்டுண்ணி நாடுதான் ஆப்கானே அல்லாமல் அது ஒரு நிஜமான நாடல்ல என்றும் ஆய்வாளர் கூறுகிறார்கள்.
தற்போதய அதிபர் ஹர்மீட் கார்சாயின் ஆட்சியே மிகப்பெரும் ஊழலின் சுரங்கமாக உள்ளது, உலகின் மூன்றாவது பெரிய ஊழல் நாடென்று ஆப்கானை அழைக்கிறார்கள்.
ஜப்பானில் நடைபெறும் மாநாடு காடு மலை என்று பேசினாலும் ஆப்கான் மக்கள் அதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
வழங்கப்படும் 97 பில்லியன் குறோணரும் வழமைபோல ஊழல் பேர்வழிகளின் பாக்கட்டுக்குள் போவதே அல்லாமல் மக்களுக்கு இதனால் யாதொரு பயனும் கிடையாது என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள்.
தற்போது தலபான்களின் நீதிமன்றமும் அரச நீதி மன்றுக்கு இணையாக செயற்படுகிறது, அரசின் ஊழல் மிக்க நீதிமன்றுகளின் தீர்ப்பு வர பலகாலம் ஆகும் ஆனால் தலபான்கள் உடனடியாக பணமின்றி தீர்ப்பு வழங்குகிறார்கள்.
இதனால் தலபான்களின் செல்வாக்கை வீழ்த்த முடியாமலிருக்கிறது.
அதேவேளை ஆப்கானின் பெண் விடுதலை என்பது வெகு தூரத்தில் உள்ள விவகாரம் ஐ.நா செயலர் கொக்கரிப்பது போல அது வெகு பக்கத்தில் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
ஆப்கான் தென்னாசியாவின் மலர்ந்துள்ள இன்னொரு துயரமாகும், 97 பில்லியன் குறோணரால் அந்தத் துயரத்தை துடைக்க முடியுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
வழங்கப்படும் 97 பில்லியனையும் பங்கிட்டு முடிக்க தொண்டு நிறுவனங்கள் போயிருப்பதும் கவனிக்கத்தக்கது.
சர்வதேச உதவி என்பது சுண்டங்காய் காற் பணம் சுமை கூலி முக்காற் பணம் என்பது போன்ற சூழ்ச்சிகள் மலிந்த விடயமாகும்.
அலைகள்
0 Responses to ஆப்கானுக்கு 97 பில்லியன் குறோணர் உதவி