Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கர்நாடக முதல்வராக பி.எஸ். எடியூரப்பா இருந்தபோது அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியாயின. இதையடுத்து முதல்வர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக டி.வி. சதானந்த கவுடா முதல்வராக நியமிக்கப்பட்டார்.

சதானந்த கவுடா மீது எந்த குற்றச்சாட்டும் எழாத நிலையில் அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எடியூரப்பா கோஷ்டியினர் கோரி வந்தனர். அவர்களது கோரிக்கைக்கு பா.ஜ.க. மேலிடம் செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து சதானந்த கவுடாவை நீக்கக் கோரி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் 9 பேர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர். இதனால் கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து ராஜிநாமா கடிதங்களைத் திரும்பப் பெற்றுவிட்டு புதுடெல்லி வந்தால் கோரிக்கையை பரிசீலிப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் வாக்குறுதி அளித்திருந்தது.

அதன்படி, பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் நிதின் கட்கரி, எல்.கே. அத்வானி, ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், தர்மேந்திர பிரதான் ஆகியோர் கட்கரி வீட்டில் கர்நாடக விவகாரம் பற்றி ஆலோசனை நடத்தினர். பாஜக தலைவர் நிதின் கட்காரி இல்லத்தில் இன்று (08.07.2012) காலை இந்த ஆலோசனை நடைபெற்றது. அப்போது சதானந்த கவுடாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டரை நியமிப்பதென முடிவு செய்யப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கர்நாடக முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சதானந்தா கவுடா. ராஜினாமா கடிதத்தை பாஜக தலைவர் நிதின் கட்காரியிடம் அளித்தார். கர்நாடக மாநிலத்தில் புதிய முதல் அமைச்சர் யார் என்பதை விரைவில் பாஜக தலைமை அறிவிக்கும்.

முன்னதாக கட்சி மேலிடத்தின் அழைப்பின் பேரில் சதானந்த கவுடா 07.07.2012 அன்று பிற்பகலில் புதுடெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு கர்நாடக மாளிகையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

கட்சியின் முடிவு எதுவாக இருந்தாலும் அதை ஏற்பேன். முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டாலும், அதற்கு கட்டுப்பட்டு ராஜிநாமா செய்யத் தயார். கர்நாடகத்தின் 123 வட்டங்களில் வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில், அரசியல் குழப்பங்கள் நீடிப்பது மாநில நிர்வாகத்தைச் சீர்குலைக்கும். எனவே, முதல்வர் பதவியில் இருந்து என்னை நீக்குவதா அல்லது முதல்வராக நானே தொடர்வதா என்பது பற்றி உடனடியாகத் தீர்மானிக்க வேண்டும். இந்தக் கருத்தை கட்சி மேலிடத்திடம் வலியுறுத்துவேன் என்றார்.

0 Responses to கர்நாடக முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சதானந்தா கவுடா!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com