மயிலிட்டி மக்கள் 1990ஆம் ஆண்டிலிருந்து தமது கிராமத்திலிருந்து இராணுவ நடவடிக்கையின் காரணமாக வெளியேற்றப்பட்டு, இன்றுவரை அங்கு சென்று மீளக் குடியேற முடியாதநிலை நிலவுவது நாம் அனைவரும் அறிந்ததே.
இதனால் மயிலிட்டி மக்கள் நீண்ட காலமாக தமது வாழ் வாதாரங்களை இழந்து, பல துன்பங்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள்.
யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களுக்கு மேல்ஆகிவிட்ட போதிலும், இந்த மக்களுக்கு எதுவித விடிவும் ஏற்படவில்லை. அம் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
அவர்களின் இன்னல்கள் தொடர்கின்றன. அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்து நிற்கும் இராணுவம் அங்கிருந்து வெளியேறும் என்பதோ, மக்கள் தமது பகுதிகளுக்குச் சென்று மீளக் குடியேற முடியுமோ என்பதெல்லாம் தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
இத்தகைய பின்னணியில், ஆதரவற்று, தமது குரலை வெளிக்கொண்டு வர முடியாதுள்ள அம்மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவது தமது தலையாய பணி என்பதை உணர்ந்த புலம் பெயர் தமிழர் குழாம் செயற்படத் தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.
இடம்பெயர்ந்து அல்லல் பட்டு வாழும் அந்த மக்களுக்கு ஆதரவாக கனடாவில் இயங்கி வரும் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் அண்மையில் இந்த விடயம் தொடர்பான மனு கனடாவுக்கு வருகை தந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் சிறீதரன் அவர்களிடமும் கையளித்து நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு. விசுவநாதன் உருத்ரகுமாரன் அவர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.
நீண்டகாலமாக தமது காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் இன்னல்கள், பொருளாதாரப் பிரச்சனைகள் யாவற்றையும் விளக்கி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
மலிட்டிக் கிராமம் கடல் வளம், விவசாயத்திற்கு ஏற்ற மண்வளம், பனை வளம் யாவும் நிறைந்த ஒரு கிராமம் ஆகும்.அத்தகைய நிலத்தினை ஆக்கிரமித்துள்ள இராணுவம், எமது மக்களின் வாழ்வாதாரங்களை மறுத்து வருகின்ற அதே வேளையில், எங்கள் நிலங்களில் இராணுவத்தினர் விவசாயம் செய்கின்றார்கள் என்பதும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தினர் திரு.சிவஞானம் சிறீதரன் அவர்களை நேரடியாகச் சந்தித்து அவரது சேவையைப் பாராட்டியதோடு, இந்த மனுவையும் அவரிடம் கையளித்தனர்.
இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம், மண்பறிப்புக்கு ஏதிரான போராட்டம் என்பன பற்றி புலம் பெயர் தமிழர் குழாம் வாளாது இருக்க முடியாது. குரல் அற்று, ஆதரவின்றி வாடும் எம் உறவுகளின் நீதிக்கான குரலாய் நாம் செயற்படுவோம் எனும் சீரிய சிந்தனையோடு மயிலிட்டி மக்கள் ஒன்றியம் செயல்படுவது வரவேற்கத்தக்கதாகும்.
இந்தச் செயற்பாடு மயிலிட்டி ஒன்றியத்தோடு நின்று விடக் கூடாது. இந்தப் பிரச்சனைகள் தமிழீழம் எங்கும் பறந்து கிடக்கும் எமது கிராமங்கள் பலவற்றுக்கும் பொருந்தும்.
எனவே, ஏனைய கனடாவாழ் மக்களும் கிராம ஒன்றியங்களும் எம் உறவுகளின் நீதிக்கான குரலாய் செயல்படவேண்டும் என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது.
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரதமர் திரு. உருத்திரகுமாரன் அவர்களுக்கு அனுப்பியுள்ள மனுவின் பிரதியும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
காணி நிலம் அபகரிப்புக்கு எதிரான மனு மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தினால் கையளிப்பு
பதிந்தவர்:
தம்பியன்
09 July 2012
0 Responses to காணி நிலம் அபகரிப்புக்கு எதிரான மனு மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தினால் கையளிப்பு