பொதுமக்களுக்கு தெரியும் வகையில் என்னை விடுதலை செய்துள்ளார்கள். இருப்பினும் என்னுடைய ஜனநாயக உரிமைகள் இன்னமும் கிடைக்கப்படவில்லை. அந்தவகையில் நான் இன்னமும் சிறைக்கைதியாகவே உள்ளேன்' என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இராணுவத்தில் இருந்த போது அரசியலில் ஈடுபட்டார் என்று பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல்முறையிட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்த சரத் பொன்சேகா, அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
'நான் இராணுவத்தில் இருந்த போது அரசியலில் ஈடுபட்டேன் என்று என் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதற்கு எதிராக மேன்முறையீடு செய்யவே இன்று நாம் நீதிமன்றம் வந்துள்ளோம்.
நியாயம், தர்மம் மற்றும் நீதிமன்ற சுயாதீனத்துவம் ஆகியவற்றின் மீது நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். அதனால், எமக்கான நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மோசடிகள், கொடுமைகள், கொலைகளுக்கு பின்னால் இந்த அரசாங்கத்தின் கீழ் மட்டத்திலுள்ள அரசியல்வாதிகளே காணப்படுகின்றனர்.
கஹாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற தாய், மகள் படுகொலை, தங்காலையில் வெளிநாட்டவர் கொல்லப்பட்டமையும் பெண்ணொருவர் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமையும், அக்குரஸ்ஸ மற்றும் கட்டுவன ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுக்கு பின்னால் மேற்படி அரசாங்கத்தின் கீழ் மட்ட அரசியல்வாதிகளே காணப்படுகின்றனர்.
இவர்களுக்கான உரிய தண்டனைகள் கிடைக்கப்பெறாதா என்பதே பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது. இவர்களை இந்த அரசாங்கம் எப்படியாவது காப்பாற்றிக் கொள்கிறது.
இவ்வாறான நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க எதிர்காலத்தில் நாம் போராடுவோம். எமது போராட்டங்களின் மூலம் இந்த அசாதாரணமான நிலைமைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்போம். அதற்கு பொதுமக்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய எனக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவில்லை. எனக்காக ஜெனரல் பதவியும் ஓய்வூதியமுமே இந்த நீதிமன்றத்தின் மூலம் பறிக்கப்பட்டது. என்னை சிறையிலிருந்து விடுவிக்க ஜனாதிபதி முற்பட்டார். உண்மையில் மக்களுக்கு தெரியும் வகையில் என்னை விடுதலை செய்துள்ளார்கள்.
இருப்பினும் என்னுடைய ஜனநாயக உரிமைகள் இன்னமும் கிடைக்கப்படவில்லை. அந்தவகையில் நான் இன்னமும் சிறைக்கைதியாகவே உள்ளேன்' என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.
0 Responses to நான் இன்னமும் சிறைக் கைதியாகவே உள்ளேன்!: சரத்