2-ஜி அலைக்கற்றை வழக்கில் தொடர்புடைய மகள் கனிமொழி, பேரன்கள் மாறன் சகோதரர்களைக் காப்பாற்றும் நோக்கில், மத்திய அரசை மிரட்டவே கருணாநிதி டெசோ மாநாடு நடத்துகிறார், தவிர ஈழத் தமிழர்களுக்காக அல்ல என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் பேசியது:
சென்னையில் ஆகஸ்ட் 12-ம் தேதி ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு (டெசோ) கருணாநிதி தலைமையில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில், மத்திய அமைச்சர்கள் சரத் பவார், பரூக் அப்துல்லா, ஐக்கிய ஜனதாதளம் தலைவர் சரத் யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், இலங்கையைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
அகில இந்திய அளவில் உள்ள தலைவர்களைத் திரட்டி கருணாநிதி ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக மாநாடு நடத்துகிறார்.
கடந்த 2009-ம் ஆண்டு இவர் முதல்வராக பதவி வகித்த காலத்தில்தான் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
அப்போது, அகில இந்திய அளவில் தலைவர்களைத் திரட்டி தமிழ் மக்களைக் காப்பாற்ற கருணாநிதி முன்வரவில்லை.
தற்போது 3 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் அணியில் இல்லாத தலைவர்களை அழைத்து மாநாடு நடத்துகிறார்.
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 238 கோடியும், சன் தொலைக்காட்சிக்கு ரூ. 500 கோடியும் லஞ்சப் பணமாக கொடுக்கப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
இப்பிரச்சினையில் தொடர்புடைய மகள் கனிமொழி, பேரன்கள் மாறன் சகோதரர்களைக் காப்பாற்றுவதற்காகவே, காங்கிரஸ் கட்சியுடன் முரண்பட்டு நிற்கும் தலைவர்களைத் திரட்டி மாநாடு நடத்துகிறார் கருணாநிதி.
இம்மாநாடு மத்திய அரசை மிரட்டவே தவிர, ஈழத் தமிழர்களுக்காக அல்ல.
இந்த மாநாட்டில் தனி ஈழம் தொடர்பாக தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாது என்று அவர் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல்வராக கருணாநிதி பதவி வகித்தபோது ஈழப் பிரச்சினை தொடர்பாக மாநாடு நடத்தத் தடை விதித்தார். அதை மீறும்போது கைது செய்து சிறையில் அடைத்தார்.
உலகத் தமிழர் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த இலங்கை நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தைத் தடுத்து நிறுத்தினர்.
மருத்துவச் சிகிச்சைக்காக பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் தமிழகம் வந்தபோது தடுத்து நிறுத்தியதற்குக் காரணமாக இருந்தார்.
இச்சம்பவங்களை மறக்க முடியாது. என்றார் பழ் நெடுமாறன்.
மத்திய அரசை மிரட்டவே டெசோ மாநாடு! ஈழத்தமிழருக்காக அல்ல!-பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு
பதிந்தவர்:
தம்பியன்
29 July 2012



0 Responses to மத்திய அரசை மிரட்டவே டெசோ மாநாடு! ஈழத்தமிழருக்காக அல்ல!-பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு