இலங்கைக் கடற்படையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரது அரசியல் தஞ்சக் கோரிக்கை கனடாவில் நிராகரிக்கப்பட்ட விவகாரம், இலங்கைப் படையினருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களின் பாதகமான விளைவுகளை வெளிப்படுத்தியுள்ளது.
கொமடோர் நடராஜா குருபரன் இலங்கைக் கடற்படையின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிய அதிகாரி.
போர் முடிவுக்கு வந்த கையோடு 2009 யூனில் ஓய்வுபெற்ற அவர் கனடாவுக்குச் சென்று அடைக்கலம் கோரியிருந்தார்.
தான் கனடாவில் அரசியல் தஞ்சம் கோரியதற்கு அவர் மூன்று தரப்புகளில் அச்சுறுத்தல் இருப்பதே காரணம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதில் முதலாவது இலங்கை அரசதரப்பு. இரண்டாவது அரச ஆதரவு ஆயுதக்குழு. மூன்றாவது விடுதலைப்புலிகள்.
விடுதலைப்புலிகளுக்கு உதவுவதாக அரசதரப்பு சந்தேகித்து தன்னை அரச புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் நடமாட்டங்களை கண்காணித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அடுத்து அரச ஆதரவு பெற்ற கருணா குழுவினர் தனது மனைவியைக் கடத்திக் கப்பம் கோரி மிரட்டியதாகவும் கூறியிருந்தார்.
போரின்போது விடுதலைப்புலிகள் தன்னிடம் உதவி கோரியதாகவும் அதற்கு மறுத்துவிட்டதால் அவர்களாலும் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கனடிய அதிகாரிகளிடம் கூறியிருந்தார் கொமடோர் குருபரன்.
இந்த வழக்கில் போர்க்குற்றங்களைப் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கைக் கடற்படையில் பணியாறிறியவர் என்ற வகையில் இவரது அரசியல் தஞ்சக் கோரிக்கையை நிராகரித்தது சரியே கனடிய நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.
இந்தளவுக்கும் அவர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் பங்கெடுக்கவும் இல்லை. போர் சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடவுமில்லை.
அவர் ஒரு தொழில்நுட்ப அதிகாரி அவ்வளவு தான்.
1980களின் தொடக்கத்தில் வடக்கில் ஜெயசாகர என்ற கடற்படைக் கப்பலில் பணியாற்றிய அவர் விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொள்ளலாம் என்ற அச்சத்தினால் தென்பகுதிக்கு மாற்றப்பட்டவர்.
அதாவது இறுதிப் போருடன் அவருக்கு நேரடித் தொடர்பு இல்லாதபோதும் கனடிய நீதிமன்றம் அவரையும் ஒரு போர்க் குற்றவாளி போலத்தான் பார்த்துள்ளது.
இந்த வழக்கில் கொமடோர் குருபரன் என்ற அதிகாரிக்கு எதிராக அளிக்கப்பட்டது ஒரு தனிப்பட்ட தீர்ப்பல்ல.
இலங்கை கடற்படை போர்க்குற்றச்சாட்டுக்களை சுமந்து நிற்கும் ஒரு அமைப்பு என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதுதான் முக்கியமான விவகாரம். இந்த நீதிமன்றத் தீர்ப்பு கனடாவுக்குள் நுழைவதற்கு எந்த ஒரு இலங்கைப் படை அதிகாரிக்கும் அனுமதி மறுப்பதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிக்கட்டப் போரின்போது இலங்கைப் படைகள் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை என்று அரசாங்கம் மறுத்து வந்தாலும் அதை சர்வதேச சமூகம் ஏற்கவில்லை.
அத்தகைய சூழலில் வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்றில் அளிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு இலங்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்று.
ஒரு நாட்டின் அரசாங்கம் இந்த முடிவை அறிவித்திருந்தால் அந்தக் கொள்கை ஆட்சி மாற்றங்களின் போது காலப்போக்கிலோ, மாற்றத்திற்குள்ளாக வாய்ப்புள்ளது.
ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று ஆவணமாகவே இருக்கும்.
தாம் பொதுமக்களுக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படுத்தாமலேயே போரை நடாத்தியதாக அரசாங்கம் இதுவரை கூறிவந்தது.
போரில் பொதுமக்கள் ஒருவர்கூட கொல்லப்படவில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் பலமுறை பகிரங்கமாக கூறியிருந்தனர்.
ஆனால் இப்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் போரை எப்படி நடத்த முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் கோத்தபாய ராஜபக்ச.
அதாவது போரில் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்ற உண்மை அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில்தான் கனடிய நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இது போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை நடத்தி நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை அரசிற்கு மற்றொரு அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.
ஏனென்றால் போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து நியாயமான விசாரணைகளை நடத்தி உரிய முறைப்படி நடவடிக்கை எடுக்கத் தவறினால் இதுபோன்ற தீர்ப்புகள் பலவற்றிற்கு வழிகோலலாம்.
அவ்வாறா தீர்ப்புகள் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகள் சர்வதேச அளவில் கொமடோர் குருபரனைப் போலவே இலங்கைப் படையினர் அனைவரையும் ஓர் குற்றவாளிகளாகவே அடையாளப்படுத்திவிடும்.
அது ஐநா அமைதிப்படை போன்றவற்றில் அவர்கள் பணியாற்றுவதற்கு இடையூறாக அமையும்.
ஐநா அமைதிப்படைக்கு தனது படையினரை அனுப்புவதன் மூலம் இலங்கை அரசாங்கம் கணிசமான வருமானத்தைப் பெறுகிறது.
அத்துடன் அரச படையினருக்கும் குறிப்பிடத்தக்க வருமானம் கிடைக்கிறது.
அதைவிட போர்க் குற்றச்சாட்டுகள் தீவிரமடைவதால் வெளிநாடுகளில் பயிற்சி பெறும் வாய்ப்புகளை இலங்கைப் படையினர் இழக்கும் நிலையும் ஏற்படலாம்.
இத்தகைய நீண்டகால நோக்கங்களுக்காக போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு மென்போக்கான விசாரணையையேனும் நடத்தும் நிலை இலங்கை அரசுக்கு உருவாகலாம்.
ஏற்கனவே போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க மேஜர் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தலைமையில் இராணுவ நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.
அதன் பின்னர என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது.
ஆனால் அரசாங்கம் இதேநிலையில் நீண்டகாலத்திற்கு நீடித்திருக்க முடியாது.
ஐநா மனிதஉரிமைகள் பேரவையில் நவம்பர் முதலாம் திகதி நடைபெறவுள்ள பூகோள கால மீளாய்வின் போதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22வது அமர்விலும் போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை பதிலளித்தேயாக வேண்டும்.
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து இராணுவ நீதிமன்றத்தினால் நடத்தப்படும் விசாரணைகள் மூலம் சர்வதேச அளவில் படிந்துள்ள கறைகளை துடைக்க முடியாது.
அதற்குமப்பால் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முறையான விசாரணைகளை நடத்துவதை உறுதி செய்வதன் மூலம்தான் கனடிய நீதிமன்றம் குத்தியள முத்திரையை அழிக்கமுடியும்.
சர்வதேச சமூகம் இலங்கையிடம் எதிர்பபார்ப்பது அதைத்தான்.
சுபத்ரா



0 Responses to புதிய வழியில் மிரட்டும் போர்க் குற்றச்சாட்டுக்கள் - சுபத்ரா