கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்பது தமிழ்ப் பழமொழி. கண்ணுள்ள போது சூரிய நமஸ்காரம் செய்யாமல் விட்டுவிட்டு, கண் தெரியாமல் போன பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வதென்ற பொருளை இப் பழமொழி வெளிப்படுத்தி நின்றாலும், அதற்குள் இருக்கக் கூடிய ஆழமான உட்கருத்தை எவரும் புரிந்து கொண்டு செயற்படுவதாக இல்லை.
இதில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் ஒருவர். கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போதே வன்னி யுத்தம் இடம்பெற்றது.
அதே நேரம் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய ஆட்சியே மத்தியிலிருந்தது.
தமிழகத்தின் முதல்வர் என்ற தகுதிப்பாடும் தி.மு.க வின் பலத்துடன் கூடிய மத்திய அரசென்ற அதிகாரமும் இருந்த வேளையில் கலைஞர் கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக செய்யக் கூடியது ஏராளம்.
ஆனால் அந்தக் காலத்தில்தான் வன்னிப் போர் நடந்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்தி வரலாற்றில் பதிவாகியது.
இந்தப் பதிவை இல்லாதொழிக்க கலைஞர் எத்தனை மாநாடுகளை கூட்டினாலும் அது சரி வராது என்பது தெரிந்த விடயம்.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது மெளனமாக இருந்த கருணாநிதி இப்போது. வெறுமையாகி வீட்டுத் துன்பமும் வாட்டுங்கால் ஈழத்தமிழர்களின் நெட்டூரத்தை கையில் எடுத்துக்கொண்டு, உட் பூசலைச் சந்தித்து வரும் தன்கட்சிக்கும் குடும்பத் தகராற்றுக்கும் விமோசனம் தேட முற்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கலைஞர் எதைக் கதைத்தாலும் அதற்கு பதிலடி கொடுக்க அரசியல் கட்சிகள் தயாராகிவிட்ட நிலையில், ஈழத்தமிழர்களின் விடயத்தை எடுப்பதே இப்போதைக்கு ஒரேவழி என்று அவர் நினைத்துக் கொண்டார்.
ஆனாலும் அவரின் உண்ணாவிரத நாடகம், கலைஞர் கருணாநிதி கதைவசனத்திற்கும் மட்டுமல்ல, சிறந்த நடிகர் என்பதையும் தமிழ் உலகம் ஐயம் தெளிவுறக் கண்டுகொண்டது.
அரசியல் களத்தில் இன்னொரு சந்தர்ப்பம் இல்லை என்பதை தெளிவாகக் புரிந்துகொண்ட அவர் குறைந்தது தனது மனைவி, துணைவி ஆகியோரின் தொந்தரவில் இருந்தும் அவர்களின் ஊடாக தனக்குப் பிறந்த பிள்ளைகளின் கழுத்தறுப்புப் போட்டியில் இருந்தும் தப்பித்துக்கொள்ள ஈழத்தமிழர்களின் விடயத்தை நல்லதொரு நாடகப் படைப்பாக ஆக்கிக்கொள்வது என்று முடிபெடுத்தார்.
ஈழத்தமிழர்களுக்காக தான் இருந்த உண்ணாவிரதத்தை கைவிட்டதற்கு அவர் கூறிய காரணம் இருக்கிறதே, அது தான் கலைஞரின் மிக மோசமான - மிக அபத்தமான - மிக உச்சமான பொய்யும் நடிப்பும் நாடகமுமாக இருக்க முடியும்.
உண்ணாவிரதம் இருக்கும் போதே எத்தனை மணிக்கு அதனை முடிபுறுத்திக் கொள்வது என்று தீர்மானித்துக் கொண்டவர் கலைஞர்.
தனது உண்ணாவிரதத்தை முடிபுறுத்திக் கொள்வதற்காகவும், தான் உண்ணாவிரதம் மேற் கொண்டதனால் வன்னியுத்தம் நிறுத்தப்பட்டு விட்ட தாகவும் பொய்ப்பிரசாரம் செய்தவர் அவர்.
இத்தகைய ஒருவர் இப்போது, நம்பி உண்ணாவிரதத்தை கைவிட்டதாக கூறுவது ஈழத்தமிழர்களின் துயர மேடையில் கலைஞர் தனக்கொரு வெற்றிப் படைப்பை தயாரித்துள்ளார் என்றே கூற வேண்டும்.
0 Responses to ஈழத் தமிழர்களின் துயர மேடையில் கருணாநிதியின் வெற்றிப் படைப்பு