நடைபெற்று முடிந்த டெசோ மாநாட்டின் கலைஞர் கருணாநிதி அவர்கள் நிறைவுரையாற்றிய போது இலங்கைத் தமிழ்மக்களின் ரணத்தை ஆற்ற அவர்களுக்கு முதலுதவி அளிக்க வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய கருணாநிதி,
’ஈழத்தமிழர்களின் இனிய விடியலை காண்பதற்காக களத்தில் நின்றும், தியாக வேள்விகள் புரிந்தும், உயிருற்ற கல்லறைகளாக மாறிவிட்ட மாவீரர்களாம் தியாக தங்கங்களுக்கு என் வீர வணக்கத்தைச் செலுத்தி இந்த உரையைத் தொடங்குகிறேன்.
ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்புக்காக இங்கு மாநாடு நடத்துகிறோம். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை, தமிழகத்தில் எல்லா இடங்களிலும் டெசோ தொண்டர்கள், செயலாளர்கள் ஊருக்கு ஊர் சென்று ஆங்காங்கே நடைபெற இருக்கின்ற பொதுக்கூட்டங்களிலே ஈழத்தமிழர்களின் அவலநிலை, அவர்களுக்கு நாம் தர வேண்டிய பாதுகாப்பு, அவர்களுக்கு நாம் நீட்டவேண்டிய உதவிக்கரம் பற்றி பேசி, அவர்களுக்கு பேராதரவை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாம் இந்தியாவை வலியுறுத்த வேண்டும் என்று இங்கு பேசிய தலைவர்கள் எல்லாம் கேட்டுக் கொண்டார்கள். காலையில் பேசியவர்களும், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களும், நண்பர்களும் எடுத்துரைத்தார்கள். மாலையில் பேசிய திருமாவளவன், இலங்கை பிரச்சினையில் இந்திய அரசுக்கு அழுத்தத்தைத் தர வேண்டும் என்று பலமுறை இங்கே எடுத்துரைத்தார்.
நான் அவருக்கு ஒன்றை சொல்வேன். அண்டை நாடான இலங்கையில் அமைதியும், சமத்துவமும் நிலவுவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது. பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், மொழிகளை உள்ளடக்கி ஜனநாயக மரபுகளை பாதுகாத்து வரும் இந்திய அரசு, அண்டை நாடான இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகளை கண்டும் காணாமல் இருப்பது ஏனென்ற கேள்வி தமிழர்கள் மனதில் எழுந்துள்ளது என்பதை இந்த மாநாடு இந்திய அரசுக்கு சுட்டிக்காட்டுகிறது.
எனவே, இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் மாறி, ஈழத்தமிழ் மக்கள் அரசியல் பொருளாரம், பண்பாட்டு உரிமைகளை பெற்றெடுத்து சமத்துவம், அமைதியும் நிறைந்த வாழ்வை மேற்கொள்ள இந்திய அரசு முழுமூச்சோடு செயல்பட வேண்டும்.
அந்த தீர்மானத்தின் இறுதியாக, இலங்கையில் உள்ள தமிழர்கள், தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு உரிமை வழங்க இந்திய அரசு, ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
இதை விட இந்திய அரசுக்கு வேறு என்ன அழுத்தத்தை கொடுக்க முடியும்? என்று எனக்குப் புரியவில்லை. இதுதான் சரியான அழுத்தம் என்று சொன்னால், அதை ஏற்றுக் கொண்டு இந்த தீர்மானத்தை மேலும் வலுவானதாக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஆனால், இந்த தீர்மானத்தை வைத்துக் கொண்டே இந்திய அரசுக்கு நம்மால் அழுத்தம் கொடுக்க முடியும். இந்த தீர்மானமே இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் தீர்மானம்தான் என்பதை திருமாவளவன் உணர்வார்.
மற்றவர்களும் இதை மிக நன்றாக உணர்வார்கள் என்று கருதுகிறேன். ஆகவே, இன்றைக்கு நிம்மதியான, இனிமையான வாழ்வு பெற இன்றைக்கு இடுகாட்டு சாம்பலைப் பூசிக் கொண்டிருப்பவர்களைப் போல இருக்கின்ற வாழ்க்கையில் இருந்து விடுபட வீரமணி மற்றும் நண்பர்கள் எல்லாம் எடுத்து சொன்னதைப் போல் இந்த மாநாட்டின் வெற்றி, இந்த மாநாட்டில் எவ்வளவு பேர் கூடினார்கள்? மாநாடு எத்தனை நாள் நடைபெற்றது? எவ்வளவு மணி நேரம் நடைபெற்றது? என்பது அல்ல. இந்த மாநாட்டினுடைய வெற்றி, உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் அறிந்து உணர வேண்டும்.
நாம் இந்த தீர்மானத்தின் மூலம் ஒவ்வொருவரும், தமிழ் ஆர்வம் உள்ள அத்தனை பேரும், ஈழத்தமிழர்கள்பால் அன்பு கொண்ட அத்தனை பேரும், இரக்கம் கொண்ட அத்தனை பேரும் அழுத்தம் கொடுத்து இந்த தீர்மானத்திற்கு வலு சேர்ப்பார்களேயானால், நாம் காணுகின்ற கனவு நிச்சயமாக நிறைவேறும்.
இலங்கையில் இருக்கும் அல்லல், உடனடியாக தீரும். ஒரே ஈழநாடு பெற வேண்டும் என்று கேட்டீர்களேயானால், அவர்களுக்கு சொல்லுகின்ற ஒரேயொரு சமாதானம் என்னவென்றால், முதலில் காயம்பட்டுக் கிடப்போரை, ரணத்தை, காயத்தை ஆற்ற அவர்களை உயிர் பிழைக்க முதலுதவி தேவைப்படுவதைப் போல, டெசோ மாநாட்டின் மூலமாக தேவையான முதலுதவிகளை எல்லாம் இலங்கை தமிழர்களுக்கு நாம் செய்ய வேண்டும். நாம் அவற்றை செய்யத் தொடங்கி இருக்கின்றோம்’’என்று பேசினார்.
இலங்கையில் காயப்பட்டுக் கிடப்போரின் ரணத்தை ஆற்ற முதலுதவி செய்யவேண்டும் - டெசோவில் கருணாநிதி
பதிந்தவர்:
தம்பியன்
14 August 2012
0 Responses to இலங்கையில் காயப்பட்டுக் கிடப்போரின் ரணத்தை ஆற்ற முதலுதவி செய்யவேண்டும் - டெசோவில் கருணாநிதி