Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிங்கள இனவெறி அரசின், தமிழினத்திற்கு எதிரான பெரும்கொடுமையை உலகறியச் செய்ய, தன்னை வருத்தி, கடந்த மூன்று வாரங்களாக அமைதிவழியில் உணவொறுத்துப் போராட்டம் நடத்திவரும், இளைஞன் சிவந்தன் கோபியின் போராட்டத்திற்கு பலம் சேர்க்கவேண்டியது அனைத்துத் தமிழர்களினதும் தலையாய கடமையாகும்.

தன் இனத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட, நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற இனஅழிப்புக் கொடுமைக்கு எதிராக, தாயகத்தில் சிங்களத்தால் மேற்கொள்ளப்படுகின்ற நில ஆக்கிரமிப்புக்கு எதிராக, சுயவிருப்புடன், தன்னிச்சையாய், தானே முன்னின்று போராட்டக்களம் ஒன்றை திறந்திருக்கின்ற அமைதிவழிப் போராளி சிவந்தன் கோபி பாராட்டுக்கும், தமிழினத்தின் நன்றிக்கும் உரியவர்.

யூலை மாதம் 22ம் திகதி, தனது உணவொறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்த அமைதிவழிப் போராளி சிவந்தன் கோபி, எதிர்வரும் ஓகஸ்ட் 12ம் திகதி தனது போராட்டத்தை நிறைவுசெய்ய உள்ளார்.

இந்நாளில், புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள், குறிப்பாக பிரித்தானியா வாழ் தமிழ்மக்கள் தமது முழுமையான ஆதரவை அவருக்கு வழங்குவதன்மூலம், அவரது போராட்டத்திற்கு பலம் சேர்க்க முன்வரவேண்டும்.

பல்லாயிரக்கணக்கில், அவரது போராட்டத்திடலில் திரள்வதன்மூலமும், சிவந்தன் கோபியின் போராட்டத்திற்கு ஆதரவான கவனயீர்ப்புச் செயற்பாடுகளை, தாம் வாழும் நாடுகளில் செய்வதன் ஊடாகவும், அவரது போராட்டத்தின் வீரியத்தை மேலும் வலுவேற்ற முடியும்.

சிவந்தன் கோபி முன்வைத்த ஐந்து அம்சக்கோரிக்கையில், தமிழினத்தின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி, சிங்களச் சிறையில் விசாரணை ஏதும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் உறவுகள் குறித்த கோரிக்கையும் ஒன்று. அவர்களின் விடுதலை குறித்தும், அவர்களின் பாதுகாப்புக் குறித்தும், அனைத்துலக அபய நிறுவனங்களின் கண்காணிப்பு குறித்தும், வலியுறுத்தி அவர் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்ற இந்நாட்களிலேயே, சிங்களச் சிறையில் மற்றுமொரு தமிழ் உறவான தில்ருக்சன் மரியதாஸின் உயிர் பிரிந்துள்ளது.

தமிழர்களின் நிலங்கள் பெருவீச்சில் கபளீகரம் செய்யப்படுகின்றன, அவை தடுத்து நிறுத்தப்படவேண்டும். போர்குற்றம், இனஅழிப்பு போன்றவற்றை விசாரிக்க அனைத்துலக சுயாதீன விசாரணைக்குழு அமைக்கப்படவேண்டும். போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, சிவந்தன் கோபி அவர்கள் மூட்டிவிட்டுள்ள இந்தப் போராட்டத்தீ, மேலும் பற்றிப் படரவேண்டும்.

கையறு நிலையிலுள்ள தாயக உறவுகளின் உள்ளத் தவிப்பைப் புரிந்துகொண்டு, புலம்பெயர் தமிழர்களே போராட முன்வரவேண்டும். போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கு பூரண ஆதரவை வழங்கவேண்டும்.

அமைதிவழிப் போராளி சிவந்தன் கோபியின் போராட்டம் வெல்லட்டும். அனைத்துத் தமிழர்களின் ஆத்மார்த்தமான ஆதரவு அந்தப் போராட்டத்திற்கு கிடைக்கட்டும். தமிழர்களாக வெல்வோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

தமிழர்நடுவம் - பிரான்ஸ்

0 Responses to பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகளே! உலகத் தமிழர்களே! சிவந்தன் கோபியின் போராட்டத்திற்குப் பலம் சேர்ப்போம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com