சென்னையில் கடந்த வாரம் கருணாநிதி நடத்திய ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு சிங்கள தேசியவாதிகளிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநாட்டிற்கான அறிவிப்பு வெளியான போது அதற்கெதிராக துள்ளத் தொடங்கிய சிங்களத் தேசியவாத சக்திகள் கடந்த வாரம் உச்சக்கட்ட வெறுப்பை வெளிக்காட்டத் தயங்கவில்லை.
இந்த மாநாடு சென்னையில் ஆரம்பமான போது கொழும்பில் இந்திய தூதரகத்திற்கு வெளியே சிங்களத் தேசியவாத அமைப்புகள் பேரணி நடத்தி இரா.சம்பந்தன் மற்றும் கருணாநிதியின் கொடும்பாவிகளை எரித்தனர்.
இந்தளவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இந்த மாநாட்டுக்கும் ஒரு தொடர்புமில்லை. அவரோ அவரது கட்சியோ இந்த மாநாட்டில் பங்கேற்கவுமில்லை.
டெசோ மீதான எதிர்பை வெறுப்பை எப்படித் தீர்க்கலாம் என்று தெரியாமல்தான் இரா.சம்பந்தனின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
டெசோவுடன் தொடர்புபடுத்துவதற்கு இரா.சம்பந்தன் ஒன்றும் தனிநாடு கோரவில்லை. தனி ஈழம் பற்றியே அவர் பேசுவதுமில்லை.
அவர் கேட்பதெல்லாம் பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் கௌரவமாக வாழக்கூடிய நீதியானதொரு அரசியல் தீர்வைத்தான்.
அது ஒருபுறத்திலிருக்க சென்னையில் நடந்த டெசோ மாநாட்டுக்கெதிராக கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தை அரசாங்கம் கட்டுப்படுத்த முனையவில்லை. ஏனென்றால் அது அதற்கு அரசாங்கத்தின் ஆசீர்வாதம் இருந்தது.
தெற்கில் எல்லாப் பக்கங்களிலிருந்தும் இந்த மாநாட்டிற்கெதிராக கண்டனக் குரல்களே ஒலித்தன.
இது சரியான அரசியல் பார்வை கொழும்பை மையமாகக்கொண்ட அரசியல் கட்சிகளிடம் இல்லை என்பதை வெளிப்படுத்தியது.
இது பற்றிக் கருத்து வெளியிட்டவர்கள் எல்லோருமே நாட்டைப் பிரிப்பதற்கான சதி என்றுதான் எம்பிக் குதித்தனரே தவிர யாராவது இந்த மாநாடு நடத்தப்படும் நிலை எப்படி உருவானது என்று சிந்திக்கவில்லை.
திமுக தலைவர் கருணாநிதி தமிழீழம் என்ற பிரச்சினையை அரசியல் காரணங்களுக்காக கையிலெடுத்திருக்கலாம். சர்ச்சைக்குரிய அந்த விவகாரம் சாதிதியமா? இல்லையா? என்ற கேள்வி இருக்கலாம்.
ஆனால் அவர் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து தமிழீழக் கோரிக்கையை முன்வைப்பதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது இலங்கை அரசாங்கமே.
போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன.
ஆனால் போர் முடிந்த பின்னர் தமிழர்களுக்குரிய அதிகாரப்பகிர்வை வழங்குவதாக, நிரந்தர அரசியல் தீர்வை கொடுப்பதாக கொடுத்த வாக்குறுதியை அரசாங்கமும் இன்னமும் நிறைவேற்றவே இல்லை.
ஏன் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலைக்கூட நடத்தாமல் அரசாங்கம் அதையும் தன் கைக்குள் வைத்திருக்கிறது.
வடக்கில் போர்க்கால இராணுவ நெருக்குவாரங்கள் தீரவில்லை. படைக்குவிப்பிலிருந்து வடக்கு கிழக்குப் பகுதிகள் விடுபடவில்லை.
இப்படியே தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளையோ அரசியல் பிரச்சினைகளையோ தீர்ப்பதற்கான எந்த முன்முயற்சிகளிலும் அரசாங்கம் ஈடுபடவில்லை.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் போர் முடிவுக்கு வந்தபோது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அவரது ஈழக்கனவையும் குழிதோண்டிப் புதைத்து விட்டதாக கூறிப் பெருமைப்பட்டது அரசாங்கம்.
இப்போது அதே அரசாங்கம் தமிழீழத்திற்கு உயிர்கொடுக்கப் பலர் முனைவதாக குற்றம் சாட்டியுள்ளது.
இது யாருடைய தவறினால் ஏற்பட்டது. டெசோ மாநாடு அல்லது இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு தனிநாடு ஒன்றுதான் தீர்வு என்று கூறுபவர்களின் தவறா? அல்லது இப்படிக் கோரவேண்டிய நிலைக்கு அவர்களைத் தள்ளிய அரசாங்கத்தின் தவறா?
தமிழ்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களை பற்றியெல்லாம் எமக்கு கவலையில்லை அவர்கள் யார் என்றும் தெரியாது இந்திய மத்திய அரசுதான எமக்கு முக்கியம் என்ற ஒருகட்டத்தில் கூறிய இலங்கை அரசாங்கம் இப்போது அதே தமிழ்நாட்டு அரசியல் வாதிகளின் பேரராட்டங்களைக் கண்டு கொதிக்கிறது கோபப்படுகிறது.
டெசோ மாநாடு பற்றி குணதாச அமரசேகர விமல் வீரவன்ச சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் மட்டும் துள்ளிக் குதிக்கவில்லை.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குருவிட்ட இராணுவ முகாமில் நிகழ்த்திய தனது உரையில் பெரும்பகுதியில் இதுபற்றியே புலம்பியுள்ளார்.
சுப்பிரமணிய சுவாமி போன்ற தமிழ்நாட்டில் அரசியல் கோமாளிகளாக மதிக்கப்படுகின்றவர்களைக் கொண்டுவந்து பேசவைத்துப் பெருமைப்பட்டது இலங்கை அரசாங்கம்.
ஆனால் யதார்த்தத்தை அது உணர மறுக்கிறது.
போருக்குப் பின்னர் செய்யவேண்டியதை நிறைவேற்றத் தவறிய விடயங்களே இன்று அரசாங்கத்தின் கழுத்தை நொிக்கும் பிரச்சினைகளாக மாறியுள்ளன.
தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்திருந்தால் கூட கருணாநிதியால் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியிருக்க முடியாது.
அவர் இப்படியொடு ஆயுதத்தை தனது நலன் கருதியேனும் கையில் எடுத்திருக்க முடியாது.
தவறு எங்கே என்பதை கொழும்பு இன்னமும் புரிந்துகொள்ளவில்லை. அப்படிப் புரிந்துகொள்வதற்கு சிங்களப் பெருந்தேசியவாத சிந்தனை இடம்கொடுக்கவில்லை.
போருக்குப் பிந்திய மூன்றாண்டுகளில் அரசியல் தீர்வுக்காக அரசாங்கம் எதையுமே செய்யவில்லை.
தமிழர்களுக்கு அடுத்து என்ன செய்யப்போகிறது அரசாங்கம் என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை.
இந்தக் கேள்விக்கான பதிலை வெளிவிவகார அமைச்சரிடம் கோரியதால் 73 வயதான பழுத்த இராஜதந்திரியான கல்யானந்த கொடகேயிடமிருந்து மலேசியாவுக்கான தூதுவர் என்ற பதவி வெறும் எட்டே மாதங்களில் பறிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்கியிருக்க வேண்டிய காலம் கடந்துசென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு இது நல்லதொரு உதாரணம்.
அமெரிக்கா இதையே பலமுறை கூறியுள்ளது. தமிழர்களுக்கான நியாயமான உரிமைகளை வழங்கி அவர்கள் கௌரவாக வாழும் நிலையை ஏற்படுத்த தவறும் ஒவ்வொரு கணமுமே இன்மேல் அரசுக்கு நெருக்கடியாகவே இருக்கும்.
சர்வதேச சமூகம் தமிழீழத்தை இலங்கை பிரிக்கப்படுவதை ஏற்காமலிருக்கலாம். ஆனால் அதற்காக தமிழர் பக்கமுள்ள நியாயங்கள் அனைத்தையும் நிராகரிப்பதாக அர்த்தமில்லை.
இலங்கை அரசாங்கம் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு காட்டும் தயக்கமே அதன் கழுத்தில் சுருக்குக் கயிறாக விழுகிறது.
இலங்கை அரசைப் பொறுத்தவரையில் டெசோ மாநாடு அதற்கு ஒரு எச்சரிக்கை சமிக்ஞைதான்.
எதிர்காலத்தில் தனிநாடு ஒன்றுதான் தீர்வு என்று தமிழர்கள் துணிந்து கூறும் நிலை ஒன்று உருவானால் அதற்கு பொறுப்பாக இலங்கை அரசாங்கத்தை தான் சர்வதேசம் கூண்டில் நிறுத்தும்.
ஹரிகரன்
0 Responses to மீண்டும் வலுப்பெறும் தனிநாட்டுக் கோரிக்கை!