திங்கட்கிழமை ஆப்கானின் மாநில போலிஸ் உயரதிகாரி ஒருவர் தலிபான் படையினரால் வித்தியாசமான ஒரு முறையில் கொல்லப் பட்டுள்ளார்.
தலிபான்கள் கழுதை ஒன்றில் வெடிகுண்டு ஒன்றைக் கட்டி கர்சடா எனும் நகரத்தில் உள்ள அரச அலுவலக வாயிலுக்கு அண்மையிலுள்ள பாலத்தில் கட்டி வைத்திருந்தனர்.
அவ்வேளை அப் பகுதியினூடாக வேலைக்கு வந்த போலிஸ் உயரதிகாரி குல் அஹ்மட் கழுதை மீது இருந்த குண்டு வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்ததுடன் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
குறித்த போலிஸ் அதிகாரி பயணித்த வாகனம் இப் பாலத்தைக் கடக்கையில் கழுதையில் கட்டப் பட்டிருந்த குண்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்யப் பட்டுள்ளது. இதில் அவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்தார். என AFP செய்தி ஸ்தாபனத்துக்கு அம்மாகாணத்தைச் சேர்ந்த பேச்சாளர் அப்துல்ஹை கைட்டிபி கூறியுள்ளார்.
கழுதை மீது குண்டுகள் வைத்து தாக்குதல் நடத்துவது ஆப்கானிஸ்தானில் மிக அரிது என்ற போதும் குறித்த இலக்குக்கு மிக அருகில் சென்று தாக்குதல் நடத்துவதற்கு கருவியாக அங்கு கழுதைகள் பயன்படுத்தப் படுகின்றன. கடந்த வருடம் நவம்பரில் வடக்கு ஆப்கானில் நிகழ்ந்த இது போன்ற ஒரு கழுதைக் குண்டு வெடிப்புத் தாக்குதலில் ஒரு போலிஸ் அதிகாரி உட்பட இருவர் பலியாகியும் 16 பேர் காயமடைந்தும் இருந்தனர்.
ஆப்கானிஸ்தானில் அரச படைகள் இரத்தம் சிந்தும் யுத்தத்தினை சுமார் ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக போரிட்டு வருகின்றது. இதில் அரச படைகளுக்கு உதவியாக 130 000 சர்வதேச படையினரும் அங்கு தங்கியிருந்து போரிட்டு வருகின்றனர்.
கழுதையில் கட்டப்பட்ட குண்டு வெடித்து ஆஃப்கான் போலிஸ் உயரதிகாரி மரணம்
பதிந்தவர்:
தம்பியன்
08 August 2012
0 Responses to கழுதையில் கட்டப்பட்ட குண்டு வெடித்து ஆஃப்கான் போலிஸ் உயரதிகாரி மரணம்