சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம் தமிழ் இளம் சமுதாயம் நீதியின்மேல் தாகம் கொண்டு நிற்கிறது என்பதற்கான உதாரணமாகிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவிப் பிரதமர்களில் ஒருவரான உருத்திராபதி சேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தினை முன்னிறுத்தியும் ஈழத்தமிழர்களுக்கான நீதியைக் கோரியும் ஒலிம்பிக் போட்டி இடம்பெற்று வரும் பிரித்தானிய மண்ணில் ஒலிம்பிக் தொடக்க நாள் முதல் சிவந்தன் அவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்.
ஒலிம்பிக் போட்டிகள் நிறைவுறும் நாளான நாளை ஞாயிற்றுக்கிமை இந்த உண்ணாநிலைப் போராட்டமும் நிறைவுறவுள்ளது.
இந்நிலையில் இவ்வுண்ணாநிலைப் போராட்டம் தொடர்பில் உதவிப் பிரதமர் உ.சேகர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவடிவம் :
சிவந்தனின் உண்ணாநோன்பு, இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் மேல் நடாத்தப்படுகின்ற இனஅழிப்புக்கு நீதிகோரும் அறப்போராட்டம்.
இந்த சத்திய வேள்வியில் ஜூலை 27முதல் ஆகஸ்ட் 12 வரை தன் உயிர்க்கு உறுதுணையான உணவினைச் சிவந்தன் உட்கொள்ள மறுத்த செயலானது எத்தனை தூரத்துக்குத் தமிழ் இளம் சமுதாயம் நீதியின்மேல் தாகம் கொண்டு நிற்கிறது என்பதற்கான உதாரணமாகிறது.
இயேசுவின் மலைப்பொழிவில் 'நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்' என்று கூறியது, நீண்டகாலமாக கிறிஸ்தவத்துடன் கட்டுப்பட்டுக் கிடக்கும் கதை எங்கள் கதை என்று உணரத் தோன்றுகின்றது.
நாங்கள் ஆன்மீகசக்தியே அல்லால் வேறு ஒன்றுமில்லை என்று சொன்ன முன்னாள் பிரித்தானியப் பிரதமர் மாகிரெட் தச்சரின் கூற்றை நினைவு கூர்ந்து சிவந்தனின் உண்ணாநோன்பும் ஒரு 'ஆன்மீகசக்தியே' என்பதனை உங்களுக்கு எடுத்துக் கூறவிரும்புகின்றேன்.
இப்பொழுது பட்டினியாய் இருப்போரே நீங்கள் பேறு பெற்றோர் ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள்'. இப்பொழுது அழுது கொண்டிருப்போரே நீங்கள் பேறுபெற்றோர் ஆதலால் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்' என்று கிறிஸ்து தந்த அந்த ஆன்மீக நம்பிக்கைதான் இன்று சிவந்தனை இந்த உண்ணாநோன்பில் நம்பிக்கை கொள்ள வைத்துள்ளது.
மகாத்மா காந்தி உண்ணா நோன்பை உலக அரசியலில் அறிமுகம் செய்தார் என்று பேசப்பட்டாலும் அதனை அவருக்கு முன்பே உலகிற்கு அறிமுகம் செய்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள் என்னும் தமிழ்ப் புனிதர் என்பதையும் கி பி 7ம் நூற்றாண்டில் பாடலிபுரத்தில் சமணர்களால் இடிக்கப்பட்ட சிவாலயம் மீண்டும் அவ்விடத்தில் நிறுவப்பட வேண்டுமென உலகின் முதல் உண்ணா நோன்பு பல்லவ அரசை நோக்கி நடாத்தப்பட்டது என்பதையும் இவ்விடத்தில் நினைவு கூர விரும்புகின்றேன்.
இது பெருமைக்காக அல்ல. தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்ல. சாத்வீகப் போராட்டங்கள் பலவற்றை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் என்பதை எடுத்துக்காட்டவே இதனைக் கூறவேண்டியுள்ளது.
அந்த வழியிலேயே நவீன அரசியலிலும் தியாகி திலீபனும், அன்னை பூபதியும் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்து எங்கள் மக்களின் சுதந்திர வாழ்வுக்கான மக்கள் சக்தியை எழும்படி கேட்டனர்.
2009ல் இலங்கை அரசாங்கம் தமிழர்களை இனஅழிப்புச் செய்த நேரத்தில், பிரித்தானியத் தலைவர்கள் எமது மக்களுக்கான பாதுகாப்புடன் கூடிய அமைதியை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக மட்டத்தில் முயற்சிப்போம் எனக் கொடுத்த நம்பிக்கை வாக்குறுதிகள் காற்றில் பறந்தன, எமது அமைதிவழியான போராட்டங்களின் தன்மைகளை, எமது மக்களின் உள்ளக் குமுறல்களை இந்த உலகம் உதாசீனம் செய்தது, ஆதலால் நாற்பதினாயிரம் முதல் நூறாயிரம் வரையிலான தமிழ் மக்கள் இனஅழிப்புக்கு உள்ளான வரலாற்றையே தமிழர்கள் கண்டனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இனஅழிப்பு குறித்த அனைத்துலக நீதிவிசாரணைகள் எதுவும் நடைபெறாத நிலையில், 'இனப்படுகொலை தொடர்பான சுயாதீன விசாரணை','தமிழர் பகுதிகளில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல்' மற்றும் 'நில அபகரிப்பை நிறுத்த வேண்டும்','தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்' என்பன உட்பட ஐந்து பிரதான கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாநோன்பை சிவந்தன் மேற்கொண்டுள்ளார்.
உண்மையில் ஒவ்வொரு தமிழனதும் இதய உணர்வின் புறவெளிப்பாடாகவே இந்த இளைஞனின் இந்த அறவழிப்போராட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. இலண்டன் 2012ஒலிம்பிக் உலக மக்களை இணைத்த நேரத்தில் கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும் தமிழ் மக்களின் நிலையை உலக மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் எடுத்துரைக்க இந்த உண்ணா நோன்பை இவ்விளைஞன் தன் உயிரைத் துச்சமென நினைந்து மேற்கொண்டுள்ளார்.
இவர் சுவிட்சிலாந்திலுள்ள ஐக்கியநாடுகள் சபைக்கு இலண்டனிலிருந்து நடந்து சென்று இதே கோரிக்கையினை கையளித்த உள்ள உறுதியையும் இந்நேரத்தில் நினைவு கூறுகின்றேன். அவரது அந்தப் போராட்டம் தமிழ் மக்களுக்கும், இளையோருக்கும் அந்த நேரத்தில் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தது என்பதே உண்மையாகும்.
இவரைப் போல் எத்தனையோ தமிழ் இளையவர்கள் தங்கள் இனத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், சுதந்திர வாழ்வு கிடைக்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களது உள்ளத்துடிப்புகளையும், உணர்வுகளையும் இந்த உலகம் தொடர்ந்து உதாசீனம் செய்வதானது உலகில் 'மனிதாபிமானம்' செத்துக்கொண்டிருக்கின்றதா? அல்லது செத்துவிட்டதா? என எண்ணத் தோன்றுகின்றது.
ஆயினும் தாங்கள் வாழும் நாடுகளின் மக்களின் நாளாந்த வாழ்வுக்கும் சட்டதிட்டங்களுக்கும் பங்கம் வராத வகையில் தங்கள் போராட்டங்களை நடாத்தும் உயர் அரசியல் கலாச்சாரம் கொண்டவர்களாகவும் இவ்விளையோர் உள்ளனர்.
இதனால் இவர்களின் இதய உணர்வையும் அவர்கள் உலக மக்கள் மீதும், உலக நிறுவனங்கள் மீதும், உலக நாடுகள் மீதும் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையையும் கவனத்தில் எடுத்து அவர்களின் மனித உரிமைக்கும், ஐனநாயகத்திற்கும், நல்லாட்சிக்கும் மேலான நம்பிக்கைகள் சிதைந்து போகாதவாறு செயற்படுங்கள் என மனிதநேய உணர்வுள்ள அனைத்து அரசாங்கங்களையும் வேண்டுகின்றோம்.
வேண்டுகோள் மேல் வேண்டுகோள் விடுத்துக் கொண்டு நிற்கும் நிலையில் தமிழர்கள் இல்லை. காரணம் இப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படாத ஒவ்வொரு நிமிடமும் இலங்கையின் தமிழின அழிப்பு நடவடிக்கைகள் பரந்து விரிந்து கொண்டே செல்கிறது.
சுருக்கமாகச் சொன்னால் இன்றைய நாகரிக அரசுக்கள் இனஅழிப்புக்குற்றத்தை அனுமதித்து நிற்கும் ஒரு அவலநிலையாகத்தான் இதனை உலகத் தமிழர்கள் பார்க்கின்றனர். இதனால் உலக ஒருமைப்பாடு,
மனிதநேயம், மனித உரிமைகள் மற்றும் நல்லாட்சி தத்துவங்கள் எல்லாமே சிறிலங்காவால் சிதறடிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. இதனை உலக அரசியல் நெருக்கடியாகக் கருதாவிட்டால் தமிழினத்தை அழிக்க இலங்கை கையாண்ட, கையாளுகின்ற இந்தச் செயற்பாடுகள் உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் நிரந்தர உதாரணங்களாக மாறிவிடும்.
எனவே எமது மக்களின் பெயராலும், உலகில் சமாதானத்தின் மேலும், மனித உரிமைகள் மேலும், நல்லாட்சியின் மேலும் அக்கறை உள்ள ஒவ்வொருவரையும் சிவந்தன் விடுத்துள்ள கோரிக்கைகளுக்கு உடன் துணைநிற்குமாறு பணிவன்பாக வேண்டுகின்றோம்.
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்' என்ற இயேசுவின் வார்த்தைகள் வழி எமது மக்களுக்கும் மண்ணுக்கும் பாதுகாப்பான அமைதியை ஏற்படுத்துங்கள் என உலகினை வேண்டிநிற்கின்றேன்.
உண்ணா நோன்பினை நடாத்த அனுமதித்த இந்நாட்டின் ஜனநாயகம் போற்றும் பண்புக்கும் உண்ணா நோன்பில் உங்களை பல்வேறு நிலைகளிலும் இணைத்துக்கொண்டிருக்கின்ற அனைவருக்கும், எம்மக்கள் துன்பத்தைத் தன் துன்பமாகவே தாங்கி வாழும் சிவந்தனுக்கும் எனது இதய நன்றிகள்.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவிப் பிரதமர் உருத்திராபதி சேகர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதியின்மேல் தாகம் கொண்டு நிற்கும் சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம்!
பதிந்தவர்:
தம்பியன்
11 August 2012
0 Responses to நீதியின்மேல் தாகம் கொண்டு நிற்கும் சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம்!