வட கிழக்கு மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் எனும் பீதியை அதிகரிக்கும் வகையில் வதந்திகளை பரப்பிய குற்றச்சாட்டில் 5 பேர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் எஸ்.எம்.எஸ் தகவல்களை அனுப்பியது தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்டு 15ம் திகதி முதல் பெங்களூரிலிருந்து 16,000 வடகிழக்கு மாநில மக்கள் இதுவரை வெளியேறியுள்ளனர். எனினும் தற்போதே முதலாவது கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் பெங்களூரில் மூன்று இடங்களில் அசாம் மாநில மக்களை குறிவைத்து தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. அசாமை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் வேலை முடித்து வந்த வேளை கன்னட இளைஞர்கள் சிலர் அவர்கள் மீது குளிர்பான போத்தல்களையும் கற்களையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதே போன்று மத்திய பெங்களூர் பகுதிலும் 3 வடகிழக்கு மாநில மக்கள் மீது திடீர் தாக்குதல் நடந்துள்ளது. சந்தையில் காய்கறி வாங்கிக்கொண்டிருந்த மணிப்பூரை சேர்ந்த மூவரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மூவரை கைது செய்துள்ளதாக பெங்களூர் துனை முதல்வர் ஆர்.அசோகா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவங்களுடன் தொடர்புடையதாக சிலரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். வெறும் வதந்திதான். பெங்களூரை விட்டு வெளியேறாதீர்கள் என பிரதமர் மன்மோகன் சிங் உட்பட மாநில அரசு தலைவர்கள் பகிரங்க கோரிக்கை விடுத்து வருவதுடன், வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்துள்ள நேலையில் நேற்று இத்தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்களால் அங்கு வாழும் வடகிழக்கு மாநில மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.
இதேவேளை நாட்டின் பிற பகுதிகளில் வாழும் வடகிழக்கு மக்கள் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கூடுதல் பாதுகாப்புக்காக மத்திய காவற்துறையினர் 600 பேர் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, இரவு பகலாக ரோந்து பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. எனினும் அங்கிருந்து வடகிழக்கு மாநிலத்தவர்கள் வெளியேறுவதும் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது. நேற்று மட்டும் 3 சிறப்பு ரயில்களில் 10,600 பேர் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இன்று காலை மைசூர், குடகு பகுதியிகளில் இருந்தும் அசாம் இளைஞர்கள் பலர் பெங்களூர் ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். இவர்கள் விருப்பப்படி பாதுகாப்பாக அசாம் செல்வதற்காக கூடுதல் ரயில்களை இயக்க மத்திய மாநில அரசுக்கள் ஏற்பாடுகள் செய்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவை சந்தித்த கர்நாடக முதல்வர் ஷெட்டர் நீண்ட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதுடன், பெங்களூரில் உள்ள வட மாநில மக்கள் தாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என நம்பிக்கை வருவதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என கலந்துரையாடியுள்ளார்.
பெங்களூரில், 240,000 வடகிழக்கு மாநிலத்தவர்கள் வசித்து வருவதுடன், கர்நாடகாவின் பிற பகுதிகளில் 100,000 வடகிழக்கு மக்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலனவர்கள் மாணவர்கள், இளைஞர்களாக இருப்பதுடன், அழகுபடுத்தல் நிலையங்கள், ஹோட்டல்களில் பணிபுரிவோராகவும், செக்யூரிட்டி காவலர்களாக பணிபுரிவோராக உள்ளனர்.
கர்நாடகாவில் வேகமாக பரவும் வதந்தியை அடுத்து, பல்க் எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ் அனுப்புவது 15 நாடுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளன. சென்னை, கோயம்பூத்தூர், வதோதரா, மும்பை ஆகிய இடங்களிலிருந்தும் வட கிழக்கு மாநிலத்தவர்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
பெங்களூரிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடகிழக்கு மாநிலத்தவர்களுடன் புறப்பட்ட முதலாவது சிறப்பு ரயில் இன்று ஹைஹாத்தி ரயில் நிலையத்தை வந்தடைந்துள்ளதாகவும், இன்று இரவுக்குள் மேலும் சில சிறப்பு ரயில்கள் வந்தடைய இருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Responses to வதந்தி பரப்பிய குற்றச்சாட்டில் பெங்களூரில் ஐவர் கைது!