முதல்-அமைச்சர் ஜெயலலிதா காந்தி சிலை பராமரிக்க ரூ.12 லட்சமும் காமராஜர் மணிமண்டபத்தை புதுப்பிக்க ரூ.37 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க பாரதம் பெற்ற தவப்புதல்வர்களில் ஒருவரான மகாத்மா காந்தியின் நினைவினை போற்றும் வகையில் சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலை மற்றும் அதன் சுற்றுப்புறத்தை பராமரிக்க 11 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இதன்படி, மகாத்மா காந்தியடிகளின் சிலையின் பீடத்தில் தற்போதுள்ள சலவை கற்கள் அகற்றப்பட்டு, புதிய சலவை கற்கள் பொருத்தப்படும். மேலும், சிலையின் பீடத்திற்கு மேலுள்ள சுவற்றினை மறு சீரமைப்பது, சிலையின் பின்புறம் துருப்பிடிக்காத இரும்பில் கைப்பிடியுடன் கூடிய ஏணி அமைப்பது, கூடுதலாக மின் விளக்குகள் அமைப்பது, சிலையை சுற்றி பூந்தொட்டிகள் வைப்பது, சிலையிலுள்ள சிறு சிறு குறைபாடுகளை சரிசெய்து வர்ணம் பூசுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.
தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதையும் தாண்டி தான் பெறாத இன்பம் பிறர் யாவரும் பெறவேண்டும் என்ற பெருநோக்கோடு தமிழகத்தில் கல்விக் கண்ணைத் திறந்து வைத்த பெருந்தலைவர் காமராசர் நினைவினை போற்றும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரியில் அமைந்துள்ள மணிமண்டபத்தை புதுப்பிக்க 37 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இதன்படி, பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபத்தில் தற்போதுள்ள சுவர் மற்றும் தரைத்தளத்தில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் அகற்றப் படுதல், புதியதாக சிமெண்ட் பூசுதல், கிரில் பணிகள், ஸ்டீலால் ஆன கைப்பிடிகள் அமைக்கும் பணிகள் 28 லட் சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், தண்ணீர் வசதிகளுடன் கூடிய தோட்டம் 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மின் பணிகள் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், துருபிடிக்காத இரும்பில் ஆன சட்டம் மற்றும் தேக்கு மரத்திலான அலங்காரப் பணிகள் 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் இதர செலவினங்கள் 3 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 37 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காந்தி சிலை, காமராஜர் மணிமண்டபத்தை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு: ஜெயலலிதா
பதிந்தவர்:
தம்பியன்
05 August 2012
0 Responses to காந்தி சிலை, காமராஜர் மணிமண்டபத்தை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு: ஜெயலலிதா