Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மண்ணில் வாழும் மக்களுக்கு மழை தேவை என்பதற்காக மேகங்கள் திரள்வதில்லை.

ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இந்தியா இலங்கைக்கு வருவதில்லை.

சீன மழை பொழிந்து, இலங்கையின் ஆறுகளும், குளங்களும் நிரம்பி விடக் கூடாது என்பதற்காக, முதலீட்டு ஆதிக்க மழை பொழிய, இந்திய மேகங்கள், இலங்கையின் வான் பரப்பை ஆக்கிரமிக்க முயல்கிறது.

சிங்களத்தால் வரண்டு போயுள்ளன. தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்களில், 13 ஆவது திருத்தச் சட்டம் என்கிற சிறு மழை பொழிந்தாலே போதுமென நினைக்கிறது பாரத தேசம்.

பிரிந்த தாயக மண்ணில் மாகாண சபைக் குளங்களை நிர்மாணித்தாலும், கொழும்பிலுள்ள மத்திய நீரூற்றில் இருந்து ஓடிவரும் பேராறு, தமிழர் தாயக எல்லைகளில் முடங்கி விடுகிறது.
ஆனாலும் நீரற்ற மாகாண சபைகளில் காணி, காவல் துறை மற்றும் நிதி உரிமை என்கிற மீன் பிடிக்க, தமிழ் கொக்குகள் சில காத்திருக்கின்றன.

இந்திய மேகங்கள் கொழும்பில் பெய்யும் மழை, வட-கிழக்கில் பெய்வதில்லை.
காத்திருக்கும் தமிழ் கொக்குகளும், இந்திய மேகங்கள் இல்லாவிட்டால், தமிழர் தாயகத்தில் மழை பொழியாதென்கிற கற்பனையில் வாழ்வதை சரியென்று நியாயப்படுத்துகின்றன.

அரியாலையில் அடிக்கல் நாட்டிய இந்திய மேகங்கள் வடகிழக்கில் 50,000 வீடுகளைக் கட்டித்தருமென இந்த தமிழ் கொக்குகள் வாடியபடி காத்திருக்கின்றன.

இந்நிலையில் சீன மழையால் புத்தெழுச்சி பெற்றிருக்கும் சிங்களம், வடக்கில் சிங்களக் குடியேற்றப் பயிர்களை நாட்ட ஆரம்பித்துள்ளன.
பேரினவாதப் பயிர்ச் செய்கைக்காக, தமிழ் பேசும் மக்களின் பெருமளவு நிலங்களை சிங்களம் ஆக்கிரமிக்கிறது.
பயிர்ச்செய்கையைக் கண்காணிக்க ஆங்காங்கே காவல் நிலையங்களும், படைத் தளங்களும், புத்தர் கோவில்களும் நிர்மாணிக்கப்படுகின்றன.
இந்திய பிராந்திய ஆதிக்க மேகங்களுக்கு இது பற்றிக் கவலையில்லை.

சொந்த நிலத்தில் பயிர் செய்ய விரும்பும் தமிழ் மக்கள், நில ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போராட்டங்களை நடாத்தினாலும், வரண்டு போன வட மாகாண சபைக்காகப் போராடுங்களென்று இந்தியாவும், அமெரிக்காவும் தமிழ் மக்களை வற்புறுத்துகின்றன.

கொழும்புப் பெரிய குளம், வட-கிழக்கு மண்ணோடு தனது நீர் வளங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பாது என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை.

அரசியலமைப்பை மாற்றாமல், எந்தப் பங்கீடும் நடைபெறாது என்பது தான் உண்மை.

'வாய்க்கால் வழியோடும் நீர் புல்லுக்குமாங்கே பொசியும்' என்பது போலான அதிகாரப் பரலராக்கத்தை தமிழ் மக்கள் ஏற்கவில்லை.

இவையனைத்தையும் தெளிவாக புரிந்து வைத்துள்ள இந்திய மேகங்கள், இம்மாதம் 108 நிறுவனங்களோடு, கொழும்பில் கூடுவதாக வானிலைச் செய்திகள் கூறுகின்றன.

முழுமையான சீபா'[CEPA] என்கிற முதலீட்டு வானாதிக்கத்தை நிகழ்த்த முடியாவிட்டாலும், 'முயன்று பார்ப்போம்' என்று வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையில் கொழும்பில் களமிறங்குகின்றது இந்தியா.

கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தத்தை இணைக்குமென்று, தேர்தல் பரப்புரைகளில் பொய் சொல்லும் தமிழ் கொக்குகள், இந்தியாவின் முதலீட்டு ஆதிக்கம், வடகிழக்கில் மாதம் மும்மாரி பொழியச் செய்யுமென்கிற வியாக்கியானத்தை முன் வைக்கலாம்.

கொழும்பில் கூடும் இந்திய கருமேகங்கள், மனித உரிமைப் பேரவையில் யூ.பீ.ஆர் [UPR]ஊடாக இடி முழக்கத்தை ஏற்படுத்துவோமென அச்சுறுத்தினாலும் ஆச்சரியப்பட முடியாது.

வானில் தோன்றும் இடி முழக்கங்களும், மின்னல்களும், மழை பொழிவதற்கான அறிகுறிகள் என்பது அறிவியல் உண்மை.
ஆனாலும், மேகங்களைக் கலைக்கும் இராஐதந்திர உத்தியில் நிபுணத்துவம் பெற்றுள்ள சிங்களம், இந்தியக் கருமேகங்களை எவ்வாறு விரட்டியடிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்தது பார்க்க வேண்டும்.

கொழும்பின் திறைசேரி வாவியின் நீர் மட்டம் குறைவடைந்து செல்வதனால், மட்டுப்படுத்தப்பட்ட அளவில், இந்தியாவின் முதலீட்டு வருகையை இலங்கை அனுமதிக்கலாம்.
இருப்பினும், திறைசேரி வாவியை, இந்தியா முழுமையாக ஆக்கிரமிக்க இலங்கை அனுமதிக்காது என்கிற விடயத்தையும் கவனிக்க வேண்டும்.

தமிழர் உரிமை குறித்துப் பேசாத சீனா, பாகிஸ்தான், ஈரான் போன்றவற்றின் முதலீட்டு மேகங்கள் இலங்கையில் கடன் மழை பொழிவதையே மகிந்த ஆட்சி விரும்புகிறது.

ஆகவே, இம்மும்மூர்த்திகள் போன்று, தாமும் இன முரண்பாட்டின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்காமல், சிங்கள தேசத்தோடு புதிய உறவொன்றினை ஏற்படுத்த முடியுமாவென்று இந்தியா முயற்சித்துப் பார்க்கிறது.

சர்வதேசத்தை அணுகாமல், மகிந்தரின் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்குள் செல்லுங்களென்று, இந்தியாவின் உத்தியோகப்பூர்வமான தூதுவர் அசோக் கே.காந்தா கூட்டமைப்பினரிடம் வலியுறுத்திய விடயம், இந்தியாவின் புதிய போக்கினை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

ஆகவே, வல்லரசு மேகங்கள் இலங்கை வான்பரப்பில் மோதும் சாத்தியப்பாடுகள் அதிகம் தென்படுவதால் சிங்களப் பேரினவாதத்தின் தீவிரமான பக்கங்கள், எத்தகைய பாதையைத் தேர்ந்தெடுக்கும் என்பதைi தமிழ் மக்கள் அவதானிக்க வேண்டும்.

இம்மோதல்களே, விடுதலைக்கான முதல் வாசற் கதவை திறந்து விடலாம்.

0 Responses to இந்திய மேகங்களும் தமிழ் கொக்குகளும்: இதயச்சந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com