மரண தண்டனைக்கு எதிரான 'இப்படிக்கு தோழர்.செங்கொடி' ஆவண படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் 19.08.2012 அன்று நடைபெற்றது. தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். ஆவணப்படத்தின் சிடியை திரைப்பட நடிகர் சத்யராஜ் வெளியிட, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அதனை பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ்,
பொதுவாக ஒரு சினிமா நடிகரை கூட்டத்தில் கடைசியாக பேச வைப்பார்கள். ஏன் என்றால் அந்தக் கூட்டம் கலைந்து போகாமல் இருப்பதற்காக. ஆனால் இந்தக் கூட்டத்தில் அப்படி செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது நடிகரைப் பார்க்க கூடிய கூட்டம் அல்ல. இது முத்துக்குமாரின் தியாகத்தை புரிந்துகொண்ட கூட்டம். செங்கொடியின் தியாயத்தை புரிந்து கொண்ட கூட்டம். மாவீரன் பிரபாகரனின் தியாகத்தை புரிந்துகொண்ட கூட்டம்.
என்னுடைய பேர் சத்யராஜ். சத்யராஜ் என்பதே சமஸ்கிருத வார்த்தைதான் அதுவே எனக்கு அவமானமாக இருக்கிறது. வேறு வழியில்லை வச்சுக்கிட்டோம். ஒரு படம் எடுத்தவுடனேயே அதை பிரத்தியேக காட்சிகளை பார்த்துவிட்டு வெளியே வரும்போது, ஒரு மைக்கை பிடித்துக்கொண்டு படம் எப்படி இருந்தது என்று கேட்பார்கள். அதில் தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே அதிகமாக பொய் பேசியவன் நானாகத்தான் இருப்பேன். அவ்வளவு ஒரு கேவலமான ஒரு படத்தை, இப்படி ஒரு படமே பார்த்ததில்லை. எப்படி இந்த சீனை எடுத்தீங்க. அடடா சூப்பர் என்று பாராட்டுவேன். மிகப் பெரிய நடிப்பை நான் பிரிவியூ தியேட்டர் வாச-ல் நடித்துள்ளேன்.
ஆனால், இந்தப் படத்தை பார்க்கும்போது, மணியரசன் அவர்கள், அற்புதம்மாள் அவர்கள் எல்லாம் ஒரு கோணத்தில் பார்ப்பீர்கள். நான் என்ன கோணத்தில் பார்ப்பேன் என்றால், நான் ஒரு சினிமாகாரன் என்ற முறையில் இந்தப் படத்தில் பணியாற்றி தொழில்நுட்ப கலைஞர்களை, இயக்குநர், இசையமைப்பாளர், பாடல் எழுதியவர்களை எப்படி பாராட்டலாம். சினிமா என்ற கதை வடிவத்தில் எப்படி பாராட்டலாம் என்று பார்த்தேன். எனக்கு எந்தப் பாயிண்டும் கிடைக்கவில்லை. ஏன் என்றால் எனக்கு அங்கு செங்கொடியின் தியாகம் மட்டும்தான் தெரிகிறது. உங்களுடைய உழைப்பு எதுவும் என் கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் சினிமாவுக்குள் இருக்கிற எனக்கு எதுவும் தெரியவில்லை. சினிமாவுக்கு வெளியே இருக்கிற மணியரசன் அவர்களுக்கு தெரிகிறது. அதுதான் இந்தப் படத்தினுடைய வெற்றி.
ஏதோ ஒரு சினிமாக்காரன் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு வருவதை மிகப்பெரிய வெற்றி என்று பேசினார்கள். இதுஒரு பெரிய விஷயம் அல்ல. இருக்கலாம். சர்க்கரையே இல்லாத ஊருக்கு இலுப்பப்பூ சர்க்கரை என்று சொல்வார்களே அதுபோல. களத்தில் இறங்கி போராடுகிற ஒரு களப்போராளியாக இருக்க வேண்டும். அப்படி இல்லை. அப்படி ஒரு தைரியம் உண்மையிலேயே இல்லை. சூழ்நிலை, சிறைக்குப் போக தயார்தான், சினிமா சூட்டிங் இருக்கு, கால்சீட், நான் போகலைன்னா அங்கு படம் எடுக்கிற 10 பேர் பொழப்பு கெட்டுப்போயிடும் என்று சொல்லுவதெல்லாம் சும்மா. ஏன் 4 படம் வேண்டாம் என்று விட்டுவிட்டு போராட வேண்டியதுதானே என்ன கெட்டுப்போய்விட்டது. அப்போ சுயநலம்.
களப்போராளிகளின் பின்னாடியாவது வந்து நிற்க வேண்டும். அதுவும் செய்யவில்லை என்றால், தமிழனாக இருப்பதற்கு லாயிக்கில்லை.
முத்துக்குமார், செங்கொடி தியாகத்திற்கு நாம் எல்லோரும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். நாம் எல்லோரும் குற்றவாளிகள்தான். தீக்குளிக்க ஏன் அவர்கள் ஆளானார்கள் என்றால் மிகப்பெரிய எழுச்சி தமிழத்தில் உருவாகவில்லை என்பதுதான் உண்மை. ஈழப்போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது லண்டனில் இரண்டரை லட்சம் பேர் ஊர்வலம் போனார்கள். பல லட்சம் பேர் உள்ள தமிழகத்தில் அதுபோல் ஏன் நடத்தமுடியவில்லை. முத்துக்குமார், செங்கொடி தியாகத்த்துக்காவது பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தண்டனையை ரத்து செய்யப்பட வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மகிழ்ச்சியான நாள் எதுவென்றால் அந்த மூன்று பேரும் விடுதலை ஆன நாளாகத்தான் இருக்கும்.
இப்படிக்கு செங்கொடி ஒரு அற்புதமான படம். இருளர் சமுதாயத்தின் அவலத்தை அழகாக இயக்குநர் சொல்-யிருக்கிறார். இருளர் சமுதாயத்தின் அவலத்தை சொல்வதற்காகவே தனியாக ஒரு படம் எடுக்கலாம். இருப்பினும், செங்கொடி என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு இருளர் சமுதாயத்தின் அவலம், ஈழவிடுதலைக்கு ஆதரவு, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதையும் ஆழமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன்.
0 Responses to நாம் எல்லோரும் குற்றவாளிகள்தான்! நடிகர் சத்யராஜ் பேச்சு!