ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் சுவிசின் பதினேழு மாநிலங்களைச் சென்றடைந்து, 1110 கிலோமீற்றர் தூரத்தினைக் கடந்துள்ளது.
விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணத்தை மேற்கொண்ட ஈழப்பற்றாளன் வைகுந்தன் சுவிசின் சுதந்திர நாளன்று யெனீவாவில் தொடங்கி லவ்சான், பிறைபூர்க், பேர்ன், சொலத்தூன், பாசல்சட், பாசல்லான்ட், ஆர்காவ், லுட்சர்ன், சுக், சுவீற்ஸ், ஊரி, கிளாறவுஸ், செங்காளன், துர்க்கா, சப்கவுசன், சூரிச் ஆகிய மாநிலங்களையும் பீல், லங்கந்தால், கின்வீல், றப்பர்ஸ்வீல் ஆகிய பிரதேசங்களையும் கடந்து சென்று சாதனை படைத்துள்ளது.
அத்துடன், 1110 கிலோ மீற்றர் தூரத்தினையும் கடந்து சுவிஸ் தமிழர் இல்லத்தால் நடத்தப்படும் தமிழீழக் கிண்ணத்துக்கான விளையாட்டு விழாத் தொடக்க நாளில், அதாவது, நேற்று நிறைவடைந்தது.
வின்ரத்தூரில் விளையாட்டு விழாத் தொடக்கநாளில் மாலை 7.00 மணிக்கு வந்து சேர்ந்த வைகுந்தனை தமிழ்காட் உறுப்பினர்கள் தேசியக் கொடியுடன் மைதானத்திற்கு வெளியில் இருந்தே அழைத்து வந்ததைத் தொடர்ந்து, விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் கரகோசம் எழுப்பி பரிசளிப்பு மையத்திற்கு அழைத்து மதிப்பளித்தனர்.
எஸ். வீ. ஆர், பாமினி, நிலாரசிகை ஆகிய இருவரும் கவிமழையால் வாழ்த்துத் தெரிவித்தனர். தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் ரகுபதியால் பதக்கம் அணிவிக்கப்பட்டு, நினைவுப் பரிசும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.
ஈழத்தமிழரவையின் உறுப்பினரும், தமிழரின் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்து வருபருமான அனோர், கோரிக்கைகள் அடங்கிய படிவத்தில் அவரால் பெறப்பட்ட நூற்றுக்கும் அதிகமான கையொப்பங்களை வைகுந்தனிடம் வழங்கி வாழ்த்தினார்.
மைதானத்தில் கோரிக்கைகள் அடங்கிய படிவத்தில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கையிலும் சிலர் தீவிரமாக ஈடுபட்டனர். இன்றும் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை தொடரவுள்ளது.
லண்டனில் உலகத்தை விழிக்கச் செய்வதற்காக ஈழ உணர்வாளன் சிவந்தனால் மேற்கொள்ளப்பட்ட உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்தே ஈழப்பற்றாளன் வைகுந்தன் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
அதுபற்றி வைகுந்தன் தெரிவிக்கையில், புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்தே தமிழர் தங்களின் விடுதலைக்காகப் போராட வெண்டும். ஒருவர் வழிமுறையொன்றைக் கடைப்பிடித்தால் அடுத்தவர் இன்னொரு வழிமுறையைக் கடைப்பிடித்து, தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்காகப் போராட வேண்டும்.
அந்த எண்ணத்தில் தான் சிவந்தன் ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்த போது அதற்கு ஆதரவாக நான் மிதிவண்டிப் பயணத்தைத் தொடங்கினேன்.
இது போன்ற சிந்தனைகள் ஏனையவர்களிடமும் வருவது தமிழரின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக்கும் எனத் தெரிவித்தார்.
சுவிசின் பதினேழு மாநிலங்களைக் கடந்த விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம்!
பதிந்தவர்:
தம்பியன்
12 August 2012
0 Responses to சுவிசின் பதினேழு மாநிலங்களைக் கடந்த விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம்!