Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்க இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அணு உலை எதிர்ப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று நேற்று திங்கட்கிழமை, சென்னையில் இடம்பெற்றது.

இந்த போராட்டத்துக்கு ம.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி, மற்றும் தமிழர்கள் கூட்டமைப்பு, தமிழ் தேசிய விடுதலை இயக்கம் உட்பட மீனவர்கள் சங்கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வைகோ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு; வைகோ, நெடுமாறன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது
 
கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி சென்னையில் சட்டசபையை முற்றுகையிட முயன்ற பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறுவித போராட்டங்களை நடத்தி வரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் நேற்று சட்டப்பேரவையை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர்.

இந்தப் போராட்டத்தை மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், உலகத் தமிழர் பேரமைப்பு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இயக்கங்கள் முன்னெடுக்கும் என்றும் அறிவித்திருந்தன.

இதைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர், மேலும் சென்னைக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்டு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் பலர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேபோன்று, பல்வேறு மாவட்டங்களில் இருந்து சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்துக்காக ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் புறப்பட்டவர்களும் அந்த மாவட்ட எல்லைகளிலும் ரயில் நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

தடைகளை மீறி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மண்டபத்தில் கூடிய ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இதன் பிறகு எழும்பூர் மண்டபத்திலிருந்து சட்டசபையை முற்றுகையிட பேரணியாக அனைவரும் செல்ல முயற்சித்த போதே பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
1800 பேர் கைது! மாலையில் அனைவரும் விடுதலை!
போராட்டம் தொடங்கி 1 மணி நேரம் கூடங்குளம் அணு மின்நிலையத்தை அனுமதித்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைவரும் கோஷம் போட்டனர்.

பின்னர் கோட்டையை முற்றுகையிட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக செல்ல முயன்றனர்.

ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை என்று கூறிய பொலிஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, கொளத்தூர் மணி, கணேசமூர்த்தி எம்.பி., தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன், அகில இந்திய மீனவர் சங்க செய்தி தொடர்பாளர் நாஞ்சில் ரவி, பா.ம.க. மற்றும் 14 அமைப்புகளை சேர்ந்த 1,800 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களை அருகே உள்ள சமூக நலக்கூடத்தில் தங்கவைத்து, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது கூறியதாவது:-

கூடங்குளம் பகுதியில் அணுஉலை அமைக்க திட்டமிட்டது முதல் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட போராட்டத்துக்கு வந்த அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவே போராட்டம் வெற்றி அடைந்து விட்டதற்கு உதாரணம் என்று வைகோ கூறினார்.

0 Responses to கூடங்குளத்திலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்! வைகோ, நெடுமாறன் உட்பட்ட 1800 பேர் கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com