Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், வரும் நவம்பர் முதலாம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்த பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில், 99 நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் சிறிலங்காவிடம் எழுப்பவுள்ள கேள்விகளை பல நாடுகள் முன்கூட்டியே தெரியப்படுத்தியுள்ளன.

சிறிலங்காவிடம் முன்கூட்டியே கேள்விகளை எழுப்பியுள்ள நாடுகளில் அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, ஸ்பெய்ன், கனடா, டென்மார்க், மெக்சிகோ, செக் குடியரசு, நெதர்லாந்து போன்ற நாடுகள் அடங்கியுள்ளன.

99 நாடுகளில் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளனர்.

ஒவ்வொரு நாட்டுக்கும் 72 செக்கன்கள் மட்டுமே உரையாற்ற அனுமதி அளிக்கப்படும்.

சிறிலங்கா தொடர்பான அறிக்கை மீதான தீர்மானம் வரும் நவம்பர் 5ம் நாள் வாக்கெடுப்புக்கு விடப்படும்.

வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு காலதாமதம் ஏற்படுவது ஏன் என்றும், 2008 பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றுவதாக உறுதியளித்த சாட்சிகள், பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கும் சட்டமூலத்தின் நிலை என்ன என்றும் அமெரிக்கா கேள்விகளை எழுப்பியுள்ளது.

அத்துடன், சனல் 4 காணொளி பற்றிய விசாரணை, திருகோணமலையில் 5 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை, மூதூரில் அக்சன் பெய்ம் பணியாளர்கள் 17 பேரின் படுகொலைகள் பற்றிய விசாரணை, பொத்துவிலில் 10 பணியாளர்களின் படுகொலை, லசந்த விக்கிரமதுங்க படுகொலை, பிரகீத் எக்னெலிகொட கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் குறித்தும் அமெரிக்கா கேள்விகளை எழுப்பியுள்ளது.

போர் முடிந்து மூன்று ஆண்டுகளாகி விட்ட நிலையிலும், ஊடகவியலாளர்களும், அரசசார்பற்ற நிறுவனங்களும், சிறிலங்கா அரசை விமர்சிப்போரும், அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது குறித்தும் அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்கான செயற்திட்டத்தில், ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் உள்ளடக்கப்படாததற்கான காரணம், அவ்வாறு உள்ளடக்கப்படாத பரிந்துரைகளின் நிலை, அவற்றை நடைமுறைப்படுத்தப்படுவதற்கான காலஎல்லை, என்பன குறித்தும் அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.

போர் இடம்பெற்ற பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் கல்வி, நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் மொழி உரிமைகளை பாதுகாக்க சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் சீனா விளக்கம் கோரியுள்ளது.

போரின் போது அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு சுதந்திரமான விசாரணைகளின் மூலம் சிறிலங்கா அரசு எப்போது பொறுப்புக் கூறப் போகிறது என்று கனடா கேள்வி எழுப்பியுள்ளது.

அதேவேளை, மெனிக்பாம் முகாமை மூடிவிட்டு, இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தாதது குறித்து கனடா கேள்வி எழுப்பியது.

அதிகாரப்பகிர்வு மற்றும் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் ஆகியன குறித்தும் கனடா கேள்விகளை எழுப்பியுள்ளது.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக, விசாரிக்க சிறிலங்கா இராணுவம் நியமித்த விசாரணை நீதிமன்றத்தின் விசாரணையின் நிலை என்ன என்று பிரித்தானியா கேள்வி எழுப்பியுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to ஜெனிவா கூட்டத்தில் சிறிலங்காவிடம் கேள்வி எழுப்பக் காத்திருக்கும் 99 நாடுகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com